ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் – ராம்குமார்

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தது. இந்த படத்தில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

இந்த படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், ரூ.3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரத்தை துஷ்யந்த் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதியும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடன் தொகையை திருப்பி தராததால், ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் என்பவரை மத்தியஸ்தராக ஐகோர்ட்டு நியமித்தது. இருதரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி, கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரத்தை வசூலிக்கும் விதமாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த படத்தை விற்பனை செய்து கடனை ஈடு செய்ய வேண்டும்” என்று கடந்த ஆண்டு மே மாதம் 4-ந்தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி, ஜகஜால கில்லாடி படத்தின் மீதான அனைத்து உரிமைகளையும் வழங்க கோரியபோது, படம் முழுமையடையவில்லை என்று ஈசன் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. இதனால், மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், செவாலியர் சிவாஜி கணேசன் ரோட்டில் உள்ள துஷ்யந்தின் தாத்தாவான நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் 2024-ம் ஆண்டு தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் நேற்று முன் தினம் பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கு விசாரணையின்போது, பலமுறை பதில் மனு தாக்கல் செய்ய துஷ்யந்த் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இந்த ஐகோர்ட்டும் அவருக்கு அவகாசம் வழங்கி உள்ளது. ஆனால், இதுவரை அவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இத்தனைக்கும் மத்தியஸ்தர் தீர்ப்பு இறுதியாகி விட்டது. இதை துஷ்யந்த் தரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, துஷ்யந்தின் தந்தையும், சிவாஜி கணேசனின் மகனுமான ராம்குமாருக்கு பங்குள்ள சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிடுகிறேன். இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்துக்கு மனுதாரர் அனுப்பி வைக்க வேண்டும். இந்த வழக்கை இன்றைக்கு (புதன்கிழமைக்கு) தள்ளிவைக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில் துஷ்யந்துக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்ய ராம்குமாருக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!