ஹிமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு..!
ஹிமாச்சல பிரதேசத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் 700 சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் சிக்கித் தவித்தனர். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. நேற்றைய தினம் அங்கு வெப்பநிலை மைனஸ் 7 டிகிரியாக பதிவானது. எங்கு பார்த்தாலும் பனி சூழ்ந்து காணப்படுகிறது. அடர் பனிப்பொழிவால் ரோஹ்டாங் சோலாங், அடல் சுரங்கப் பாதையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கின. அதில் இருந்த 700க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.
எங்கும் நகரமுடியாத அளவுக்கு வாகனங்கள் சிக்கிக் கொள்ள, போலீசார் அவற்றை ஒழுங்குபடுத்தும் பணியில் இறங்கினர். உள்ளூர் மக்களும் போலீசாருக்கு உதவி செய்தனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை எதிரொலியாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஹிமாச்சல பிரதேசத்தில் குவிந்துள்ளனர்.
சிம்லா, மணாலி உள்ளிட்ட பல பகுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன.