பென்சிலின் மருந்தினைக் கண்டு பிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் நினைவு நாள் உலகப்புகழ் பெற்ற மருத்துவ அறிவியல் மேதையான பிளெமிங் மானிட இனத்தின் நல்வாழ்வில் பெரிதும் ஆர்வம் காட்டினார். அவரது மாபெரும் கண்டுபிடிப்பான பெனிசிலின், இன்றும் நிமோனியா, தொண்டை அடைப்பான் போன்ற நுண்ணுயிரிகளால் விளையும் நோய்களுக்குத் தடுப்பு மருந்தாக விளங்குகிறது. மேலும் டெராமைசின், ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (anti-biotic) கண்டுபிடிப்புக்கும் வழிகோலியது. பெனிசிலின் எவ்வாறு பூஞ்சணத்திலிருந்து அறியப்பட்டது என்ற தனது ஆய்வு முடிவுகளை பிளெமிங் வெளியிட்டார். பென்சிலின் கண்டுபிடிப்புக்காக பிளெமிங் 1948ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இத்தகு சிறப்புகளுக்குக் காரணமான பிளெமிங் 1955 மார்ச்சு 11 ஆம் நாள் இயற்கை எய்தினார். பிளெமிங் மாந்தரினத்தின் நோயற்ற வாழ்விற்காக உழைத்தவர். தனது இறுதி மூச்சுவரை உலக அமைதிக்காக வாழ்ந்தவர். அவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக நினைவுகூரப்பட்டது.
தமிழகத்தின் முதல் நூலகர் (லைபரேரியன்) வே. தில்லைநாயகம் காலமான நாள்! இவர் தேனி மாவட்டம் சின்னமனூரில் 1925 ஆம் ஆண்டு சூன் 10 நாள் தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி – அழகம்மை இணையர்களின் தலைமகனாகப் பிறந்தவர்.சின்னமனூரில் உள்ள கருங்கட்டான்குளம் நடுநிலைப் பள்ளியில் தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பெற்றார் (1931- 1938). உத்தமபாளையம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் (1938 – 1943) பள்ளி உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை (1944-46), இளங்கலைக் (1946-48) கல்வியைப் பெற்றார். தமிழறிஞர் ஆ. கார்மேகக் கோனார், ஆங்கிலப் பேராசிரியர் இரஞ்சிதம் ஆகியோர்தம் அன்பைப் பெற்ற மாணவராகத் திகழ்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று நூலக அறிவியல் பட்டயமும் (1949-50), நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளியலில் முதுவர் பட்டமும் (1953_55), மதுரை தியாகராசர் கல்லூரியில் கல்வி இளவர் பட்டமும் (1957-58) நிறைவு செய்தார். தில்லிப் பல்கலைக் கழகத்தில் பயின்று நூலகவியலில் முதுவர் பட்டமும் (1961-62) பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பிரான்சு (1955-56), ஜெர்மன் (1956 – 57) மொழிகளில் சான்றிதழ்களும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று சோதிடத்தில் சான்றிதழும் பெற்றார். நூலகத் துறையில் ஈடுபாடு மாணவப் பருவத்திலேயே (1936 மே 20) நூலகத் தொடர்பு பெற்றவர். 1949 ஆம் ஆண்டில் அரசாங்கச் செலவில் நூலகப் பயிற்சி பெற்று பொதுக்கல்வித் துறை இயக்க முதல் நூலகர் ஆனார். 1962 ஆம் ஆண்டில் கன்னிமாரா பொதுநூலகத்தில் நூலகரானார். 1972 ஆம் ஆண்டில் தமிழக அரசு பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநராக உயர்ந்து 1982 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். விடுதலை பெற்ற இந்தியாவில் ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் இயக்குநராக இருந்தவர் இவர் ஒருவரே ஆவார்.