தமிழ்நாட்டில் பள்ளிகளில் ‘ஆல் பாஸ்’ நடைமுறையேத் தொடரும்..!

 தமிழ்நாட்டில் பள்ளிகளில் ‘ஆல் பாஸ்’ நடைமுறையேத் தொடரும்..!

தமிழக பள்ளிகளில் ஆல் பாஸ் நடைமுறையே தொடரும், அதில் மாற்றம் இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

தமிழகத்தில் அனைத்து பள்ளிக்குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளை திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி நடத்தப்படும் மத்திய அரசு பள்ளிகளுக்கு இந்த புதிய நடைமுறை பொருந்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், தடையின்றி எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறுவதில் ஒரு தடைக்கல்லை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது.

தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாமல் நமது மாநிலத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக நமது அரசு தொடங்கிய பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன.

தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

எனவே, தமிழகத்தில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்த வகையிலும் குழப்பமடையத் தேவையில்லை.

தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்பதை அழுத்தந்திருத்தமாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

கல்வி தான் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தின் அடித்தளம். எனவே, மாணவர்கள் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் திராவிட மாடல் அரசின் இலக்கு.

இந்த இலக்கை எய்தி, இந்திய துணைக் கண்டத்திற்கே, தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக தொடர்ந்து விளங்கும்.

அதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து தொய்வின்றி, தமிழக அரசு முன்னெடுத்துச் செல்லும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...