சென்னை: தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து அணைப்பது எப்படி என தமிழகம் முழுவதும் தனியார் காவலர்களுக்கு தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர்.
தீ விபத்து ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது, தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்கள் விபத்து இடத்துக்கு வருவதற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி என குடியிருப்புகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், திரையரங்கம், வணிக வளாகங்கள், பள்ளிகள் போன்றவற்றில் பணிபுரியும் தனியார் காவலர்களுக்கு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி தமிழகம் முழுவதும் பிப்.9-ம் தேதி நடத்தப்படும் என தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அறிவித்தது.

அதன்படி, சென்னை அசோக் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நேற்று காலை நடைபெற்ற இப்பயிற்்சியை தீயணைப்புத் துறை இயக்குநரும், டிஜிபியுமான சீமா அகர்வால் தொடங்கி வைத்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள 375 தீயணைப்பு நிலையங்களிலும் இந்த பயிற்சி நடைபெற்றது.
சென்னையில் 1,500 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பேருக்கு தீ விபத்து ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி, தீ விபத்து நடைபெற்றால் அதை விரைந்து அணைப்பது எப்படி என தீயணைப்பு வீரர்கள் பயிற்சி அளித்தனர். இன்றும் இந்த பயிற்சி நடைபெறுகிறது.
