அரக்கோணம்: பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ‘ஜாகுவார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாகனங்களின் உற்பத்தி ஆலையை (முதல் அலகு) முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில், ரூ.9,000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ‘ஜாகுவார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாகனங்களின் உற்பத்தி ஆலை அமைக்க கடந்த 2024-ம் ஆண்டு செப்.28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தார்.

இதில், டாடா மோட்டார்ஸ் (ஜேஎல்ஆர்) நிறுவனத்தின் அதிநவீன வாகன உற்பத்தி ஆலையின் முதல் அலகு ரூ.900 கோடியில் நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தொழிற்சாலையை திறந்துவைத்து பார்வையிட்டார். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் வாகன இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.
முன்னதாக டாடா குழுமத்தின் முன்னாள் முதல்வர் ரத்தன் டாடாவின் உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: டாடா குழுமத்துக்கு மட்டு மின்றி தமிழகத்துக்கும் இன்றைய தினம் ஒரு பொன்னாள். ரூ.9,000 கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் ஒரு திட்டத்தை ராணிப்பேட்டையில் தொடங்கியதற்காக முதல்வராக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

டாடா குழுமத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆழமான உறவு உள்ளது. மேலும், நாட்டின் வாகன உற்பத்தி மையமாக தமிழ்நாடு உள்ளது. மின்வாகன உற்பத்தியின் தலைநகரமாக நாம் விளங்குகிறோம்.
பரவலான வளர்ச்சி: டாடா ஜே.எல்.ஆர் தயாரிப்பு தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லா மாவட்டங்களிலும் சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியடைந்த மாநிலம் தமிழ்நாடு என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
டிப்ளமோ முடித்த நம்முடைய இளைஞர்கள், இங்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ‘லட்சியா’ என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் வேலை செய்து கொண்டே பி.டெக் பட்டம் பயிலவும், இந்த நிறுவனம் உதவி செய்கிறது.
நம் திராவிட மாடல் அரசின் செயல்பாட்டு திறனை உலகத்துக்கு எடுத்துச்சொல்ல ‘முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு’ இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளன. கிட்டத்தட்ட 100 திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: டாடா குழுமம் தனது பல்வேறு தயாரிப்புகளையும், ஆராய்ச்சி மையங்களையும் இங்கு தொடங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தரும் முதலீடுகளை யார் மேற்கொள்ள வந்தாலும், அவர்களை திறந்த மனதோடும், திறந்த கரங்களோடும் நிச்சயமாக வரவேற்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

முன்னதாக டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் சந்திரசேகரன் பேசும்போது, “தொழிற்சாலையில் முதல் அலகினை தற்போது தொடங்கி உள்ளோம். 3 அலகுகளும் அடுத்த 4 ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு செயல்படும். ஆண்டுக்கு இரண்டரை முதல் மூன்றரை லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும்.
ஜே.எல்.ஆர். வாகன உற்பத்தியில் சீனா, பிரேசில், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் பட்டியலில் இந்தியாவின் தமிழ்நாடும் இணைந்துள்ளது” என்றார். இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.காந்தி, டி.ஆர்.பி.ராஜா, அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் முனிரத்தினம், ஈஸ்வரப்பன், ஏ.பி.நந்தகுமார், தலைமைச்செயலர் முருகானந்தம், வர்த்தகதுறை அரசு செயலாளர் அருண்ராய், சிப்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் பாலாஜி, மேலாண்மை இயக்குநர் சைலேஷ் சந்திரா, ஜே.எல்.ஆர். நிறுவனத்தின் இயக்குநர் ப்ராங்க் லூத்விக் உட்பட பலர் பங்கேற்றனர்.
