முன்னாள் பிரதமர் ‘மன்மோகன் சிங்’ காலமானார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு காலமானார். இந்தியாவின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங் (92) கடந்த 1932 செப்.26-ல் மேற்கு பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 1991-96 நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார். பொருளாதார வல்லுநரான இவர் இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்துக்கு வித்திட்டவர். ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் பதவி வகித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004 மே மாதம் முதல் 2014 மே மாதம் வரை என தொடர்ந்து 2 முறை பிரதமராக பதவி வகித்தார். மன்மோகன் சிங்குக்கு ஏற்கெனவே இதயநோய் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (டிச.26) இரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனுடன் அவர் நினைவிழந்து மயக்கமும் அடைந்தார். இதையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரை காண காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திரண்டு வந்த வண்ணம் இருந்தனர்.
மத்திய அமைச்சர் நட்டாவும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதற்கிடையே, எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இந்நிலையில், மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மன்மோகன் சிங் நேற்று இரவு காலமானார்.