சென்னை: விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆன்லைன் பட்டப்படிப்பை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தொழில்துறைக்கு தயார்நிலை கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் சென்னை ஐஐடி ஆன்லைன் பிஎஸ் வானூர்தியியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் (B.S Aeronautics and Space Tech.) படிப்பை தொடங்கியிருக்கிறது.
இப்படிப்பானது விமான போக்குவரத்து, ஆளில்லா விமானம், விண்வெளி உற்பத்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைந்திருக்கும். அதேநேரத்தில் தொழில்துறை ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் உயர் படிப்புகளுக்கு வலுவான அடித்தளத்தையும் உருவாக்கும்.
இதற்கான பாடத்திட்டம் வானூர்தியியல், விண்வெளி அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய துறைகளில் பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பு நிபுணர்களை உருவாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை படிப்பவர்களுக்கு சென்னை ஐஐடி அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் மூலம் சிறப்பு பயிற்சியும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். இதில் பிளஸ்-2 மற்றும் அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் பொறியியல் டிப்ளமா படித்தவர்களும் சேரலாம். ஐஐடி ஜெஇஇ நுழைவுத் தேர்வு தேவையில்லை.
இப்படிப்புக்கான தேர்வுகள் மற்றும் ஆன்லைன் மதிப்பீடு ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படும். இப்படிப்பை முடிப்போருக்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பாரத் டைனமிக்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சர்வதேச விண்வெளி நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
மேலும், இந்த ஆன்லைன் பிஎஸ் படிப்பை முடிப்பவர்கள் ‘கேட்’ நுழைவுத்தேர்வு தகுதி இல்லாமல் சென்னை ஐஐடியில் எம்எஸ் படிப்பில் சேரலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆன்லைன் பட்டப்படிப்பை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் டெக்னாலஜி ஆகியவை அதிவேகமாகவளர்ந்து வரும் துறைகள் ஆகும். இத்துறைகளில் சேரும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐஐடி மேற்கொண்டுள்ள மற்றொரு முயற்சிதான் இந்த ஆன்லைன் படிப்பு” என்றார்.
