இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)

சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் காலமான தினம்

தமிழ் கிரிக்கெட் வர்ணனையாரும் லண்டன் ஐபிசி வானொலியின் முன்னாள் அறிவிப்பாளருமான சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் காலமான தினம் தமிழின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார். 1980-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளின் தமிழ் வர்ணனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அப்போது தமிழ்நாடு கேரள அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனையைச் செய்தார். 1982-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்திய இங்கிலாந்து போட்டியில் இவரது தமிழ் வர்ணனையைச் செவிமடுத்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர், இவரை நேரில் அழைத்துப் பாராட்டினார். 1999-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக செயலாற்றும் படி ஐ.பி.சி தமிழ் வானொலி விடுத்த அழைப்பை ஏற்று, இலண்டன் சென்று 45 நாட்கள் வர்ணனை செய்தார். மீண்டும் 2004 ஆம் ஆண்டு இலண்டன் சென்று உலகக் கிரிக்கெட் போட்டிகளை தமிழில் வர்ணனை செய்தார். 2007-ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்று ESPN – STAR CRICKET தொலைக்காட்சிக்காக, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20:20 உலகக்கோப்பை கிரிக்கெட்டை தமிழில் வர்ணனை செய்தார். இதுவரை 35 கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளின் வர்ணனையாளராக சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இவரது இலக்கிய நயம் மிக்க தமிழ் வர்ணனையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன். 2002 ஆம் ஆண்டு இவரை ஈழத்திற்கு நேரில் அழைத்து விருந்தளித்துப் பாராட்டினார். அந்த சந்திப்பு அனுபவத்தை “அழைத்தார் பிரபாகரன்” எனும் நூலாகப் பதிவு செய்துள்ளார் அப்துல் ஜப்பார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், ஊடகவியலாளர், வர்ணனையாளர் என பன்முகம் கொண்ட அப்துல் ஜப்பார் நினைவை போற்றுவோம்.

சாந்திநிகேதன் கல்வி நிலையம் ஆரம்பமான நாள்

1921 –  டிசம்பர் 22 சாந்திநிகேதன் (Santiniketan) இந்தியாவின் , மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில், கொல்கத்தாவிலிருந்து வடமேற்கே 180 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் இரவீந்திரநாத் தாகூர் 1862ஆம் ஆண்டில் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக் கழக நகரை நிறுவினார். சாந்திநிகேதனில் அமைந்துள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகம் 1952ஆம் ஆண்டு முதல் இந்திய நடுவண் அரசின் கீழ் மத்தியப் பல்கலைக்கழகமாக செயல்படுகிறது.

இந்தியாவின் முதல் சரக்கு ரயில் ஓடவிடப்பட்ட நாள் 

இதே டிசம்பர் 22, 1851 – இந்தியாவின் முதல் சரக்கு ரயில், உத்தரகண்ட் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது. அப்போதைய உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ரூர்கிக்கும் (Roorkee) பிரன் காலியர் (Piran Kaliyar) என்ற ஊருக்கும் இடையில் ஒட்டப்பட்டது. இந்தியாவின் முதல் ரயில் வண்டியும் இதுதான். (அதற்கு இரண்டு ஆண்டுகள் பின்னர் தான் பம்பாய்க்கும் தானே வுக்கும் இடையில் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் விடப்பட்டது) 1838-ல் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட ஏவ்ரி டிசைன் ரோட்டரி இன்ஜின் இந்தப் பாதையில் ஒட்டப்பட்டது.. அவ்வாறு முதலில் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்கு – சாலை போடத் தேவையான சரளைக் கற்கள் ஆகும். ஓடிய தூரம் 10 மைல்கள்.

