‘பூரணி’ அம்மா மறைந்த நாளின்று

கவிஞர், கலைஞர், இலக்கிய ஆர்வலர், கதைசொல்லி, எழுச்சி கொண்ட பெண், சமூக அக்கறை கொண்ட ஒரு மனிதாபிமானி, மொழிபெயர்ப்பாளர் என்று ஏழு வகைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பூரணி நூறு ஆண்டுக் காலம் வாழ்ந்து சம்பூர்ணமடைந்தார் . குடும்பத்தினருக்குத் தன் சாவு பற்றி எந்தவித நம்பிக்கையும் தராமல் இருக்கிறோமே என்று வருந்தியவர் பூரணி. மிகவும் அபூர்வமான நபர். தொடர்ந்து வாழ்க்கையையும் இலக்கியத்தையும் படிக்க முயன்றவர். படித்து அதை உள்வாங்க முயன்றவர்.

பூரணி 17 அக்டோபர் 1913 ல் பிறந்து இதே 17 நவம்பர் 2013ல் மறைந்தவர்.

இவர் 80 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை, கட்டுரை, சிறுகதைகளை எழுதி வந்தார். பூரணி – கவிதைகள், பூரணி நினைவலைகள், பூரணி சிறுகதைகள், செவிவழிக் கதைகள் போன்ற பல நூல்கள் வெளியாகியுள்ளன.

பழனியில் பிறந்தார் சம்பூர்ணம் 17-10-1913இல். ஒரு லட்சியவாதித் தந்தையின் மகளாகப் பிறந்த இவர் தன்னை இவ்வாறு அறிமுகப்படுத்திக்கொண்டார் அவர் கவிதைப் புத்தகத்தில்:

“நான் பிறந்த ஊர் பழனி. புகுந்த ஊர் தாராபுரம். என் தந்தை பெரிய தமிழ் வித்வான். பழனி ஹைஸ்கூலில் பெரிய வகுப்புகளுக்குப் பாடம் நடத்துவார். அதே பள்ளியில் என் அண்ணாவும் சரித்திர ஆசிரியர். எங்கள் குடும்பம் நடுத்தர வர்க்கமாக இருந்தது. ஆனால் வீட்டில் சரஸ்வதி கடாட்சம் நிறைந்திருந்தது. என் தாய் கூடத் தமிழ்ப் பாடல்களுக்குப் பதம் பிரித்து அர்த்தம் சொல்லும் திறன் படைத்தவர்.

இந்தக் குடும்பச் சூழலால் நான் ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்திருந்தும், “கடற்கரையில் நெடுநேரம் அமர்ந்திருந்தால் உடலும் உப்பாகிப் போவதுபோல” எனக்கும் தமிழ் அறிவு கூடுதலாக இருந்தது என்று நினைக்கிறேன்….”

பதின்மூன்று வயதில் விவாகமாகி பதினைந்து வயதில் முற்றும் வேறு மாதிரியான குடும்பத்துக்குப் போனார் சம்பூர்ணம். கூட்டுக் குடும்பமாய் ஹோட்டல் நடத்திக்கொண்டிருந்த குடும்பம் அது. அதில் தத்தளிக்கும் படகாகிப் போனார் சம்பூர்ணம். அப்போது பாட்டெழுதத் தொடங்கினார். மன உளைச்சல்களை வெளிப்படுத்தவோ, பக்திப் பாடல்களையோ அவர் எழுதவில்லை. அவர் மனத்தை ஈர்த்த பல விஷயங்கள் பற்றி எழுதினார். தடங்கலின்றி வார்த்தைகள் வெளிப்பட்டன. “பிசிர் இல்லாத மரபுக் கவிதைகள் பிறக்கத் தொடங்கின”.

புத்தகம் படிக்கும் தாபத்தைக் கணவரிடம் வெளிப்படுத்தியதும் புத்தகங்கள் வீட்டுக்கு வரத் துவங்கின. “இரும்பு குண்டாய் கனத்த நெஞ்சு இறகால் ஒத்தடம் பெற்றது” என்று அந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறார். ஒன்பது குழந்தைகளுடன் வாழ்க்கையில் பல மேடுபள்ளங்களைப் பார்த்தும் உறுதியை இழக்கவில்லை. பெண்களுக்காக வாதாடும் மனப்பாங்கு மாறவில்லை. ஜஸ்டிஸ் சம்பூர்ணம்மாள் என்ற பெயர் நிலைத்துவிட்டது. மாதர் சங்கங்களிலும், ஹிந்தி வகுப்பு எடுப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டார். அவர் ஓர் அடுப்புச் செய்தால் கூட அது கலை நயத்தோடு செய்யப்பட்டது. தொடர்ந்து எழுதி வந்தார். நவீன எழுத்தாளர்கள் அனைவரையும் படித்தும் வந்தார். அப்படி விடாமல் எழுதியதைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்:

”….மனசுலே ஒரு உத்வேகமும் கையிலே பேப்பரும் பேனாவும் இருந்தால் பாட்டெழுதிவிடலாம். ஆனால் பிரசுரம், புத்தகம் இதெல்லாம் என்னோட எல்லைக்கு அப்பாலான விஷயம். அதனாலதான் அதைப்பத்தியெல்லாம் எதிர்பார்க்கல்லே. ஆனாலும் இன்னைக்கு வரலும் நான் அப்பப்போ எழுதிவரேன். ஏன்னா பாட்டெழுதுறது எனக்கு ஒரு பசி மாதிரி. என்னாலெ எழுதாமலிருக்க முடியாது…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!