இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ‘சஞ்சய் மல்ஹோத்ரா’ நியமனம்..!
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய வருவாய்த்துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சக்திகாந்த தாஸ் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி நாட்டின் 25வது ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்றார். அவரது மூன்று ஆண்டு கால பதவி நிறைவடைந்தபோது, மத்திய அரசு அவருக்கு கூடுதலாக பணிக்காலத்தை நீட்டித்திருந்தது. இந்த சூழலில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நாளையுடன் (டிச.10) நிறைவடைகிறது.
இந்நிலையில், வருவாய் துறை செயலாளரான சஞ்சய் மல்ஹோத்ரா ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சய் மல்ஹோத்ரா அவர் நாளை மறுநாள் (டிச. 11) ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ளார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் ஆர்பிஐ ஆளுநராக செயல்படுவார்.
யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
சஞ்சய் மல்ஹோத்ரா ராஜஸ்தான் கேடரின் 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அவர் REC லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தவர். முன்னதாக அவர் எரிசக்தி அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றியுள்ளர். சஞ்சய் மல்ஹோத்ரா ஐஐடி கான்பூரில் பொறியியல் பட்டம் பெற்றவர். பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக மின்சாரம், நிதி, வரிவிதிப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் போன்ற துறைகளில் அவர் பணியாற்றியுள்ளார்.