திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 5

 திருவெம்பாவைதிருப்பள்ளியெழுச்சி பாடல் 5

திருவெம்பாவை
திருப்பள்ளியெழுச்சி பாடல் 5

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! சிந்தனைக்கு எட்டாதவனே! நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்துபூதங்களிலும் நீயே இருக்கிறாய். நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை. இவ்வாறு புலவர்கள் உன்னுடைய சிறப்பியல்புகளை கீதங்களால் பாடுகிறார்கள், பக்தர்கள் இந்தப் பெருமைகளைச் சொல்லி ஆடுகிறார்கள். இப்படி பாடியாடுபவர்களும் உன்னை நேரில் பார்த்ததில்லை.

உன் திருக்காட்சியைக் கண்டவர்கள் யாருமில்லை. அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பாக வந்து, எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட் கொள்ள வேண்டும். அதற்காக, உடனே துயில் நீங்கி எழுவாயாக.

விளக்கம்: போக்கிலன் வரவிலன் என்று சிவபெருமான் போற்றப்படுகிறார். அதாவது, இறைவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன் என்று இதற்குப் பொருள். அவன் நிரந்தரமானவன், அவனுடைய மூலத்தை அறிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் அறிவீனர்களாகவே இருக்க முடியும். எத்தனை நூல்களை ஆய்வு செய்தாலும், இதைக் கண்டு பிடிக்க முடியாது. எனவே, நம் சக்திக்கு மீறிய அந்த பரமனைப் பாடி மகிழ்ந்தாலே அவன் நம் கண்ணுக்குத் தெரிந்து விடுவான் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...