நிசப்த சங்கீதம் | ஜீ.ஏ.பிரபா

 நிசப்த சங்கீதம் | ஜீ.ஏ.பிரபா

நீயென தின்னுயிர் கண்ணம்மா
எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்

“வக்ர துண்ட மாகா காய
சூர்யகோடி சமப் ப்ரப நிர்விக்னம்
குருமே தேவ சர்வ கார்யேஷூ சர்வதா”

இரண்டாவது முறையில் விழிப்பு வந்து விட்டது.

ஆனால் சாய் நாதன் எழுந்திருக்கவில்லை. அப்படியே படுத்திருந்தார்.

உடலின் சோர்வு அகன்று ஒரு சுறுசுறுப்பு வரும் வரை அப்படியே கிடப்பார்.தினசரி சொல்லும் பாரதியார் பாட்டு மனசுக்குள் மந்திரமாய் ஓடும்.புது பேட்டரி போட்டது போல் ஆகி விடும் மனசும், உடலும்.

கண்ணை மூடிக் கிடந்தார். மனம் அம்பாய் பாரதி வரிகளை துழாவியது.

எடுத்த காரியம் யாவினும் வெற்றி

எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே

விடுத்த வாய்மொழிக்கெங்கனும் வெற்றி

வேண்டினேனுக் கருளினள் காளி.

மனம் முணுமுணுத்தது.

எத்தனை வருடங்களாகச் சொல்லும் பாடல்.

வெற்றி கிடைக்கிறது. சில சமயம் அது தோல்வி போலத் தோன்றினாலும் பின்னாளில் அதுவே வெற்றியாக மாறி விடுகிறது. ஒன்று மட்டும்தான் தோல்வி போலத் தெரிகிறது. ஆனால் சாய் நாதன் அதை ஒப்புக் கொள்வதில்லை. சற்றே விலக்கி வைக்கப் பட்ட வெற்றி என்பார்.

ஒரு நாள் அந்த வெற்றியும் தன்னைத் தேடி வரும் என்பார்.

அந்த நாளுக்குத்தான் காத்திருப்பதும்.

மீண்டும் அலாரம் வக்ரதுண்ட மகாகாய என்று பாடியது. அவசரமாய் எழுந்து அதை நிறுத்தினர். பாத்ரூமுக்குள் சென்று முகம் பல் கழுவி வெளியில் வந்து டீ ஷர்ட்டை அணிந்து கொண்டார். தலையில் ஒரு குல்லாய்.வெளியில் வந்து சாமி படத்துக்கருகில் இருந்த விபூதியை எடுத்து இட்டுக் கொண்டார்.

கிச்சனில் மட்டும் விளக்கு எரிந்தது. சுக்கான் எதோ ஒரு பாட்டை முணு முணுத்தபடி காஃபி கலந்து கொண்டிருந்தான்.

“டேய் சுக்கான். இது உனக்கே நியாயமாடா?’

திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவன் “அய்யே நீதானா எஜமான்” என்றான்.

“ஏண்டா எஜமான்னு சொல்றே. என்னை விட்டுட்டு ஏண்டா நீ மட்டும் காபி குடிக்கறே?”

“எஜமானுக்கு முன்னாடி வேலைக்காரன் குடிச்சுப் பாக்கனும்க.”

“சரி, நீ இப்போ உசிரோடதான இருக்கே?”

“ஆமா, ஆமா,”

“அப்போ எனக்கு ஒரு காப்பி கொடு.?

“பால் கலந்தா, இல்லாமயா”

“கலந்தே கொடு.”

“சக்கரை போட்டா, போடாமயா”

“போட்டே கொடு.”

“வெள்ளைச் சக்கரையா கரும்புச் சக்கரையா?”

“நான் உன்னை ஒரு கேள்வி கேக்கவா?”

“கேளுங்க எஜமான்”

“உன்னை இப்போ கொல்லலாம்னு. நினைக்கறேன். கத்தியால குத்தவா அருவாளால ஒரே போடா”

“எஜமான். அருவாளால் ஒரே போடு போட்றுங்க.”

“இப்ப அதைத்தாண்டா செய்யப் போறேன். காப்பி கொடுன்னா, கேள்வி கேட்டுட்டு இருக்கே.மடப் பயலே?”

