‘உ.வே.சா’ வின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் முதல்வர் அறிவிப்பு..!
உ.வே.சாமிநாதரின் பிறந்தநாள் (பிப்.19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 531 கோடிக்கு துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மதுரை `டங்ஸ்டன்’ சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, உ.வே.சாமிநாதன் பிறந்த நாளை இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் எனவும் இதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். திருவாரூரில் பிறந்த உ.வே. சாமிநாதன் தான் வைணவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்தால் தமிழை கற்க விட மாட்டார்கள் என்ற எண்ணத்தில், வெங்கட்ராமன் என்ற தனது இயற்பெயரை சாமிநாதன் என்று மாற்றிக்கொண்டு தமிழை கற்றவர் என்றார்.
தனக்கு தமிழ் தான் முக்கியம் மதம் முக்கியமில்லை என்று அன்றே சொன்னவர் சுவாமிநாதன் எனவும் அவரது பெயரை இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைப்பதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், அரசுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும், உ.வே. சாமிநாதன் பற்றிய முழு கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்கு மாற்றுக் கருத்துகள் இல்லை எனவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் அவர் சொன்ன அத்தனை கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் உறுதி அளித்தார். இந்த நிலையில், உ.வே.சாமிநாதரின் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.