இன்று ஆடிப்பெருக்கு – காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு..!
ஆடிப்பெருக்கு பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி கரையோர மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, கணவனின் கையால் கட்டிக் கொண்டார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளின் கரையோரங்களிலும் ஆடிப்பெருக்கு பண்டிகை, ஆடி மாதத்தின் 18ம் நாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழா காவிரி தாய்க்காக கொண்டாடப்படும் சிறப்பு விழாவாக பார்க்கப்படுகிறது. அதனால் காவிரி கரையோர மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு இன்று (ஆகஸ்டு 3) கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கு நாளான இன்று காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பார்கள். சுமங்கலி பெண்கள் காவிரி அன்னையை வழிபட்டு தாலிக் கயிறை மாற்றிக்கொள்வது வழக்கம் ஆகும். குறிப்பாக, புதுப்பெண்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, தன்னுடைய கணவனின் கையால் கட்டிக்கொள்வார்கள். இதன் மூலம் மாங்கல்ய பலம் நீடிக்கும், நிலைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் காவிரி கரையோரம் உள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை , புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகுவிமரிசையாக இன்று கொண்டாடப்படுகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் படித்துறையில் மக்கள் இறங்காத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் செல்வதால் ஆற்றுக்கு பதிலாக பைப் மூலம் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி செல்லும் பாதை முழுவதுமே மக்கள் வெள்ள நீரில் இறங்காத அளவிற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று தாலிக்கயிறு மாற்றிக் கொள்பவர்கள் பகல் 12 மணிக்கு முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் இறங்கு பொழுதில் தாலி மாற்றிக் கொள்ளக் கூடாது என்றும் இறங்குபொழுதில் நல்ல நேரம் இருந்தாலும் தாலி கயிறு மாற்றுவதை தவிர்ப்பது நல்லது என்றும் ஆன்மீக பெரியவர்கள் கூறுகிறார்கள். அதேநேரம் காவிரி ஆற்றங்கரைக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபட்டு, காவிரி அன்னையை வழிபட்ட பலனை பெற முடியும். ஆடிப் பெருக்கு வழிபாட்டை வீட்டிலேயே செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார்கள்.