“சொல்ல மாட்டீங்க. ஸ்கூலுக்கு அனுப்பி இருந்தா நானும் புத்திசாலி ஆகி இருப்பேன்ல”

“ஏண்டா, ஸ்கூலுக்கு அனுப்பினா கிணத்துல விழுந்துருவேன்னு போனவந்தானே. விழுந்திருக்க வேண்டியதுதானே. சரி இப்போ சரி சொல்லு உன்னை எல்.கே.ஜில் சேர்த்து விடறேன்,”

“ஏன் உங்க எதிரி யாராச்சும் அங்க டீச்சரா இருக்காங்களா?”

“அடப்பாவி.ஏண்டா நல்லது செய்ய விட மாட்டீங்களா?”

“எஜமான், காப்பியைக் குடிங்க, உங்க ஆளுங்க எல்லாம் காத்துகிட்டு இருப்பாங்க. வாக்கிங் போய்ட்டு வாங்க. சின்ன எஜமான் எழுந்துக்கறதுக்குள்ள நான் டிபன் செய்யணும் தம்பிக்கு பிடிச்ச மாதிரி.”

“ஏண்டா எனக்குப் பிடிச்ச மாதிரி செய்ய மாட்டியா?”

“என்ன திம்பீங்க? சொல்லுங்க பாக்கலாம். உப்பு அதிகம் இல்லாம கஞ்சி, சக்கரை வியாதி, அதுக்கு சப்பாத்தி. ரிடையர் ஆகி வீட்டுல சும்மாதானே இருக்கீங்க. மெதுவா சாப்பிட்டா போதுமே.தம்பீதான் வளர்ற புள்ள. வேலைக்குப் போகுது. அதுக்கு வித, விதமா சமைச்சுப் போட்டு திங்கறதை அழகு பாக்கணும்.

“பாருடா, பாரு, என் வீடு, என் காசு. ஆனா எனக்கு வேணும்கற உணவு இல்லை. போங்கடா, நான் வேற வீட்டுக்குப் போய்க்கறேன்.”

“என்னத்துக்கு? வேற பொண்ணை கலயாணம் செஞ்சுகிட்டு இங்க கூட்டியாந்துருங்க.”

“ஒரு ஆள் எத்தனை பேரைக் கல்யாணம் செஞ்சுக்குவான்?”

சாய் நாதன் புன்னகையுடன்தான் கேட்டார். ஆனால் சுக்கானுக்கு அழுகை வந்தது.மூக்கை உறிஞ்சி கண்ணைத் துடைத்துக் கொண்டான்.

“இன்னும் எத்தனை காலத்துக்கு அதை நினைசுகிட்டு இருக்கப் போறீங்க?”

“சாகற வரைக்கும். மனசு ஒண்ணுதான் சுக்கா”

சுக்கான் பதில் பேசாமல் காப்பியைக் கலந்து அவர் முன் வைத்தான். அவருடைய பத்தாவது வயதில் இந்த வீட்டுக்கு வந்தான் சுக்கான். அவன் அம்மாவுக்கு இங்கு சமையல் வேலை. அவரின் அம்மா, இரண்டாவது குழந்தை பிறந்து, உடல் நலிவுற்றுப் படுத்திருந்த சமயம்.

வீட்டைக் கவனிக்க, குழந்தையைக் கவனிக்க என்று வந்தார்கள். அப்பா இல்லை.அவருடன் சுக்கானையும் படிக்க ஸ்கூலுக்கு அனுப்பினார் அப்பா. கிணற்றில் விழுகிறேன் என்று ஓடி விட்டான்.பிடித்து இழுத்து வந்து விட்டார்கள்.அதன் பிறகு மெல்ல, மெல்ல அப்பாவுடன் கடைக்கு வேலைக்குப் போனான். தங்கையை அவன்தான் வளர்த்தான்.அம்மாவின் கை வேலையைப் பிடுங்கிச் செய்வான். கொஞ்சம், கொஞ்சமாக அவன் இல்லாமல் வீடு இல்லை என்ற நிலைக்கு தள்ளப் பட்டு விட்டது.