[1] தேசிய, மாநில பல்கலைக்கழக நூலக குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார். நூலக இயக்கத்தின் பண்பும், பயனும் என்றும் இல்லாத அளவு உயர்ந்த வீச்சினைப் பெற்ற இவரது ஆட்சிக்காலம், தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலம் என்று நூல்சார்ந்த எல்லோரும் இவரைப் புகழ்ந்துள்ளார்கள். எனவேதான் இந்திய நூலகத்துறை முன்னோடி அரங்கநாதனின் ஏகலைவ மாணவரான இவரை தமிழக பொதுநூலக இயக்கத்தின் தந்தை எனப் புகழ்கின்றனர். ஏறத்தாழ 1000 எழுத்துரைகள் எழுதியவர். இதில் 101 ஆங்கில எழுத்துரைகள். இதில் சில இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளன.வானொலி/ளி நிகழ்வுகளில் பெரும் பங்கு கொண்டுள்ளார். இதில் நூலக இயல் சிறப்பிடம் பெறுகிறது. இந்தியாவின் முன்னோடி முயற்சியாக தமிழில் 1951-1982 இல் இவர் பதிப்பித்த நூற்றொகைகள், குழந்தை நூற்றொகைகள், நூல்கள் அறிமுக விழா மலர்கள் முதலியன தமிழ் நூல்கள் வளம் காட்டுவன. இவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகள், நூலக வளர்ச்சித் திட்டங்கள் ஆய்வேடுகளாகும். “இந்திய நூலக இயக்கம்” என்னும் இவரது நூல், இவர் 40 ஆண்டுகளாகச் சேகரித்த தகவல்கள் 400 பக்கங்களில் 4000 ஆண்டு வரலாற்றைக் கொண்டதாக இருக்கிறது. பரிசு பெற்ற நூல்கள் === வேதியம் 1008 உட்பட இவர் எழுதிய 25 நூல்கள் இந்திய தர நிருணயத் தரகள் கொண்டவை. இவர் எழுதிய நூலக உணர்வு (1971), வள்ளல்கள் வரலாறு (1975), இந்திய நூலக இயக்கம் (1978) முதலியன தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்றவை.”இந்திய நூலக இயக்கம்” நூலைப் பாராட்டி 1982 இல் உலகப் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. “இந்திய அரசமைப்பு” தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசினைப் பெற்றது. இவரது குறிப்பேடு என்னும் நூல்தான் தமிழில் முதன்முதலாக வெளிவந்த ஆண்டுநூல் (Year Book) ஆகும்.
கிழக்கிந்தியக் கம்பெனிக்கும், திப்பு சுல்தானுக்குமிடையே மங்களூர் ஒப்பந்தம் கையெழுத்தான நாள் இந்த ஒப்பந்தமே 1780இலிருந்து நடைபெற்ற இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1780இல் கர்நாடகப் பகுதிக்குள் (கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கிடைப்பட்ட, தற்போதைய தமிழகம், தென்-கர்னாடகம், தென்-ஆந்திர பகுதி) 80 ஆயிரம் வீரர்களுடன் படையெடுத்த ஹைதர் அலி, ஆர்க்காட்டுக்குள் நுழைந்து, ஆங்கிலேயக் கோட்டைகளை முற்றுகையிட்டார். முற்றுகையை உடைக்க ஐயாயிரம் வீரர்களை கம்பெனி அனுப்பியது. 1780 செப்டெம்பர் 10இல், காஞ்சீபுரம் அருகிலுள்ள பொள்ளிலூரில், திப்பு தலைமையிலான படைகள் இப்படையை படுதோல்வியடையச் செய்தன. ஒரே நாளில் சுமார் நான்காயிரம் வீரர்களை இழக்க நேர்ந்த அந்தத் தோல்விதான், அதுநாள்வரை இந்திய மண்ணில் ஆங்கிலேயர்கள் அடைந்த மிகமோசமான தோல்வியாகும். அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்த திப்புவின் படைகள், சென்னையையும் கைப்பற்றிவிடும் என்ற நிலையில், 1781இல் கடற்படையின் உதவியுடன் போரிடத் தொடங்கிய ஆங்கிலேயர்கள் வெற்றிபெறத் தொடங்கினர். 1782இல் தஞ்சையில் திப்புவும், நாகப்பட்டிணம், சோளிங்கர் உள்ளிட்ட இடங்களில் ஆங்கிலேயர்களும் வென்றனர். 