விலகாத வெள்ளித் திரை – 1 – லதா சரவணன்
அத்தியாயம் – 1
“புதுப்பெண்ணின் மனதை தொட்டுப்போறவறே உங்க எண்ணத்தை சொல்லிவிட்டு போங்க “
“இளமனசை தூண்டிவிட்டுப் போறவரே அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க மர்மத்தை சொல்லிவிட்டு போங்க”
எதிரே பத்திரகாளியம்மன் கோவிலுக்கு எதிராக ஆலமரத்தடியில் அமைந்திருந்த டீக்கடையில் இன்றோ நாளைக்கோ என் இயக்கத்தை நிறுத்திக்கொள்வேன் என்ற சபதத்தோடு சப்தமிட்டுக்கொண்டு இருந்தது ரேடியோ பொட்டி,
“ஏலேய் கொஞ்சம் சத்தத்தை கூட்டி வையேன் என்ன மாதிரி பாட்டு அது என்ன வசனம் அந்தப்படத்தில் ஒல்லியா ஒரு பையன் பா பேரு கூட என்னமோ கணேசனாம் நடிப்பிலே அசத்தியிருக்கான்.!”
“அட வசனம் யாரு நம்ம கருணாநிதியில்லே நம்ம கட்சிதான்”
“ஆமா இவருதான் கட்சியை ஆரம்பிச்சவரு !” சூடாக டீயும் அதைவிடவும் சூடாக அரசியலும் கலந்தாலோசிக்கப்பட்ட அந்த நேரத்தில் அரைடவுசர் போட்ட அந்த சின்னப்பையன் டீக்கடையின் அருகில் வந்தான் ஒரு தூக்கு வாளியோடு !
“அண்ணே அம்மா டீத்தண்ணி வாங்கியாரச் சொல்லுச்சி ! அப்பறம் நேத்திக்கு போட்ட பலகாரத்தோட காசை இதுலே கழிச்சிக்கிட்டு மீதியை…..!”
அவன் முடிக்கும் முன்னரே அந்தப்பெரியவர் கையில் இரண்டனாவை எடுத்துக் கொடுத்துவிட்டு, “தம்பி நாளைக்கு காலையிலே நம்ம வெள்ளியகிரி வீட்டுலே விசேஷம் இருக்கு பலகாரத்துக்கு சொல்லியிருக்காங்க நீ ஆத்தாகிட்டே சொல்லி கொஞ்சம் அதிகம் அனுப்ப சொல்லு சரியா ?”
தூக்குவாளியைப் பெற்றுக்கொண்டு அதன் சூடு விரல்களை உரச அதையும் ரசித்துக்கொண்டே நடந்தான் கண்ணன். ரேடியோவில் கேட்ட பாடல் மனதினை ஆட்டிப்பார்த்தது உதடுகள் தன்னால் முணுமுணத்தது அந்த வரிகளை அசைபோட்டபடியே வீட்டுக்குள் வந்தான் கண்ணன்.
“ஆத்தா டீத்தண்ணி வாங்கியாந்திருக்கேன்.!”
“நான் பலகாரத்துக்கு மாவரைக்கிறேன் கண்ணா நீயே தங்கச்சிக்கும் தம்பிக்கும் கொடுத்திடேன்.”
லேசாய் நசுங்கிய பித்தளை தம்பளரில் ஆளுக்கொன்றாய் அளந்து பங்குபிரித்து தம்பி தங்கைகளுக்கு கொடுத்திட்டு அன்னைக்கும் தனக்கும் எடுத்துக்கொண்டு அந்த இருட்டுச் சமையலறையின் மூலையில் கொஞ்சமே கொஞ்சம் வெளிச்சம் அந்த வெளிச்சத்தில் நிழல் கூட தன் மேல் பட்டுவிடுமோ என்று அஞ்சிய வண்ணம் பருத்தி சேலையில் தன்னை மறைத்திருந்த அம்மா வியர்வையைக் கூட பொருட்படுத்தாது அலையின் நுரை போல பொங்கிய உளுந்து அரிசிக்கலவை தொட்டுத் தொட்டு செல்லமாய் தள்ளிக்கொண்டு இருந்தாள் அம்மா.
அடம் பிடிக்கும் குழந்தையின் சிணுங்கலை சமாதானப்படுத்த தட்டித் தருவதைப் போல இருந்தது அந்த செய்கை. “அம்மா டீ ஆறுது….?!”
டம்ளரின் விளிம்பினைத் தொட முடியாமல் தோற்றுப்போன அந்த பானம் தன் இயலாமையை மறைக்க ஆடையை மூடிக்கொள்ள தன் விரல்களைக் கொண்டு பானத்தின் ஆடையை நீவிவிட்டு குடித்தாள் பத்மா. மீண்டும் மெளனமாய் கலவையைத் தள்ளியபடியே,
கண்ணா மழை வர்றா மாதிரியிருக்கு நைட்டுக்கு கடை போடணும் அடுப்பு எரியத் தோதா அந்த தட்டியை கொஞ்சம் தூக்கிவைச்சிட்டு விறகை எரியப்போடறீயா ?” ஏழு வயது பையனிடம் சொல்லும் வேலையில்லை இருந்தாலும் தற்போதைய நிலைமைக்கு கைகொடுப்பது அவன் ஒருவன்தானே !
கண்ணன் மறுபேச்சு பேசாமல், தட்டியை சீர்படுத்திவிட்டு விறகுகளை அடுக்கி அடுப்பை ஏற்றிடப் போராடிக்கொண்டு இருந்தான். நன்றாக இருட்டிக் கொண்டு வர சிம்னிவிளக்கின் ஒளியில் பேரையூர் கிராமத்தின் அந்த வீட்டின் முன்புறம் சூடான வடைகள் வெந்து கொண்டிருந்தது கூடவே இருளாண்டியின் மனைவி பத்மாவும்.
பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 |