இன்றைய முக்கிய நிகழ்வுகள் (27.12.2024)
முதன்முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம் இன்று
நம்ம தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலானது முதல் முதலாக 107 வருஷங்களுக்கு முன்னாடி இதே தினத்தில்தான் மொத மொதல்லே பாடப்பட்டிச்சு. 1911 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டின் போது பாடப்பட்டது. தாகூர் உறவினரான சரளா தேவி என்பவர் பள்ளி மாணவர்களுடன் இணைந்து பாடினார். இன்னொரு சமாச்சாரம் தெரியுமா? தாகூர் இயற்றியதே ஜன கண மன என்கிற நம் தேசிய கீதம் .ஐந்து பத்திகள் கொண்டதாக்கும் இதில் ஒரு பத்தியை மட்டுமே நாம் பாடுகிறோம். நெசம் என்னன்னா இதை தாகூர் எழுதுன காலத்தில் வங்கப்பிரிவினை அமலில் இருந்தது.அதையொட்டி நடந்த சமவங்களை கண்டும், கேள்விப்பட்டும் ஏற்பட்ட வலியோடு இந்த தேசம் ஒன்று என வலியுறுத்த தாகூர் இப்பாடலை இயற்றினார் . அதே சமயம் ஆங்கிலேயர் ஆட்சிகாலம் வரை ‘god save the queen’ என்கிற பாடலைத்தான் பாடிக்கொண்டு இருந்தார்கள். இப்பத்திய ஜன கண மன ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வரவேற்பு அளித்து இயற்றப்பட்ட பாடல் இது என்கிற கருத்து சில பேரால் சொல்லப்பட்டது உண்மையில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்று அதே மாநாட்டில் ராம்புஜ் சவுத்திரி என்பவர் ஓர் இந்திப் பாடலைப் பாடினார். அந்தப் பாடலையும் தாகூரின் பாடலையும் வேறுபடுத்தி அறிந்துகொள்ளாத ‘ஸ்டேட்ஸ்மேன்’, ‘இங்கிலிஷ்மேன்’ போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள், இரண்டு பாடல்களுமே மன்னரை வாழ்த்திப் பாடியதாக தவறாக தகவல் வெளியிட்டுச்சு. இதுக்கிடையிலே தாகூரின் ஜன கன மண எனும் இப்பாடல் 1943 இல் நேதாஜி அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய படையின் தேசிய பாடலானது . அப்பாலே ஜனவரி 24 அன்று 1950 ஆம் வருடம் இப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது . இன்று அப்பாடல் நூறு ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நம் தேசபக்தியின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது அது மட்டுமில்லாம என் பொன் வங்கமே என்கிற பொருளில் தாகூர் வங்கப்பிரிவினையின் பொழுது எழுதிய அமர் சோனா பங்களா 1971 இல் வங்காளதேசத்தின் தேசிய கீதமாகிப் போச்சு.
இன்றைய தினம் தான் ராமானுஜர் “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திர உபதேசம் செய்தார்.
ராமானுஜர் உபதேசம்: “திருக்கோட்டியூரில்” வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் வந்தார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, “யார்?’ என்று கேட்க, “நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,” என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, “நான் செத்து வா!’ என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் “அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார். அவரை அழைத்த நம்பி, “ஓம் நமோநாராயணாய’ என்ற மந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார். ஆனால், ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார். கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார். மகிழ்ந்த நம்பி “நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார்’ என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார்.ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே நம்பியின் வீடு இருக்கிறது. இந்த வீடு “கல்திருமாளிகை’ என்றழைக்கப்டுகிறது. இக்கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.
