புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் தற்போது 543 எம்.பி.க்கள் உள்ளனர். நாடாளுமன்றம், சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்துவது, தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று (ஏப்ரல் 16-ம் தேதி) தொடங்கி ஏப்.18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
முன்னதாக நடந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தொகுதி மறுவரையறை செய்வது (மக்களவை தொகுதி களை அதிகரிப்பது) குறித்த அரசியல் சட்ட திருத்தங்கள் முன் மொழியப்பட உள்ளது. இது தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்கள் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த மசோதாக்கள் உறுப்பினர்களின் பார்வைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் இந்த சிறப்பு கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பை கிரண் ரிஜிஜு வெளியிடும்போதே, காங்கிரஸ் உறுப்பினர் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடைபெறும் காலச்சூழலில் இந்த சிறப்பு கூட்டத்தொடர் தேவையில்லாதது என்றும், வேண்டும் என்றால் தேர்தல்கள் முடிந்தபிறகு கூட்டலாம் என்றும் அவர்கள் கூறினர். ஆனால் அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும், இந்த தொகுதி மறுவரையறைக்கான சட்டத்திருத்த முன்மொழிவுகளை எதிர்த்து உள்ளன. எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. அப்போது யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிமுகம் செய்கிறார். மற்ற 2 மசோதாக்களையும் சட்டத்துறை மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் அறிமுகம் செய்து வைக்கிறார்.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது பற்றியும், அரசின் சட்டத்திருத்த மசோதாக்கள் பற்றியும் ‘இந்தியா’ கூட்டணியின் எதிர்க்கட்சிகள் நேற்று ஆலோசித்தன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஜெயராம் ரமேஷ், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே. தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, விடுதலைச்சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
