இன்றைய முக்கிய நிகழ்வுகள் (23.12.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (23.12.2024)

பி.கக்கன் நினைவு நாள்

உலக வரலாறிலேயே உயர்திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் கக்கன் அவர்கள் ஒரு வைரகல். மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடு களுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட மாமனிதர் அவர். மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார். காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அவர் மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்ன போது கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்கவில்லை. சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றனர். இந்திய சுதந்திரத்திற்க்கு பின் தமிழ்நாடு கங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனம் என்று அதிகார வர்கத்தால் பிரிக்கபட்ட மனித இனதின் முதல் மனிதர் கக்கன். தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார். கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார். விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களேயே ஆரம்பிக்கபட்டது. அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார். அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது உறவினரின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார். பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 – தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார். கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார். விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைப் போய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன். கடைசிக் காலத்தில், வறுமையில் வாடியது கண்டு,.பழ நெடுமாறன், மதுரையில் நிதி திரட்டி வந்த நிதியை நிலையான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11,000 திருப்பித் கொடுக்கிறார். அவர் நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை என மறுத்து போதும் அந்த பணத்தை திருப்பித் தந்து விடுகிறார். டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் ? செலுத்த வேண்டும் என்கின்றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை என கூறி பணத்தை திருப்பி கொடுத்தார் . இப்படிப்பட்ட ஒரு அமைச்சரை உலகின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார். எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது.

நாடகக் கலைஞர் கூத்தபிரான் காலமான தினமின்று

தனது வாழ்க்கையை, அகில இந்தியா வானொலியில், அறிவிப்பாளராக ஆரம்பித்த கூத்தபிரான், குழந்தைகளுக்காக, நாடகங்களை எழுதி இயக்கி நடிக்கச் செய்தார். வானொலி அண்ணா’ என்று அழைக்கப்படும் கூத்தபிரான், குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை கற்பிக்கும் பொருட்டு, 800க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். எண்ணற்ற வானொலி நாடகங்களை எழுதி இயக்கியுள்ள அவர் 7,000-க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார். ஐந்து தலைமுறை மக்களை மகிழ்வித்த கூத்தபிரான், பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2003ம் ஆண்டில், மாநில அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. மியூசிக் அகாடமி, நாடக கலா சிரோன்மணி விருது வழங்கி கெளரவித்தது. சென்னை தியாகராய நகர் ராமாராவ் கலா மண்டபத்தில் “ஒரு ரோபோவின் டைரி’ என்ற நாடகத்தில் அவர் கடைசியாக நடித்தார்.இந்த நாடகத்தை இயக்கியவர் அவரது மகன் என். ரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்றவர் அங்கேயே மாரடைப்பால் காலமானார்.

தேசிய உழவர் தினம்

கிசான் திவாஸ் அல்லது தேசிய உழவர் தினம் டிசம்பர் 23 (இன்று) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்திய ஐந்தாவது பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான டிசம்பர் 23ம் தேதியை முன்னிட்டு இந்த நாள் தேர்வு செய்யப்பட்டது. பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, இந்தியாவின் 5-வது பிரதமராக சவுத்ரி சரண் சிங் பதவியேற்றார். பின்னர் 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் இவர். அவருடைய ஆட்சியின்போதே உழவர்களின் விளைபொருள் விற்பனைக்காக வேளாண் விளைபொருள் சந்தை மசோதாவையும் அறிமுகப்படுத்தினார். இதே போன்று அவர் ஆட்சியின் போது உழவர்களின் நலன்களுக்காக சில முக்கிய திட்டங்களை கொண்டு வந்தார். மேலும் விவசாயிகள் குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் பல்வேறு புத்தகங்களை சவுத்ரி சரண் சிங் எழுதியுள்ளார். இந்த நிலையில், நாட்டில் அனைவருக்கும் போதுமான உணவு இருப்பதை உறுதி செய்வதற்காக அவர்கள் செய்த பணியை மதிக்கும் பொருட்டு, அவரது பிறந்த நாளிலேயே அதாவது டிசம்பர் 23ம் தேதி கிசான் திவாஸ் அல்லது தேசிய உழவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிகு: ஆனால் இன்று விவசாயிகள் தங்கள் தேவை/ஆதங்கத்தைக் கொட்ட வாய்ப்புக் கொடுக்க அரசின் பிடியில் சிக்கி மூச்சு திணறிக் கொண்டிருப்பதும் நினைவுக்கு வருகிறது.

உலகின் முதன்முதலான மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்ட நாள்:

23-12-1954 மனிதனின் உடலில் பல்வேறு பாகங்கள் செயல்படாமல் போனால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு மற்றவர்களிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வசதி தற்போது தாராளமாக செயல்படுகிறது. அந்த வகையில்தான் மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முதன் முதலாக அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 1954-ம் ஆண்டு இதே டிசம்பர் 23-ந்தேதி மேற்கொள்ளப்பட்டது.

பி. வி. நரசிம்ம ராவ் காலமான நாள்

டிசம்பர் 23 நேரு மற்றும் காந்தி வம்சாவழியில் வராமல், முழு ஐந்து ஆண்டுகள் பதவியில் சிறப்பாக சேவை செய்த இந்தியாவின் முதல் பிரதம மந்திரி நினைவுக் கூறப்பட்டவர் பி.வி. நரசிம்ம ராவ் . இவர் மட்டுமே தென்னிந்தியாவில் இருந்து வந்து, ஒரு முழு கால ஆட்சி செய்து, நாட்டை ஆண்ட முதல் அரசியல்வாதி ஆவார். 5 லட்சம் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வென்று, அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சாதனைப் படைத்தார், . பெரிய அளவில் பொருளாதார மாற்றம் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு பாதிக்கும் பல சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது ஆட்சியின் போது நாட்டின் நலனுக்காக பல்வேறு சேவைகள் செய்து சாதனைகள் நிகழ்த்தினார். அவரை “இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை” என்றும் தொழில், பொருளாதாரம் மற்றும் அரசியல் சட்டத்தில் அவரது சிறப்பான மற்றும் தனிதத்துவமான பங்களிப்பைக் கண்ட சில மக்கள் அவரை “சாணக்யர்” என்றும் அழைத்தனர். எனினும், ‘ஒவ்வொரு நாணயத்திலும் இரண்டு பக்கங்கள் உண்டு’ என்பதைக் குறிக்கும் விதமாக நரசிம்ம ராவ் அவர்கள், பிரதம மந்திரியாக இருந்த போது, அயோத்தியில் பாபர் மசூதி தகர்ப்பு கண்ட நிகழ்வு, இந்திய தேசிய வரலாற்றில் ஒரு பரபரப்பூட்டும் நிகழ்ச்சியாக இருந்தது. இது தவிர, அவரது ஆட்சிக் காலத்தில், அவர் பல ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டிருந்தார் என்று பல பேச்சுகளும் இருந்தது.

ஏ.கே.47 ரக துப்பாக்கியை உருவாக்கிய ரஷ்யாவின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் மிகைல் கலாஷ்னிகோவ் நினைவுதினம் இன்று..

(2013) உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இயந்திரத் துப்பாக்கி ஏ.கே.47. இதுவரை 10 கோடிக்கும் அதிகமான ஏ.கே.47 துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகியுள்ளன. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் இத்துப்பாக்கியை வடிவமைக்கத் தொடங்கிய அவர் போர் முடிந்த பின்பு அதனை முழுமையாக்கினார். 1949-ம் ஆண்டு சோவியத் ரஷ்ய ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக இத்துப்பாக்கி பயன்பாட்டு வந்தது. மிகவும் நவீனமானது, பயன்படுத்த எளிதானது, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டாலும், நீண்டநாள்கள் உழைக்கக் கூடியது என்பதால் இத்துப்பாக்கி சர்வதேச அளவில் எளிதில் பிரபலமானது. கலாஷ்னிகோவின் ஆட்டோமேட்டிங் துப்பாக்கி 1947-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது என்பதை உணர்த்தும் வகையிலேயே அத்துப்பாக்கிக்கு ஏ.கே.47 என்று பெயரிடப்பட்டது. கலாஷ்னிகோவ்வின் 90-வது பிறந்த நாளின்போது மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது பேசிய கலாஷ்னிகோவ், எனது கண்டுபிடிப்பான ஏ.கே.47 துப்பாக்கி சமூக விரோதிகள், பயங்கரவாதிகளால் அப்பாவிகளைக் கொல்ல பயன்படுத்தப்படுவதைக் கேள்விப்படும்போது மிகவும் வேதனை ஏற்படுகிறது. நம் நாட்டின் எல்லையைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இத்துப்பாக்கியை வடிவமைத்தேன். ஆனால் இப்போது அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆட்சியாளர்களின் தவறும் அதிகம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