வேர்ல்ட் பேங்க் உருவாக்கப்பட்ட நாள்
27-12-1945 உலக வங்கி என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். உலக வங்கியின் அலுவல்முறை நோக்கம் தீவிர வறுமையைக் குறைப்பதாகும். இதன் அனைத்து முடிவுகளும் வெளி முதலீடு, பன்னாட்டு வணிகம் ஆகியவற்றை முன்னேற்றுவதிலும் முதலீட்டு நிதியை அமைத்துத் தருவதிலும் ஈடுபாடு கொண்டவையாக இருக்க வேண்டும். உலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய உலக வங்கிக் குழுமத்தின் முதன்மை நிறுவனம் ஆகும். உலக வங்கி உலக வங்கிக் குழுமத்தின் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) மற்றும் பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம் (IDA) என்ற இரு நிறுவனங்களை மட்டுமே அங்கமாகக் கொண்டது. உலக வங்கிக் குழுமத்தில் இவற்றைத் தவிர மூன்று நிறுவனங்கள் அடங்கியுள்ளன[4] :பன்னாட்டு நிதிக் கழகம் (IFC), பலதரப்பு முதலீட்டு பொறுப்புறுதி முகமை (MIGA), பன்னாட்டு முதலீட்டு பிணக்குகள் தீர்வு மையம் (ICSID) உலக வங்கியும் உலக வங்கிக் குழுமத்தின் பிற அங்க நிறுவனங்களும் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டிசியில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன. தனி நிறுவனமான அனைத்துலக நாணய நிதியம் யும் சேர்த்து உலக வங்கி குழுமம், சிலசமயங்களில் “பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள்” என அழைக்கப்பெறுகின்றன. நியூ ஹாம்சயர் மாநில, பிரெட்டன் உட்ஸில் நடந்த ஐக்கிய நாடுகளின் செலாவணி மற்றும் நிதி மாநாட்டிற்கு பிறகு (1 முதல் 22 ஜூலை, 1944) இந்நிறுவனங்களுக்கு இப்பெயர் வந்தது.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நாள்.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நடைமுறைக்கு வரப்பெற்றதைத் தொடர்ந்து 1971ல் தமிழ் வளர்ச்சி இயக்ககம் தோற்றுவிக்கப்பெற்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சி மொழித் திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அமர்த்தப் பட்டாங்க. அலுவலக நிருவாக நடை முறையில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் முழுமையாக நூறு விழுக்காடு தமிழில் மட்டுமே அமைய வேண்டும். அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அனைத்து இனங்களிலும் தமிழிலே கையொப்பம் செய்ய வேண்டும். அலுவலகத்தில் சட்ட ஆணைகள், அரசாணைகள், குறிப்பாணைகள், கடிதப் போக்குவரத்துக்கள் விதிவிலக்கிற்குட்பட்டு மைய அரசு அலுவலகங்கள், பிற மாநில அலுவலகங்கள், நீதி மன்றங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், தூதரகங்கள், ஆங்கிலத்திலேயே செய்தி தொடர்பு வைத்துக்கொண்டுள்ள நிறுவனங்கள ஆகியவற்றிற்கு எழுதப்படும் கடிதங்கள் தவிர அனைத்து அலுவல்களுக்கும் தமிழில் மட்டுமே கோப்புகள் அமையப்பெற வேண்டும். -அப்படீன்னு சட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்ட நாள்.
