சபரிமலைக் காட்டு பாதையில் பக்தர்கள் செல்ல நேரம் நீட்டிப்பு..!
சபரிமலை உற்ஸவத்தையொட்டி காட்டு பாதையில் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அந்த வழிகளில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டது.
இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறில் இருந்து சத்திரம், புல்மேடு வழியாக 26 கி.மீ., தொலைவில் சபரிமலை சன்னிதானம் உள்ளது. வண்டிபெரியாறில் இருந்து 14 கி.மீ., தொலைவில் உள்ள சத்திரம் வரை வாகனங்களில் சென்று, அங்கிருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள சபரிமலைக்கு புல்மேடு வழியாக காட்டு பாதையில் நடந்து செல்ல வேண்டும். தவிர அழுதகடவு, முக்குழி ஆகிய பகுதிகள் வழியாகவும் செல்லலாம். அந்த வழிகளில் சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், நேரத்தை நீட்டித்து இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார்.
அழுதகடவில் இருந்து காலை 7:00 முதல் மதியம் 2:30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அது மதியம் 3:30 மணி வரையும், முக்குழியில் இருந்து காலை 7:00 முதல் மதியம் 3:00 மணி வரை அனுமதிக்கப்பட்ட நிலையில், அது மாலை 4:00 மணி வரையும் நீடிக்கப்பட்டது. சத்திரத்தில் இருந்து செல்லும் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
அங்கிருந்து காலை 7:00 முதல் மதியம் 1:00 மணி வரை வழக்கம்போல் செல்லலாம். அதே போல் சபரிமலையில் இருந்து சத்திரத்திற்கு திரும்பவதிலும் எவ்வித மாற்றமும் இன்றி காலை 8:00 முதல் 11:00 மணி வரை திரும்பலாம்.