‘பாலின தகுதியின்மை (நீக்க) சட்டம் 1919’ அரச ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்த நாள்

1919 – இங்கிலாந்தில் நிலவிய, பெண்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்ற முடியாத நிலையை முடிவுக்குக் கொண்டுவந்த ‘பாலின தகுதியின்மை (நீக்க) சட்டம் 1919’ அரச ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்த நாள் இங்கிலாந்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் எலிஸா ஓர்ம். இவர், 1888இல் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டம் பெற்றாலும், சொலிசிட்டராகவோ, பாரிஸ்ட்டராகவோ பணியாற்ற அனுமதிக்கப்பட்டவில்லை. இங்கிலாந்தில் வழக்கறிஞர்கள் இரு வகையாக உள்ளனர். சொலிசிட்டர் என்பவர் பொதுவாக நீதிமன்றத்திற்கு வெளியே சட்ட ஆலோசனைகள் வழங்குதல், சட்ட ஆவணங்களுக்கான வரைவு உருவாக்குதல் முதலான பணிகளிலும், பாரிஸ்ட்டர் என்பவர் நீதிமன்றத்தில் வாதாடுபவராகவும் உள்ளனர். இருதரப்பும், மற்றவரின் பணிகளையும் செய்வதும் நிகழ்ந்தாலும்கூட, மேல் நீதிமன்றங்களில் வாதாட பாரிஸ்ட்டர்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு. சொத்து வாங்குதல், விற்பதில் சட்ட நடவடிக்கைகளைக் கவனித்துக்கொள்ளும் கன்வேயன்சர் என்ற தொழிலுக்கு வழக்கறிஞராக இருப்பது அவசியமில்லை என்பதால், வழக்கறிஞராக அனுமதிக்கப்படாத ஓர்ம் அத்தொழிலில் ஈடுபட்டார். நீதித்துறையில் பெண்களுக்கு அனுமதியில்லாத நிலைகுறித்து, 1914இல் தொடுக்கப்பட்ட வழக்கில்கூட, மேல்முறையீட்டு நீதிமன்றம், நபர்(பர்சன்) என்பதற்கான சட்ட வரையறையில் பெண்கள் இடம்பெறவில்லை என்றே தீர்ப்பளித்தது. அப்படியான சூழலில்தான் இச்சட்டம் இயற்றப்பட்டு, 1922இல் ஐவி வில்லியம்ஸ் முதல் பெண் வழக்கறிஞரானார். (அவர் வழக்கறிஞராகப் பணியாற்றவே இல்லை என்பது தனிச்செய்தி!) இங்கிலாந்தின் ஆளுகையின்கீழிருந்த கனடா, 1897இலேயே பெண்களை வழக்கறிஞர்களாக அனுமதித்துவிட்டது. க்ளாரா ப்ரெட் மார்ட்டின் முதல் பெண்ணாக 1891இல் சட்டத்தில் பட்டம் பெற்றபோது, இதே ‘பர்சன்’ வரையறையால் வழக்கறிஞராக அனுமதி மறுக்கப்பட்டார். ஒண்ட்டாரியோ சட்டமன்ற சபாநாயகராக இருந்த வில்லியம் டக்ளஸ் பால்ஃபோர்ட், இந்த வரையறையைத் திருத்த ஒரு சட்டத்தை முன்மொழிந்தார். 1892இல் அது நிறைவேற்றப்பட்டு, க்ளாரா முதல் பெண் வழக்கறிஞரானார். நெதர்லாந்து 1903இலும், நார்வே 1904இலும், டென்மார்க் 1909இலும் பெண்களை நீதித்துறையில் அனுமதித்துவிட்டன. இவற்றுக்கு முன்பே 1869இல் அமரிக்காவில் ஆரபெல்லா மான்ஸ்ஃபீல்ட் என்ற பெண் வழக்கறிஞராகியிருந்தாலும், ஃப்ரெஞ்ச்சுப் புரட்சிக் காலத்தில் ஃப்ரான்சில் வழக்கறிஞராகப் பணியாற்றிய விக்டோரீ-டி-விலிரோவெட் என்வரும், 1500இலேயே இத்தாலிய நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய கியுஸ்ட்டினா ரோக்கா என்பவருமே தற்கால உலகின் முதல் பெண் வழக்கறிஞர்கள் என்ற பெருமைக்குரியவர்கள்!

