சென்னை: இந்தியாவில் ரயில் சேவைகளை பெறுவதற்கு பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் யுடிஎஸ் செயலி (UTS- Unreserved Ticketing System) முக்கியமானதாகும். இது 2014-ம் ஆண்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது.
நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை இந்த செயலியில் பதிவு செய்து கொள்ளலாம். இந்நிலையில், யுடிஎஸ் செயலி மார்ச் 1-ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், ரயில் ஒன் (RailOne) செயலியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆரம்பக் கட்டத்தில், யுடிஎஸ் செயலியில் சீசன் டிக்கெட் முன்பதிவு, புதுப்பித்தல் மற்றும் புதிய பயனர் பதிவு ஆகியவை முடக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, நடைமேடை டிக்கெட் பதிவு மற்றும் ஆர்-வாலட், டாப்-அப் செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன. யுடிஎஸ் செயலியின் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கும் அல்லது புதுப்பிக்கும் பயனர்கள், அந்தச் செயலி மூலம் நடைமேடை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவோ ஆர்-வாலட்-ஐ ரீசார்ஜ் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
யுடிஎஸ் செயலியில் உள்ள பயனர்களின் தற்போதைய ஆர்-வாலட் இருப்பு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். யுடிஎஸ் செயலி நிறுத்தப்படுவதால், அதில் உள்ள ஆர்-வாலட் இருப்பு காலாவதியாகாது. அந்த இருப்பு ‘ரயில்ஒன்’ செயலியில் பயன்படுத்தக் கிடைக்கும்.
டிக்கெட் பதிவு மற்றும் பயணிகள் சேவைகளுக்காக அதிகாரப்பூர்வ மொபைல் தளமாக இருக்கும் ‘ரயில்ஒன்’ செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்பதிவு இல்லாத, சீசன் மற்றும் நடைமேடை டிக்கெட்டுகளுடன் டிக்கெட் சேவைகளை ‘ரயில்ஒன்’ செயலி வழங்குகிறது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