இன்று தேசிய கணித தினம்:

உலகின் மிகச்சிறந்த ‘கணித மேதைகளில்’ ஒருவர் சீனிவாச ராமானுஜம். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் ‘தேசிய கணித தினமாக’ 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது. வாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். இதுதவிர அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானதாக விளங்குகிறது. உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நுாற்றாண்டில் கணிதத்துறையில் இந்தியா பின்தங்கியது. இந்நிலையில் ராமானுஜம் மூலம் 20ம் நுாற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது.யார் இவர்?: ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு. இவர் 1887 டிச., 22ல், ஈரோட்டில் பிறந்தார் சீனிவாச ராமானுஜன், 3 வயது வரை பேசும் திறனற்றவராக இருந்தார். பள்ளியில் சேர்ந்த பின் பேச்சு வந்தது. ஒருநாள் ஆசிரியர் ‘பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை’ என கூறினார். உடனே, ”பூஜ்யத்திற்கு இடதுபக்கம் 1ஐ சேர்த்தால் 10 வருகிறதே,” என பதிலளித்தார். அதே போல, ‘ஒரு எண்ணை அதே எண்ணால் வகுத்தால் 1 வரும்’ என ஆசிரியர் பாடம் நடத்தினார். உடனே ராமானுஜம், ”பூஜ்யத்தை பூஜ்யமால் வகுத்தால் 1 வருமா?” என கேட்டார். அப்போது அவரது வயது 10 தான். 12வது வயதில் கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயற்சி எடுத்தார்.அப்போது ‘மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில்’ ராமானுஜத்துக்கு வேலை கிடைத்தது. இங்கு ராமானுஜரின் கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக மேலாளர் எஸ்.என்.அய்யர், அவர் தயாரித்த சில முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப ஊக்குவித்தார்; இதற்கு எந்த பதிலும் இல்லை.இருப்பினும் 1913ல் ராமானுஜம், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டி என்பவருக்கு சில கணித இணைப்புகளை அனுப்பி வைத்தார். இதை கண்ட ஹார்டி, ‘இது சாதாரண மனிதரது அல்ல, ஒரு மேதையின் படைப்பு’ என வியந்தார். ராமானுஜத்தை உடனேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ராமானுஜத்தின் திறமை சில நாட்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்தது. உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்துவரவில்லை. உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட, 1917ல் இந்தியா திரும்பினார். 1920 ஏப்., 26ல் மறைந்தார்.