இன்று சாய் நாதனுக்கு அறுபது வயதாகிறது. அவன்தான் சகலமும்.நம்பிக்கையானவன். கல்யாணமும் செய்து வைத்தார்கள். அவள் ஒரு வருஷம் இந்த வீட்டில்தான் வேலை செய்தாள். அதன் பிறகு பனியன் கம்பெனிக்குச் சென்றவள் அப்படியே ஒருவனுடன் ஓடி விட்டாள்.

போகட்டும் விடு என்று தன் வேலையில் மூழ்கி விட்டான் சுக்கான்.

இந்தக் குடும்பத்தின். சந்தோஷம், நலம் மட்டுமே அவனுக்கு முக்கியம். இன்று அவன் இன்றி வீடு இல்லை என்ற நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டது வீடு. அவரின் மகன் சந்தீப் சுக்கான் என்று பின்னாடியே சுற்றுவான். மகராஜ் என்று அழைத்தபடி சுக்கானும் அவன் பின்னாடியே சுற்றுவான்.சந்தீப் நேரம் ஆகி விட்டது என்றால் விட மாட்டான். அவன் ஷர்ட் மாற்றும்போது, ஷூ மாட்டும்போது பினாடியே சென்று டிபனை ஊட்டி விடுவான்.

எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான்

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்”

மெல்லப் பாடியபடி காப்பியைக் குடித்தார்.

“பாரதியைப் பிடிச்சுகிட்டே அலையுங்க”

அவனைப் பிடிசுகிட்டா போதும்டா. வீரம், விவேகம்.பக்குவம், வாழ்வின் மீதான ருசி வந்துடும். வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் அவன்தான்.” எழுந்தார்.

வரும்போது காய் கறி வாங்கிட்டு வந்துடறீங்களா?

“அதெல்லாம் உன் வேலை.”

சாய்னாதன் மகன் ரூமிற்குள் எட்டிப் பார்த்தார். மெல்லிய ஏ,சியின் குளிரில் இழுத்துப் போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்தான்.பரவசமாய் அவனைப் பார்த்தபடி நின்றார்.

வாழ்க்கையின் இனிமையான தருணங்களை எல்லாம் இழந்தது இவனுக்காகத்தானே. சந்தீப்பின் அப்பா என்ற ஒரு அழைப்பில் உருகும் அந்த இதயத்தின் பாசத்துக்காக.

சின்னக் குழந்தையாய் உறங்கும் அவனைப் பார்த்தபடி நின்றார்.

“அய்யே எஜமான், தூங்கற புள்ளையை ரசிக்கக் கூடாது. நவரு” சுக்கான்

“இவன் ஒருத்தன் என்னை அதட்டிகிட்டே இருக்கறது.”

சாய் நாதன் சலித்தபடி வாசலுக்கு வந்தார். இரவு முழுதும் பெய்த மழை சற்று நின்றிருந்தது. வாசல் கம்பிக் கதவின் மீது சின்ன முத்துக்களாய் மின்னும் நீர்த் திவலைகளை பார்த்து யோசித்தபடி நின்றார்.இன்று போகலாமா வேண்டாமா? என்ற யோசனை.

“என்ன யோசனை?”- சுக்கான் வந்து விட்டான்.” கொஞ்சம் தூறல் வந்துறக் கூடாதே. வாக்கிங் வேண்டாம்னு நின்னுடுவீங்க.”

“இல்லடா.ஒரு வேலை பாக்கி இருக்கு. கம்ப்யூடர்ல முடிக்கணும்.”

“என்ன வேலை. சொல்லுங்க. நான் செஞ்சுத் தாரேன்”

“டேய்” அதிர்ந்தார் சாய் நாதன்.” உனக்கு எம்.எஸ் ஆஃபீஸ் தெரியுமாடா?”

“அட்ரஸ் கொடு.போய் பாத்துட்டு வரேன்.”

“சிரித்ததில் புரை ஏறிற்று சாய் நாதனுக்கு.அந்தச் சிரிப்புடன் அவனுக்குப் பதில் சொல்லாமல் படி இறங்கினார்.

