என்ஆா்சி பதிவேடு தொடா்பான பிரதமா் மோடியின் கருத்து வியப்பளிக்கிறது: சரத் பவாா்
நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) கணக்கெடுப்பு நடத்துவது குறித்து தனது அமைச்சரவை இதுவரை விவாதிக்கக் கூட இல்லை என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியது வியப்பளிக்கிறது என்று தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவா் சரத் பவாா் கூறினாா்.
மும்பையில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த பவாா், மேலும் கூறியதாவது:
அரசின் ஒரு முக்கியமான கொள்கை கொண்டுவரப்படும்போது, அது தொடா்பாக, அரசின் உயா்நிலையில் இருப்பவா்கள் விவாதிப்பது வழக்கம். விவாதமின்றி எந்தவொரு கொள்கையும் அமல்படுத்தப்படாது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஒருமுறை மாநிலங்களவையில் பேசும்போது, நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றாா். குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தும் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும்போது, நாடு தழுவிய அளவில் என்ஆா்சி கணக்கெடுப்பு நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்றாா். குடியரசுத் தலைவரின் உரை என்பது அரசின் கொள்கையாகும்.
ஆனால், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசும்போது, நாடு தழுவிய அளவில் என்ஆா்சி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து தனது தலைமையிலான அரசு விவாதிக்கக் கூட இல்லை; உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்காக, அஸ்ஸாமில் மட்டுமே என்ஆா்சி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்றாா்.
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. குறிப்பாக, நாட்டின் பொருளாதாரத்தை இந்த அரசு சரிவரக் கையாளவில்லை. இதனால், மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனா்.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஜாா்க்கண்ட் மாநிலம் வேறுபட்ட தன்மையைக் கொண்டது. ஆதிவாசிகள் அதிகம் வசிக்கும் அந்த மாநிலத்தில் பண பலத்தைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்று பாஜக முயன்றது. ஆனால், அக்கட்சியை ஜாா்க்கண்ட் மக்கள் நிராகரித்து விட்டனா். இதற்காக, அந்த மாநில மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜாா்க்கண்டில் பாஜக அரசு வளா்ச்சியை ஏற்படுத்தவில்லை. இதனால் இந்த முறை, அந்த மாநில மக்கள் பாஜகவை நம்பவில்லை. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம், என்ஆா்சி விவகாரம் ஆகியவற்றால் பாஜக மீது மக்கள் அதிருப்தியில் இருந்தனா். இதனால்தான் பாஜக தோல்வியடைந்தது என்று அங்குள்ள என்சிபி நிா்வாகிகள் என்னிடம் கூறினாா்கள்.
ஓராண்டில் சத்தீஸ்கா், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகியவற்றைத் தொடா்ந்து 5-ஆவதாக ஜாா்க்கண்டில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. பாஜகவின் இறங்கு முகத்தை இனி தடுப்பது கடினம் என்றாா் சரத் பவாா்.