அன்னை ஸ்ரீ சாரதா தேவி (Sri Sarada Devi) பிறந்த தினம்

ராமகிருஷ்ண இயக்கத்தின் ஆணிவேராகத் திகழ்ந்து ஏராளமான சீடர்களை ஆன்மிகப் பாதையில் வழிநடத்திய அன்னை ஸ்ரீ சாரதா தேவி (Sri Sarada Devi) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 22). # மேற்குவங்க மாநிலத்தின் ஜெயராம்பாடி கிராமத்தில் (1853) பிறந்தார். தந்தை கோயில் பூசாரி. பள்ளிக்குச் சென்று பயின்றதில்லை. இளம் வயதிலேயே தனித்தன்மையுடன் விளங்கினார். # கழுத்து வரை நிற்கும் தண்ணீரில் இறங்கி, பசுக்களுக்குப் புல் வெட்டி வருவார். வயலில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பார். பருத்தித் தோட்டத்தில் தாயுடன் சேர்ந்து பருத்தி எடுப்பார். ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, அப்பா பத்திரப்படுத்தி வைத்திருந்த அரிசியை எடுத்து சமைத்து, ஏழைகளுக்குப் பரிமாறி, பசியாற்றினார். வீட்டில் தெய்வீகச் சூழல் நிலவியதால், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும் ஆன்மிகத்தையும் கற்றார். ஆன்மிக உரைகள், புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பின்னாளில் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். # அந்நாள் வழக்கப்படி ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இவரை பால்ய விவாகம் செய்து வைத்தனர். ஆன்மிகத் தேடலில் மூழ்கிய பரமஹம்சரைப் புரிந்துகொள்ளாத கிராமத்து மக்கள், ‘பாவம் இந்த அப்பாவி சிறுமியை, மனநிலை சரியில்லாதவருக்கு கட்டிவைத்துவிட்டார்களே’ என்று பரிதாபப்பட்டனர். அதனால் அச்சமடைந்தார். நேரில் சென்று கணவரைப் பார்த்த பிறகு, அவர்கள் கூறியது உண்மையல்ல என்று தெளிந்தார். கணவர் இறைவடிவம் என்பதை உணர்ந்து, அவரையே குருவாக ஏற்றார். தானும் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இவரை உலக நாயகியான அம்பிகையாகப் போற்றி, பூஜித்தார் பரமஹம்சர். # சாதாரண கிராமத்துப் பெண்ணாக கணவனைத் தேடி வந்த இவர், ‘அன்னை சாரதாதேவி’யாக மாறினார். சீடர்கள், பக்தர்களுக்கு தானே சமைத்து பரிமாறுவார். அவர்கள் சாப்பிடும்போது அருகில் அமர்ந்து விசிறிவிடுவார். சீடர்களுக்கு தீட்சை அளிக்கும்போது, ஆச்சார நியமங்களைவிட தூய்மையான பக்திக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார். # இறுதி நாட்களில் ராமகிருஷ்ணர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, அருகே இருந்து கண்ணும் கருத்துமாக பணிவிடை செய்தார். பரமஹம்சரின் மறைவுக்குப் பிறகு, சீடர்களை சிறப்பாக வழிநடத்தினார். # ஒருமுறை கயாவுக்கு சென்றவர் அங்குள்ள மடங்களில் துறவிகளுக்கு இருந்த வசதிகளையும், ராமகிருஷ்ணரின் சீடர்கள் சிரமப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்து வருந்தினார். ‘என் பிள்ளைகளுக்கு நல்ல உணவு, உடை, தங்குவதற்கு இடம் வேண்டும். அவர்கள் அலைந்து திரிவதைக் காண சகிக்கவில்லை’ என்று பரமஹம்சரிடம் மானசீகமாக பிரார்த்தித்தார். இதுதான் ராமகிருஷ்ண இயக்கம் தோன்றுவதற்கான அஸ்திவாரம். அன்னையின் அருளாசியுடன் கங்கைக் கரையில் உள்ள பேலூரில் ராமகிருஷ்ண மடம் 1898-ல் தொடங்கப்பட்டது. ‘சங்க ஜனனி’ என்று இவரைப் போற்றினார் விவேகானந்தர். # ‘மன நிம்மதி வேண்டுமானால் பிறரிடம் குறைகாணாதீர்கள். உங்கள் தவறுகளைப் பாருங்கள். மொத்த உலகையும் உங்கள் சொந்தமாக்கிக்கொண்டு பழகுங்கள். யாருமே அந்நியர் அல்ல. அனைவரும் என் குழந்தைகளே. மொத்த உலகமும் உங்கள் சொந்தம்’ என்று உபதேசித்தார். அனைவருக்கும் அன்பு, கருணை, ஆசியை வாரி வழங்கிய அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் 67-வது வயதில் (1920) மறைந்தார்.

ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின், விதவைக் கோலம் ஏற்க அன்னை முற்பட்டார். அப்போது காட்சி தந்த ராமகிருஷ்ணர், “ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குத்தான் சென்றுள்ளேன்” என்று கூறினார். சாரதாதேவி மன ஆறுதல் அடைந்தார். தவிர, கடைசிவரை விதவைக் கோலத்தைத் தவிர்த்தார். அன்னையின் இறுதி நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்த வேளை, காய்ச்சல் வந்து உடல்நிலை மோசமானது. அப்போதும்கூட தன்னைப் பார்க்க வந்த ஒரு பக்தைக்கு, ” உனக்கு அமைதி வேண்டுமென்றால், மற்றவர்களின் குறைகளைப் பார்க்காதே. அதற்கு பதிலாக, உன்னிடம் இருக்கும் குற்றங்களைப் பார். இந்த உலகம் முழுவதும் உன்னுடைய சொத்தாக ஆக்கிக்கொள்ளக் கற்றுக்கொள். மகளே, இந்த உலகில் யாரும் அந்நியர் இல்லை. உலகம் முழுவதும் உன் சொத்துக்ள்!” என்று கூறி ஆசி வழங்கினார். இதுதான் அன்னை சொன்ன கடைசி உபதேசம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...