திருவெம்பாவை பாடல் 8
திருவெம்பாவை பாடல் 8
கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.
பொருள்: தோழியை எழுப்ப வந்த பெண்கள், அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின் றன. நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே! இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.
விளக்கம்: இறைவன் மனிதர்களின் உள்ள இருளைப் போக்குபவர். பனிபடர்ந்த இருள் சூழ்ந்த மார்கழி காலையை சூரியன் எப்படி பிரகாசமாக்குகிறானோ, அதுபோல் ஆணவம், பொறாமை, அறியாமை ஆகிய இருள் சூழ்ந்த மனதை சிவபெருமான் ஒளி வெள்ளமாக்குகிறார் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.