பெனாசீர் பூட்டோ ஒரு தீவிரவாதியின் தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த பெனாசீர் பூட்டோ ஒரு தீவிரவாதியின் தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.,. அவர் பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக இருமுறை (1988–1990; 1993–1996) பதவி வகித்தார். பாகிஸ்தானின் ஒரே பெண் பிரதமர் இவர் மட்டும்தான். திட்டமிடப்பட்டிருந்த 2008 பாகிஸ்தான் பொது தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால் அவர் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தார், 27 டிசம்பர் 2007-ல் பாகிஸ்தான் நகரமான ராவல்பிண்டியில் கட்சி ஆதரவாளர்களுக்கு ஓர் உற்சாகமான உரையை அளித்த பின்னர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பேரணியில் புறப்பட்ட அவர் குண்டுதுளைக்காத வாகனத்தில் ஏறிய பின்னர், அதன் மேற்கூரையின் வழியாக கூட்டத்தை நோக்கி கையசைக்க ஏறி நின்றார். அந்த நிமிடம், ஒரு துப்பாக்கி ஏந்திய மனிதன் அவரை நோக்கி சுட்டான், அதன் தொடர்ச்சியாக வாகனத்திற்கு அருகில் வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன, இதில் சுமார் 20 மக்கள் கொல்லப்பட்டார்கள். மிகவும் கடுமையாக காயப்பட்ட பூட்டோ, ராவல்பிண்டி பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உள்ளூர் நேரம் 17:35க்கு அறுவை சிகிச்சைக்காக உள்ளே கொண்டு செல்லப்பட்ட அவர், 18:16க்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
மிர்சா காலிப் (Mirza Ghalib) பிறந்த நாள் இன்று
உருது – பாரசீக இலக்கிய உலகின் அற்புதக் கவிஞர் என்று போற்றப்படும் மிர்சா காலிப் (Mirza Ghalib) பிறந்த நாள் இன்று (டிசம்பர் 27, 1797) பெற்றோர்கள் லாகூரை சேர்ந்தவர்கள் என்றாலும் காலிப் டெல்லியில் வாழ்ந்தவர். 11 வயதில் உருது மொழியில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்கான சோதனைகள், சோகங்களை அனுபவித்தார். இதனால் வாழ்க்கையில் எதார்த்தப் போக்கை கடைபிடித்தார். இவரது படைப்புகளிலும் இது பிரதிபலித்தது. அன்றைய காலகட்டத்தின் சமூக, அரசியல், பொருளாதார நிலை குறித்த வர்ணனைகளும் இடம்பெற்றன. மாபெரும் கவிஞர், உரைநடை எழுத்தாளர் எனப் பிரபலம் அடைந்தாலும் உருது கஜல்களுக்காகவே கொண்டாடப்படுகிறார். தத்துவம், பயணங்கள், வாழ்க்கையின் மர்மங்கள் மற்றும் பல விஷயங்கள் குறித்து எழுதினார். இதனால், உருது இலக்கியத்தில் கஜல்களின் களங்கள் விரிவடைந்தன.. உருது இலக்கியம் எளிமை வடிவம் பெறவும், பிரபலமாகவும் இவரது உரைநடை பாணி அடித்தளம் அமைத்தது. இவரது படைப்புகள் எளிமையாக, சரளமாக இருந்ததால், ‘தற்கால உருது உரைநடையின் தந்தை’ என்று குறிப்பிடப்பட்டார். இவரது நடை, வாசகரோடு பேசுவது போல இருக்கும்.. இவரது படைப்புகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உருது, பாரசீக காவிய உலகுக்கு உயர்ந்த அந்தஸ்தை பெற்றுத் தந்த மிர்சா காலிப் 72-வது வயதில் (1869) மறைந்தார்.
சர்தார் உஜ்ஜல் சிங் பிறந்த நாள்
டிசம்பர் 27, 1895 சர்தார் உஜ்ஜல் சிங் பிறந்த நாள். இவர் பஞ்சாப் மாநில கவர்னாரகவும்பின்னர் தமிழக கவர்னராகவும் (28.06.1966 -16.06.1967) பணியாற்றிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஆவார் முன்னதாகஇவர் அங்கியேலய ஆட்சி காலத்தில் முதல் சுற்று வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார். இவரது அண்ணன் சோபா சிங் ஓர் கட்டிட கட்டமைப்பாளராக 1911-1930 காலத்தில் புது டெல்லியின் கட்டமைப்பில் முதன்மை ஒப்பந்தப் புள்ளிக்காரராகப் பங்கேற்றுள்ளார். மேலும் இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் தந்தையின் உடன்பிறந்த தம்பி ஆவார். தமிழ்நாட்டில் திமுக தலைவர் அறிஞர் அண்ணாவுக்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தவர் இவர்தான்.
மேரி பென்னிங்டன் நினைவு தினம்.
மேரி எங்கல் பென்னிங்டன் (Mary Engle Pennington, அக்டோபர் 8 1872; டிசம்பர் 27 1952) அமெரிக்க வேதியியலாளர். எப்போதும் குளிராக இருக்கும்படி அம்மோனியா வாயுவைக் கொண்டு இரட்டைச்சுவர் முறையில் ஒரு ரெயில்பெட்டியை உருவாக்கியவர். உலகின் எந்த மூலையில் உள்ள ஓர் இடத்துக்கும் கெடாமல் பொருட்களை எடுத்துச்செல்லும் இம்முறையைக் கண்டறிந்ததன் மூலம் குளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்டவர். பால் பதனிடும் முறையைக் கண்டுபிடித்தவர்.
ஹேகியா சோஃபியா, கான்ஸ்ட்டாண்ட்டிநோப்பிளில் பேரரசர் ஜஸ்டீனியனால் திறக்கப்பட்ட நாள்
கட்டிடக்கலையின் வரலாற்றை மாற்றியமைத்த கட்டிடமாகக் குறிப்பிடப்படும் ஹேகியா சோஃபியா, கான்ஸ்ட்டாண்ட்டிநோப்பிளில் பேரரசர் ஜஸ்டீனியனால் திறக்கப்பட்ட நாள் பைசாந்தியக் கட்டிடக்கலையின் உச்சமென்று புகழப்படும் இந்தப் பேராலயம், 1520இல் செவில் பேராலயம் கட்டப்படும்வரை, 269 அடி நீளம், 240 அடி அகலம், 180 அடி உயரத்துடன், உலகின் மிகப்பெரிய கட்டிடமாகத் திகழ்ந்தது. 1532இல் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் 10 மாதங்களில் கட்டப்பட்ட இது, அக்காலத்திய தேவாலயங்களைப் போல் பெரிய கற்களால் கட்டப்படாமல், செங்கல் கட்டிடமாகப் கட்டப்பட்டது. செங்கற்களுக்கிடையில், மணலும், நுண்ணிய பீங்கான் துகள்களும் கலந்த கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்காலத்திய கான்க்ரீட் அளவுக்கு உறுதியானதாக இக்கலவை அக்காலத்தில் கருதப்பட்டது. திறக்கப்பட்டுவிட்டாலும், மொசைக் ஓவியங்கள் அமைப்பது, சுமார் 30 ஆண்டுகள் கழித்து, பேரரசர் இரண்டாம் ஜஸ்டின் காலத்தில்தான் நிறைவுற்றது. திறக்கப்பட்டதிலிருந்து 1453வரை, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு, கிழக்கத்திய பழைமைவாத திருச்சபையின் தலைமைப் பேராலயமாகவும், கிறித்தவ ஒன்றிப்பின் தலைமையிடமாகவும் இது விளங்கியது. இடையில், நான்காம் சிலுவைப் போரின்போது, 1204இல் கத்தோலிக்கர்களால் கைப்பற்றப்பட்டு 1261வரை கத்தோலிக்கப் பேராலயமாக மாற்றப்பட்டிருந்தது. ஹேகியா சோஃபியா என்றால் கிரேக்க மொழியில் புனித அறிவு என்று பொருள். 1453இல் 21 வயதேயான ஒட்டோமான் பேரரசர் இரண்டாம் மெஹ்மூத் கான்ஸ்ட்டாண்ட்டிநோப்பிளைக் கைப்பற்றி, இஸ்தான்புல்-லாக்கியபோது, சேதப்படுத்தப்பட்ட நகரின் பல பகுதிகளும் அப்படியே கைவிடப்பட்டாலும், இந்த மாபெரும் கட்டிடத்தின்மீதான ஈர்ப்பு, இதனை மசூதியாக மாற்றி, பராமரிக்கச் செய்தது. கிறித்தவ மொசைக் ஓவியங்கள் சேதப்படுத்தப்பட்டு, அல்லது, மூடப்பட்டு, மசூதிக்கான சில அமைப்புகள் சேர்க்கப்பட்டதைத்தவிர, வேறு மாற்றங்கள் செய்யப்படாமல் இது பாதுகாக்கப்பட்டது. 1616இல் சுல்தான் அஹ்மெத் மசூதி திறக்கப்படும்வரை, இத்தான்புல்லின் முதன்மை மசூதியாக இது இருந்தது. துருக்கி விடுதலையடைந்தபின், 1931இல் மூடப்பட்ட இந்த மசூதி, 1935இல் மதச்சார்பற்ற ஓர் அருங்காட்சியகமாகத் திறக்கப்பட்டது. ஹேகியா சோஃபியாவிற்கு முன்பு அதே இடத்தில், 360இல் திறக்கப்பட்ட தேவாலயம் 404இலும், 415இல் கட்டப்பட்ட தேவாலயம் 532இலும் எரிக்கப்பட்டுள்ளன. முதல் தேவாலயத்தின் எச்சங்கள் எதுவுமில்லாத நிலையில், இரண்டாவது தேவாலயத்தின் பல பகுதிகளையும் உள்ளடக்கி, மத வழிபாடு தடைசெய்யப்பட்ட அருங்காட்சியமாகவுள்ள இதற்கு ஆண்டுக்கு 33 லட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர்.
