தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்

சென்னை,

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், கடல் வளத்தைப் பாதுகாக்கவும் மீன் உற்பத்தியைப் பெருக்கவும் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் 61 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலம் மீன்கள் முட் டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.

இந்த காலத்தில் விசைப்படகுகளின் எந்திர இரைச்சல் மற்றும் ராட்சத வலைகளால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவே ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை கடலுக்கு ‘ஓய்வு’ அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சிறிய மீன் குஞ்சுகள் அழிவதைத்தடுத்து, வருங்காலங்களில் மீன் வளம் பெருக வழிவகை செய்யப்படுகிறது.

தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் இந்த மீன்பிடித் தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த தடை அமலுக்கு வரும்போது மீனவர்கள் கடலில் இருக்கக்கூடாது என்பது விதிமுறை ஆகும். எனவே, ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ள விசைப்படகுகள் அனைத்தும் நேற்று இரவே கரை திரும்பியுள்ளன.

இதனால் ராமேசுவரம் துறைமுக பகுதியில் 800 விசைப்படகுகள் நங்கூரமிட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல் பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியக்குடி, ஏர்வாடி, கீழக்கரை, மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லா மல் ஆங்காங்கே உள்ள துறைமுக கடல் பகுதியில் நங்கூர மிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், அதைசார்ந்த மீன் பிடி தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்து உள்ளனர்.

இந்த மீன்பிடி தடையின் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஆழ்கடல் மீன்வரத்து இருக்காது. இதனால் மீன் சந்தைகளில் விற்பனை வரலாறு காணாத உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மீனவர்களுக்கு தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.8 ஆயிரம், தேர்தல் காலம் என்பதால் தமிழக அரசு கடந்த மாதமே அவர்களது வங்கி கணக்கில் செலுத்திவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!