புதிய “நீதி தேவதை” சிலை திறப்பு..!
உச்ச நீதிமன்றத்தில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நேற்று திறந்து வைத்தார். உச்சநீதிமன்றத்தில் கண்களை மூடியபடியே நீதி தேவதை சிலை வைக்கப்படிருந்தது. அந்த சிலையானது செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றை பார்க்க முடியாது என்பதை உணர்த்தும் விதமாக கண்கள் கட்டப்பட்ட நிலையிலும், அதிகாரம் மற்றும் அநீதியை தண்டிக்கும் வகையில் கையில் வாளுடன், மற்றொரு கையில் தராசுடனும் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மரபிலிருந்து புதிய மாற்றமாக கண்களை திறந்த நீதி தேவதை சிலையானது தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் உத்தரவின் பேரில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது. கண்களை திறந்த நீதி தேவதை சிலை, அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதைக் குறிக்கிறது. மேலும், ஆயுதத்திற்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகத்தை நீதி தேவதை கையில் ஏந்தியபடி உள்ளது.