ஃப்ளஷிங் கண்டன மனு உருவான நாள்
அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் உரிமைகள் சாசனத்தில்(பில் ஆஃப் ரைட்ஸ்) இடம்பெற்றுள்ள சமயச் சுதத்திரத்திற்கு அடிகோலிய ஆவணமாகக் குறிப்பிடப்படும், ஃப்ளஷிங் கண்டன மனு உருவான நாள் தற்போது, நியூயார்க்கின் புறநகர்ப் பகுதியாக இருக்கும் ஃப்ளஷிங், அக்காலத்திய டச்சுக் குடியேற்றமான நியூநெதர்லாந்திற்குட்பட்ட, வ்லிஸிஞ்சென் என்ற கிராமமாக இருந்தது. டச்சு மேற்கிந்தியக் கம்பெனியால் உருவாக்கப்பட்டிருந்த இந்தக் குடியேற்றத்தின் தலைமை இயக்குனராக(டைரக்டர் ஜெனரல்! கம்பெனிதானே!) பீட்டர் ஸ்டூய்வெசண்ட் என்பவர் இருந்தார். இவர்தான், நெதர்லாந்தின் திருச்சபையான, சீரமைக்கப்பட்ட டச்சு திருச்சபையைத் தவிர, வேறு சமயங்களைப் பின்பற்றுதல், அவற்றின் வழிபாட்டுக் கூட்டங்களை நடத்துதல் ஆகிய அனைத்தையும் சட்டவிரோதம் என்று ஓர் அவசரச் சட்டத்தை 1656இல் பிறப்பித்தார். இந்தக் குடியேற்றத்தில் ஏராளமான ஆங்கிலேயர்கள் முன்பே குடியேறியிருந்தனர். அவர்களுக்கு அனுமதியளித்த வில்லெம் கீஃப்ட் என்ற ஆளுனர், அவர்களுக்கு, நெதர்லாந்தின் மாநிலமான ஹாலந்தில் நடைமுறையிலிருப்பதுபோன்ற சமயச் சுதந்தரமும் அளிக்கப்படுவதாக அறிவித்திருந்தார். அக்காலத்திய, ஐரோப்பியக் கண்டத்திலேயே அதிக சமயச் சுதந்திரம் அளிக்கப்பட்ட பகுதியாக ஹாலந்து விளங்கியது. (இன்றும் மிகுந்த சமசயச் சார்பின்மைகொண்ட மேற்கத்திய நாடுகளுள் குறிப்பிடத்தக்கதாக நெதர்லாந்து விளங்குகிறது!) ஆனால், அக்குடியேற்றத்திலிருந்த ஆங்கிலேயர்களில் பலர், நண்பர்கள் திருச்சபை(க்வேக்கர்) என்ற கிறித்தவப் பிரிவைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர். பழைமைவாதிகளான பல ஆங்கிலேயர்கள் இந்த நடவடிக்கையை ஆதரித்தாலும், பிற சமய வழிபாடுகளில் ஈடுபட்டவர்கள்மீது, அபராதம், சிறைத் தண்டனை, நாடு கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏராளமாக மேற்கொள்ளப்பட்டன. நகர எழுத்தர் எட்வர்ட் ஹார்ட் உருவாக்கிய மனுவில், 30 டச்சுக் காரர்கள் கையெழுத்திட்டனர். இவர்கள் க்வேக்கர்கள் அல்ல என்பதும், வேறு சமயப்பிரிவைப் பின்பற்றியவர்களான க்வேக்கர்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்களுக்கெதிராகக் குரல் கொடுத்தார்கள் என்பதும், அடிப்படை உரிமையாக சமயச் சுதந்திரம், பிறரது உரிமைக்கும் குரல் கொடுத்தல் உள்ளிட்ட அடிப்படைகளில் உரிமைகளின் சட்டத்திற்கு வழிகாட்டியாக அமைந்ததாக இது குறிப்பிடப்படக் காரணமாகியது. ஹார்ட் சிறையிலடைக்கப்பட்டார். க்வேக்கர்கள் வழிபட தன் வீட்டில் இடமளித்த ஜான் போன், ஹாலந்துக்காரர் அல்லாதபோதும் 1662இல் ஹாலந்துக்கு நாடுகடத்தப்பட ஸ்டூய்வெசண்ட உத்தரவிட, பிரச்சினை கம்ப்பெனிக்குச் சென்றதும் சமய சுதந்திரத்தில் தலையிடவேண்டாமென்று ஸ்டூஸ்வெசண்ட்டை கம்ப்பெனி அறிவுறுத்தியது. 