தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 24 மணிநேரமாக ஒரே இடத்தில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது, 24 மணிநேரமாக அதே பகுதியில் நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அது, மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடையக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், மேற்கு-வடமேற்கு திசையில், நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழ்நாடு கடலோரத்தை நெருங்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறுவதற்கு வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக இன்று நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் திருச்சி, பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய தென் மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.