அவருடைய வாக்கர்ஸ் கிளப் உறுப்பினர்கள் காத்திருப்பார்கள். தினசர் எல்லோரும் அந்த தெரு முனையில் உள்ள பிள்ளையார் கோவிலில் சந்தித்து ஒன்று சேர்ந்து நடக்க ஆரம்பிப்பார்கள். மின் நகர் என்ற அந்தப் பகுதியுல் ஒரு பூங்கா உண்டு. அதில் இவர்கள் கிளப் நடப்பதற்கு என்று எட்டு போட்டு வைத்திருந்தது. அதில் அரை மணி நேரம் நடை பயிற்சி. அரை மணி நேரம் ஷட்டில் ஆட்டம். வீட்டுக்கு வரும்போது உற்சாகம் உடல் முழுக்க நிறைந்திருக்கும்.

இந்த உற்சாகம்தான் அறுபது வயசுக்கும் அவரை இளைஞ்சனாய் வைத்திருக்கிறது.ஓட்டப் பந்தயம் வைத்தால் நாந்தான் முதல் என்பார்.

ஹரிகிருஷ், சங்கரன், ரத்தினம் எல்லோரும் வந்திருந்தார்கள். மூவரும் இவருடன் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாய் படித்து. கல்லூரியிலும் தொடர்ந்த நட்பு.சங்கரனின் மகள் ஹரினியைத்தான் சந்தீப்பிற்கு மணமுடிக்க நினைத்திருக்கிறார்.அவள் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறாள். அழகாய் குடும்பப் பாங்காய் இருப்பாள். சங்கீதம் கற்றுக் கொள்கிறாள்.பி.காம் முடித்ததும் சி.ஏ. படிக்கப் போகிறாள். அவளின் குணம், பண்பு, அமெரிக்கயான நடவடிக்கை சாய் நாதனுக்கு ரொம்ப்ப் பிடிக்கும். அவள் பிறந்த அன்றே அவளைக் கையில் வாங்கி, இவள்தான் என் மருமகள் என்றார்.

அதே நினைப்புடன்தான் இன்று வரை இருவரும் இருக்கிறார்கள். இந்த நட்பும் உறவும் இறுதி வரை வர வேண்டும் என்பது அவரின் ஆசை.

“வாடா மாப்பிள்ளை “என்று வரவேற்றார் ஹரி கிருஷ்.

“என்னடா திடீர்னு மாப்பிள்ளைன்னு பொது அடை மொழி? என்ன விஷயம்”

“நீ அந்த மாதிரிதானே இருக்கே”

“அதைச் சொல்லு. சந்தீப் இருபத்தெட்டு வயசாச்சு. அவ்னுக்கு கலயாணம் செஞ்சா அடுத்த வருஷம் நீ தாத்தா.ஆனா பாரு டை அடிச்சு, ஜிம்முக்குப் போய் உடம்பை கப் குப்னு வச்சிருக்கே. பேசாம நான் உனக்குப் பொண்ணு பாக்கறேன்.”

“எத்தனை தடவைடா கல்யாணம் செஞ்சுக்கறது.”?

அந்தக் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லவில்லை.

இத்தனை வருடங்களாக அவரை அறிந்தவர்கள்தானே. நீ செய்தது தவறு என்று உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். சரி அவ போனா என்ன? நீ அடுத்த கல்யாணம் செஞ்சுக்க என்கிறார்கள்.எல்லாவற்றுக்கும் புன்னகைதான் அவர் பதில்.

“எதுக்கு இந்தப் புன்னகை”

“புன்னகை எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வுகள் தரும். மௌனம் பிரச்சினைகள் வராம காப்பாத்தும்.”

“இப்படியே இருந்தா எல்லாமே உன்னை விட்டுப் போகும்.”

“போகாது. வரும்?”

“எப்படி?”

“பாசிடிவ் தாட்ஸ்.”

“அது வசுமதியைக் கொண்டு வருமா? அவ வருவாளா?”

“வருவா.” நம்பிக்கையோடு கூறினார் சாயிநாதன்.

“எங்க இருக்கான்னு தெரியுமா”

“தெரியாது. ஆனா ஒரு நாள் அவ வருவா.” நம்பிக்கையோடு கூறினார் சாயி நாதன்.

(தொடரும்)

G.A. பிரபா

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...