1664இல் இக்குடியேற்றமே ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டபின், ஜான் போனின் வீடு நினைவுச்சின்னமாக்கப்பட்டு சமய சகிப்புத்தன்மைக்கான அடையாளமாக இன்றும் பாதுகாக்கப்படுகிறது!
பல்துறை வித்தகர் மன்னர் பாஸ்கர சேதுபதி இறந்த தினம்.
சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பியவர் இந்த சேதுபதி அரசர்! வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டுக்குச் சென்று உலகச் சமய மாநாட்டில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்றி உலகத்தின் ஏனைய பகுதியினருக்கு நம் தத்துவச் செழுமையை உணர்த்தினார். இதற்கு வழி வகுத்தவர் அக்காலத்தில் இராமநாதபுரம் அரசராக இருந்த பாஸ்கரசேதுபதி ஆவார். அவர் தமக்கு வந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் தம்மை விட சுவாமி விவேகானந்தர் சென்று உரையாற்றினால் நாட்டுக்கும், உலகுக்கும் பயன் விளையும் எனக் கருதினார். சுவாமி விவேகானந்தருக்கும், பாஸ்கர சேதுபதிக்கும் பொதுவான நண்பர் நீதியரசர் சுப்பிரமணிய ஐயர். சேதுபதியின் வேண்டுகோளை சுவாமி விவேகானந்தருக்குத் தெரிவித்தார். சுவாமி விவேகானந்தர் முதலில் தயங்கினாலும் பின்னர் ஏற்றுக்கொண்டார். சேதுபதி மன்னர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.சுவாமி விவேகானந்தரின் அமெரிக்கப் பயணத்திற்குத் தேவையான செலவுகள் அனைத்தையும் பாஸ்கர சேதுபதியே ஏற்றார். 1893-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவிற்குப் பயணமானார். அங்கே சுவாமி விவேகானந்தரின் எழுச்சி மிக்க தோற்றம் மட்டுமல்ல, அவருடைய சிந்தனையைத் தூண்டும் பேச்சும் ஆங்கிலேய மக்களைக் கவர்ந்தது. நான்காண்டுகளுக்குப் பின் 1897-ஆம் ஆண்டில் பாம்பன் துறைமுகத்தில் சுவாமி விவேகானந்தர் வந்து இறங்கியபோது மன்னர் பாஸ்கரசேதுபதி, சுவாமி விவேகானந்தரின் பாதங்களைத் தரையில் பட விடாமல், தன் தலையில் வைத்து இறங்குமாறு கேட்டுக்கொண்டாராம். அத்துடன் விவேகானந்தரை பீரங்கிகள் முழங்க ஒரு மன்னரை வரவேற்பது போல் வரவேற்று அரண்மனைக்குள் அழைத்துச் சென்றார். மேலும் கோவில்களுக்கும் மிகுந்த தான தருமங்களை வாரி வழங்கினார். திருவாவடுதுறை மடத்துக்கு இரண்டாயிரம் ஏக்கர் நிலங்களைத் தானமாக