ஃபெடரல் ரிசர்வ் (சிஸ்டம்), ஃபெடரல் ரிசர்வ் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட நாள்

1913 – அமெரிக்காவின் மத்திய வங்கியான, ஃபெட் என்றழைக்கப்படும் ஃபெடரல் ரிசர்வ் (சிஸ்டம்), ஃபெடரல் ரிசர்வ் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட நாள் வங்கிகளின் தவறான நடவடிக்கைகளால் அடுத்தடுத்து ஏற்பட்ட நிதித்துறை நெருக்கடிகளை, குறிப்பாக 1907இல் நியூயார்க் பங்குச்சந்தையை 50 சதவீதம் அளவுக்குச் சரியச் செய்த நெருக்கடியைத் தொடர்ந்து, வங்கிகளை நெறிமுறைப்படுத்தவும், நாணய மதிப்பைப் பராமரிக்கவும் இதை அமெரிக்க அரசு உருவாக்கியது. 1776இல் விடுதலை பெற்ற நாட்டுக்கு 1913 வரை மத்திய வங்கி இல்லையா? எனில் நாணயத்தை வெளியிடும் பணியை கருவூலத்துறைதான் மேற்கொண்டிருந்தது. அதன் செயலாளரான அலெக்சாண்டர் ஹாமில்ட்டன் முயற்சியில் 1791இல் அமெரிக்காவின் (முதல்) மத்திய வங்கி தொடங்கப்பட்டாலும், அதைத் தொடர்ந்து நடத்த அரசு அக்கறை காட்டவில்லை. மத்திய வங்கி இல்லாத நிலையில் 1812 போரில் ஈடுபட்டதால் ஏற்பட்ட நெருக்கடிகள் அமெரிக்காவின் (இரண்டாம்) மத்திய வங்கியை 1816இல் தொடங்கச் செய்தன. ஆனால், மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுவதைத் தனியார் வங்கிகள் விரும்பாததால், 1836இல் இதுவும் மூடப்பட்டது. 1913இல் உருவாக்கப்பட்ட ஃபெட், நிதித்துறை குறித்த பல்வேறு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் மத்திய வங்கியாக இருக்கிறது. ஒரு நாட்டின் மத்திய வங்கி, நாணயம், அதன் புழக்கம், வட்டி விகிதம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ளது. நிதித்துறையில் முன்னேறியிருந்த டச்சுக் குடியரசில், 1609இல் தொடங்கப்பட்ட ஆம்ஸ்டர்டாம் வங்கிதான், நவீனகால மத்திய வங்கிக்கு முன்னோடியாகும். 1668இல் தொடங்கப்பட்ட ஸ்வீடன் மத்திய வங்கிதான், முதல் மத்திய வங்கியாகும். 1694இல் தொடங்கப்பட்ட பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் வடித்தில்தான் தற்போதைய மத்திய வங்கிகள் அமைக்கப்பட்டன. அதன்படி கனடா, மெக்சிகோ, தாய்லாந்து முதலானவை நாட்டின் வங்கி (பேங்க் ஆஃப்) என்றும், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தெனனாப்பிக்கா உள்ளிட்டவை ரிசர்வ் வங்கி என்றும், சிங்கப்பூர், சவூதி அரேபியா, ஹாங்க்காங் உள்ளிட்டவை மானிட்டரி அத்தாரிட்டி என்றும், ஸ்விட்சர்லாந்து, போலந்து, உக்ரைன் உள்ளிட்டவை தேசிய வங்கி என்றும் மத்திய வங்கிக்குப் பெயரிட்டுள்ளன.

ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லாத விமானத்துக்குமிடையேயான முதல் சண்டை நடைபெற்ற நாள்

2002 – விமானியால் இயக்கப்படும் விமானத்துக்கும், ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லாத விமானத்துக்குமிடையேயான முதல் சண்டை நடைபெற்ற நாள் டிசம்பர் 23. 2003இல் இராக்கின்மீது அமெரிக்கா போர்தொடுப்பதற்கு முன்னதாக நடைபெற்ற மோதல்களின்போதான இந்த வான் மோதலில், அமெரிக்காவின் எம்க்யூ-1 ப்ரிடேட்டர் வகையைச் சேர்ந்த, தொலைவிலிருந்து இயக்கப்பட்ட ஆளில்லாத விமானத்தை(ட்ரோன்), இராக்கின் மிக்-25 போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. அந்த ட்ரோனில், எய்ம்-92 ஸ்டிங்கர் என்ற வகையைச் சேர்ந்த, விமானத்திலிருந்து ஏவி, விமானத்தை வீழ்த்தும் ஏவுகணைகளும் பொருத்தப்பட்டிருந்தன. இராக்கின் தடைசெய்யப்பட்ட வான் பகுதியில் பறந்ததால் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. உண்மையில், இராக்கிய விமானிகளுக்குப் பொறியாகத்தான் இந்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டது. அதாவது, இராக்கிய வானில் பறந்து, அவர்களின் கவனத்தை ஈர்த்தபின் பன்னாட்டு வான்வெளிக்கு வந்துவிடுவதன்மூலம், இராக்கிய விமானங்களை பன்னாட்டு வான்வெளியில் தாக்குவது! ஆனால் மிக்-25இன் வேகம் 2.83 மாக்(கிட்டத்தட்ட மணிக்கு 3,500 கி.மீ.!) ஆகவும், ட்ரோனின் வேகம் மணிக்கு 217 கி.மீ.யாகவும் இருந்ததால், இதனால் தப்ப முடியவில்லை. மிக்-25இன்மீது ட்ரோன் ஓர் ஏவுகணையை ஏவினாலும், அது மிக் ஏவிய ஏவுகணையின் வெப்பத்தினால் திசை திரும்பிவிட்டது. ஆளில்லாமல் வானிலிருந்து தாக்குவதற்கான முயற்சி 1849இல் பலூன்கள் காலத்திலேயே தொடங்கிவிட்டது. வயர்லஸ் ரிமோட்மூலம் இயங்கிய முதல் விமானம் 1917இல் உருவாக்கப்பட்டுவிட்டது. 1920இலிருந்து புழக்கத்திலுள்ள ட்ரோன் என்ற ஆங்கிலச் சொல்லின் உண்மையான பொருள், ஆண் தேனீ. இதற்கு வேலைக்காரத் தேனீக்களைப் போன்று வேலைகள் இல்லை. ராணித் தேனீயுடன் இணைசேர்ந்து இனப்பெருக்கம் செய்வது மட்டுமே அதன் பணி. ஆளில்லாத விமானத்துக்கு இப்பெயர் எப்போது, யாரால் சூட்டப்பட்டது என்பதற்கு பதிவுகள் இல்லை. இரண்டாம் உலகப்போரில் ஆளில்லாத விமானங்களை நாஜி ஜெர்மெனி தாக்குதலுக்குப் பயன்படுத்தியது. ட்ரோன் ஆய்வுகளை அமெரிக்கா தொடங்கியிருந்தாலும்கூட, 1960இல் வேவுபார்த்த யு-2 விமானத்தை சோவியத் சுட்டுவீழ்த்திய பின்னர்தான், விரைவுபடுத்தியது. வியட்னாம் போரில் ஆயிரக்கணக்கான விமானிகளை இழந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா ஆளில்லாத விமாங்களைப் பயன்படுத்தத் தொடங்கியது. வயர்லஸ் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய வளர்ச்சியுடன், செயற்கை நுண்ணறிவும் இணைந்து, ட்ரோன்களில் மிகப்பெரிய வளச்சியை ஏற்படுத்தியது. இப்போதைய நிலவரப்படி அமெரிக்க விமானப்படையில் 7,494 (அதாவது மொத்த விமானங்களில் மூன்றிலொரு பங்கு) ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. 2023 நிலவரப்படி, 70க்கும் மேற்பட்ட நாடுகள், விமானப்படையில் ட்ரோன்களைப் பயன்படுத்துகின்றன.

உலகின் முதலாவது டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட நாள்:

1947 அமெரிக்காவில் இருந்த பெல் டெலிபோன் கம்பெனியின் லேபரட்டரியின் ஆய்வாளர்கள் ஜான் பர்தீன்,வால்டர் கவுசர் பிரிட்டைன், வில்லியம் பிராட்போர்ட் ஷாக்லி ஆகியோர் பல ஆண்டுகள் ஆராய்ச்சிகளின் பின்னர் வெற்றிகரமாக உருவாக்கினர்.. டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டதால் எலக்ட்ரானிக் துறையே தலைகீழாக மாறியது.. அதற்காக 1956-ல் அவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...