1782இல் திடீரென்று ஹைதர் அலி மறைந்ததால் திப்பு சுல்தான் ஆனார். 1783இல் கோயம்புத்தூரையும், மங்களூரையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்ற, 1784இல் திப்பு மீண்டும் மங்களூரைக் கைப்பற்றினார். இறுதி வெற்றியை முடிவுசெய்யமுடியாத நிலை தொடர்ந்ததால், போரை முடிவுக்குக் கொண்டுவருதற்காகவே ஆங்கிலேயர்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். சென்னையிலிருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆணையர், மங்களூருக்கு வந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேர்ந்தது, திப்பு வெற்றிபெற்றதாகக் காட்டியதுடன், கம்பெனியினருக்கு மனத்தளர்ச்சியையும் ஏற்படுத்தியது. அப்போதுதான் அமெரிக்காவிலிருந்த 13 குடியேற்றங்களையும் இங்கிலாந்து இழந்திருந்த நிலையில், இந்தியாவிலும் அவர்களது முடிவு தொடங்கிவிட்டதாகவே நம்பப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியின் பங்குகளும் இங்கிலாந்தில் சரிவைச் சந்தித்தன. இங்கிலாந்தின் தேசிய வருவாயில் ஆறில் ஒரு பங்கைக் கிழக்கிந்தியக் கம்பெனி ஈட்டிக்கொண்டிருந்ததால் தலையிட்ட இங்கிலாந்து அரசு, பிட் இந்தியா சட்டம் மூலம் இந்தியாவில் நிர்வாகத்தை மாற்றியமைத்து, அடுத்த 163 ஆண்டுகளுக்கு அடிமைப்படுத்தியது.
இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா செயல்படுத்திய ‘இரவல்-குத்தகை(லெண்ட்-லீஸ்)’ திட்டத்திற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் இத்திட்டத்தின்படி, நேச நாடுகள் அணியிலிருந்த இங்கிலாந்து, ஃப்ரீ ஃப்ரான்ஸ்(ஜெர்மெனியால் கைப்பற்றப்படாத), சீனா, சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுக்கு, உணவு, பெட்ரோலியப் பொருட்கள், போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் உள்ளிட்ட தளவாடங்கள் முதலானவவற்றை, விற்பனையாக அல்லாமல் அமெரிக்கா வழங்கியது. முதல் உலகப்போருக்காக வாங்கிய கடன்கள், பொருளாதாரப் பெருமந்தம் ஆகியவற்றால், எந்தப் போரிலும் அமெரிக்கா ஈடுபட்டுவிடக்கூடாது, போரிடும் நாடுகளுக்கு எதையும் விற்கக்கூடாது என்ற நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டிருந்தன. போலந்தை ஜெர்மெனி ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகள் அவர்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள் என்ற பார்வையுடன், பணத்தைக் கொடுத்துவிட்டு, தங்கள் பொறுப்பில் (ஆயுதங்களை) எடுத்துச்செல்பவர்களுக்கு விற்கலாம் என்ற கேஷ் அண்ட் கேரி திட்டம் தொடங்கப்பட்டது. ஃப்ரான்சை ஜெர்மெனி கைப்பற்றிவிட்ட நிலையில், இங்கிலாந்து மட்டுமே அச்சு நாடுகளை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்தது. அதன் தங்கக் கையிருப்பு முழுவதும் ஆயுதம் வாங்குவதற்காக ஏற்கெனவே அமெரிக்காவிடம் வந்துவிட, செலவிட நிதியில்லாத நிலையில் அமெரிக்கா உதவக்கோரி, 15 பக்கக் கடிதத்தை இங்கிலாந்துப் பிரதமர் சர்ச்சில், அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட்டுக்கு 1940 டிசம்பர் 7இல் எழுதினார். இந்தப் பின்னணியில்தான், அச்சு நாடுகளைக் கட்டுப்படுத்தாமல் விடுவது, ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஆபத்து என்ற பொருளில், ஜனநாயகத்தின் ஆயுதச் சாலையாக அமெரிக்கா செயல்படவேண்டியிருக்கிறது என்ற அறிவிப்புடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. முத்துத் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதைத் தொடர்ந்து, அமெரிக்காவே நேரடியாகப் போரில் இறங்கிவிட்டாலும், இங்கிலாந்துக்கும் தொடர்ந்து பிற நேச நாடுகளுக்கும் சுமார் 50 பில்லியன் டாலர்களுக்கும்(தற்போது ரூ.65 லட்சம் கோடிக்கும்) அதிகமான மதிப்பிற்கு(அமெரிக்காவின் போர்ச் செலவில் சுமார் 17 சதவீதம்!) உதவிகளைச் செய்திருந்தது. போரின் முடிவில் சோவியத்திலிருந்த ட்ரக்குகள், ரயில்கள், சில வகை ஆயுதங்களில் மூன்றிலொரு பங்குக்கும் அதிகமாக அமெரிக்கத் தயாரிப்புகள் இருக்குமளவுக்கு இந்த உதவிகள் அனைவருக்கும் செய்யப்பட்டிருந்தன. நாங்கள் போரிடத் தயாராக இல்லை, எங்களுக்கு ஆபத்து வந்துவிடாமலிருக்க யாராவது போரிடுங்கள் என்பதுதான் இது தொடங்கப்பட்டதன் உண்மையான நோக்கம் என்றாலும்கூட, இந்த உதவிகளின்றி நேச நாடுகள் வென்றிருக்க முடியாது என்பது மட்டுமல்ல. போருக்குப்பின் போர்க் கப்பல்கள், விமானங்கள் போன்ற மிகச்சிலவற்றைத் தவிர, மற்றவற்றை அமெரிக்கா திரும்பப் பெற்றுக்கொள்ளவோ, அவற்றுக்கு விலை கேட்கவோ இல்லை என்பதும் கட்டாயம் குறிப்பிடவேண்டிய செய்தி.
ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரொக்ராட் எனப்படும் சென் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து இருந்து மாஸ்கோவுக்கு மாறியது. அதற்கு முன்னர் ரஷ்யாவின் ஜார் மன்னர்கள் 1712இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கை தலைநகராக்கும் வரை இதுவே தலைநகராக இருந்தது. 1918 ல் மீண்டும் ரஷ்யாவின் தலைநகராக்கப்பட்டது. 1917 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் ரஷ்ய குடியரசின் தலைவர் பொறுப்பேற்ற விளாடிமிர் லெனின் மாஸ்கோவை மீண்டும் ரஷ்யாவின் தலைநகராக்கினார்.
உலக பிளம்பிங் தினம் (World Plumbing Day) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 11 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது உலகளாவிய ரீதியில் பிளம்பிங் தொழில் மற்றும் சுகாதாரத்திற்கான அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கொண்டாடப்படுகிறது. உலக பிளம்பிங் தினத்தின் முக்கியத்துவம்: சுத்தமான குடிநீர் வழங்குதல் நீச்சல் நீரிழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மை சுகாதார முறைகளை மேம்படுத்துதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சொந்த மற்றும் பொதுசுகாதார நிலை உயர்த்துதல் இதை யார் கொண்டாடுகிறார்கள்? பிளம்பிங் தொழிலாளர்கள் பொறியாளர்கள் அரசாங்கங்கள் சுகாதார அமைப்புகள் பொதுமக்கள் இந்த தினத்தை உலக பிளம்பிங் கவுன்சில் (World Plumbing Council – WPC) 2010 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இதன் நோக்கம், உலகளவில் மக்கள் பிளம்பிங் அமைப்பின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்பதே. இன்று, நீரும் சுகாதாரமும் பல நாடுகளில் பெரும் சவாலாக உள்ளது. அதற்காக, பிளம்பிங் தொழில் முறையான முறையில் செயல்பட வேண்டும். இந்த தினம், அதன் தேவையை வலியுறுத்தும் ஒரு நல்ல வாய்ப்பாகும்.
உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர், நாடக ஆசிரியர் டக்ளஸ் ஆடம்ஸ் (Douglas Adams) பிறந்த தினம் இன்று (மார்ச் 11). l இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் (1952) பிறந்தார். சிறு வயதிலேயே அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டி ருந்தார். ஆசிரியரின் பாராட்டும் ஊக்கமும் எழுத்துத் திறனை மேம்படுத்தியது. l 1970-ல் ஒரு எழுத்தாளனாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது, ‘வெற்றி நிச்சயம்’ என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், உண்மை வேறுவிதமாக இருந்தது. வானொலி, தொலைக்காட்சிகளில் இவரது எழுத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே, வாழ்க்கையை ஓட்டுவதற்காக, கிடைத்த வேலைகளைச் செய்தார். ஆனாலும் முயற்சியைக் கைவிடவில்லை. ‘த பர்க்கிஸ் வே’ மற்றும் ‘த நியூஸ் ஹட்லினெஸ்’ ஆகியவை இவரது ஆரம்பகால படைப்புகள். மெல்ல மெல்ல நிலைமையை உள்வாங்கிக்கொண்டு வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். l ‘மான்ட்டி பைத்தான்’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். 1977-ல் ‘த ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைடு டு த கேலக்ஸி’ என்ற இவரது நகைச்சுவை அறிவியல் புனைக்கதை பிரம்மாண்ட வெற்றி பெற்று விற்பனையில் சாதனை படைத்தது. பிபிசி வானொலியில் இது முதலில் நகைச்சுவைத் தொடராக வெளிவந்தது. பிறகு, 5 புத்தகங்களாக வெளிவந்து 1.50 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையானது. இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார். இது 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த 100 புத்தகங்கள் பட்டியலில் 24-வது இடத்தைப் பிடித்தது. தொலைக்காட்சித் தொடர், ஆல்பம், கம்ப்யூட்டர் கேம், மேடை நாடகம் என பல்வேறு வடிவங்களில் இந்த கதை தயாரிக்கப்பட்டது. l விற்பனையில் மற்றொரு சாதனை படைத்த ‘த ரெஸ்டாரென்ட் அட் தி எண்ட் ஆஃப் தி யுனிவர்ஸ்’ என்ற புத்தகத்தை1980-ல் எழுதினார். l தொடர்ந்து ‘லைஃப், தி யுனிவர்ஸ் அண்ட் எவ்ரிதிங்’, ‘ஸோ லாங் அண்ட் தேங்ஸ் ஃபார் ஆல் த ஃபிஷ்’, ‘மோஸ்ட்லி ஹாம்லஸ்’, ‘டர்க் ஜென்ட்லிஸ் ஹோலிஸ்டிக் டிடெக்டிவ் ஏஜென்சி’, ‘தி லாங் டார்க் டீ டைம் ஆஃப் த சோல்’ என்பது உட்பட ஏராளமான புத்தகங்களை எழுதினார். l இம்பீரியல், டொபேக்கோ விருது, சோனி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இளம் வயதிலேயே ‘கோல்டன் பென்’ விருதைப் பெற்றவர். l நகைச்சுவை, அறிவியல், தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்ட இவரது படைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருத்தும் இடம்பெறும். இவரது முழு பெயர் டக்ளஸ் நோயல் ஆடம்ஸ் என்பதால், ரசிகர்களால் ‘டிஎன்ஏ’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். l உலகப்புகழ் பெற்ற படைப்பாளியாக மிளிர்ந்த இவர் 49 வயதில் (2001) மறைந்தார்.