வழங்கினார். அதனைக் கேள்விப்பட்ட சிருங்கேரி மடத்தலைவர் “உங்கள் அரண்மனையை எனக்குத் தானமாகக் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டாராம். உடனடியாக அவ்வாறே கொடுத்துவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறினார் பாஸ்கரசேதுபதி. அதனை ஏற்றுக்கொள்ளாமல் சிருங்கேரி மடத்தலைவர் திருப்பிக் கொடுத்துவிட முயன்றார். ஆனால் பாஸ்கரசேதுபதி கொடுத்த பொருளைத் திரும்பி வாங்கிக் கொள்ளல் தமிழ்ப்பண்பு அல்ல என மறுத்துவிட்டாராம். மிகவும் மனம் வருந்திய சிருங்கேரி மடத்தலைவர் அரண்மனையைத் திரும்ப மன்னரின் மகன் முத்துராமலிங்க சேதுபதிக்கே தானமாகத் தந்துவிட்டார். இன்றைக்குப் பெரிதும் வலியுறுத்தப்படும் சமயநல்லிணக்கம் பாஸ்கர சேதுபதியால் அன்றே சிறப்பாகப் பின்பற்றப்பட்டது. கிறிஸ்தவத் திருமுறையாகிய விவிலியத்தில் பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி இரண்டு மணிநேரம் இவர் ஆற்றிய சொற்பொழிவு அன்று எல்லோராலும் வியப்புடன் பாராட்டப்பட்டது. பல்வேறு ஆலயங்களுக்கு விலையுயர்ந்த நகைகளை வழங்கியுள்ளார். தமது அரண்மனை ஊழியர் நாகூர் பள்ளிவாசல் சென்றுவர விரும்புகிறார் என்பதையும் அவருக்குப் பொருளுதவி தேவை என்பதையும் அறிந்து அவர் குடும்பத்துடன் நாகூர் சென்றுவர உதவியுள்ளார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்கு உயர்நிலைப்பள்ளிக் கட்டிடம் கட்ட உதவி செய்துள்ளார். இராமநாதபுரத்தில் ஆதிதிராவிட குழந்தைகளுக்கு விடுதி அமைக்க நன்கொடை வழங்கியுள்ளார். மதுரை அமெரிக்க மிஷன் மருத்துவமனைக்கும் பொருளுதவி செய்துள்ளார். சுவாமி விவேகானந்தர் “கலியுகத்து ராஜரிஷி” என்று பாஸ்கரசேதுபதிக்குப் பட்டமளித்தார். தம் அன்பிற்கும், மதிப்பிற்கும் பாத்திரமான விவேகானந்தர் இறந்தபோது மன்னர் பாஸ்கரசேதுபதி மிகவும் மனம் உடைந்து போனார். மன்னர் பாஸ்கரசேதுபதிக்கு முதுகில் “ராஜபிளவை” என்னும் கட்டி வந்து தொல்லை கொடுத்தது. 1903-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி தமது முப்பத்தைந்தாவது வயதிலேயே இறந்துவிட்டார். பாஸ்கர சேதுபதியை கவுரவிக்கும் விதத்தில் மத்திய அரசு அவருக்கு தபால் தலை வெளியிட்டு கௌரவித்தது. சுவாமி விவேகானந்தர் புகழ்வரலாறும், மதுரை தமிழ்ச்சங்கத்தின் மாண்பும் மன்னர் பாஸ்கரசேதுபதி நினைவை நிலைநிறுத்தும் என்பதில் ஐயமில்லை. தமிழ்மொழிக்குத் தொண்டாற்றித் தமிழ்வளர்ச்சியை மேலோங்கச் செய்வதே மதுரை தமிழ்ச்சங்கம் கண்ட அந்தப் பெருந்தகைக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.