சிறந்த நடிகைக்கான விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ்
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.
இதில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றார். சிறந்த நடிகருக்கான விருதை நடிகர்கள் விக்கி கௌஷல், ஆயுஷ்மான் ஆகியோர் பெற்றனர்.
“மகாநடி’ தெலுங்கு படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த தேசிய விருது முலம் தமக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், இது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
சிறந்த நடிகருக்கான விருது ஆயுஷ்மான் (படம்: அந்தாதுன்), விக்கி (படம்: உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்) ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது. “பேட் மேன்” படத்தில் நடித்த அக்ஷய் குமாருக்கு சிறந்த தயாரிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.
“உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ படத்தை இயக்கிய ஆதித்ய தர் சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றுக் கொண்டார். முதல் முறையாக அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. 2016-ஆம் ஆண்டு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் “துல்லியத் தாக்குதல்’ நடத்தியதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகும்.
“பாரம்’ படத்துக்கு விருது: தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான விருது, பிரியா கிருஷ்ணசாமி இயக்கி, ரெக்லஸ் ரோசஸ் தயாரித்த “பாரம்’ படத்துக்குக் கிடைத்துள்ளது.
சிறந்த முழுநீள திரைப்படத்துக்கான விருது “ஹெல்லாரோ’ எனும் குஜராத்தி திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது. பழங்குடியினர் சமூகத்தில் பெண்களுக்கு உள்ள அதிகாரங்களை விளக்குகிறது இந்தத் திரைப்படம். இதற்கான விருதை இயக்குநர் அபிஷேக் ஷா பெற்றுக் கொண்டார். சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான விருது “பதாய் ஹோ’ என்ற படத்துக்கு வழங்கப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த நடிகை சுரேகா சிக்ரிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகருக்கான விருதை “சும்பக்’ மராத்தி படத்தில் நடித்த இசையமைப்பாளரும் நடிகருமான ஸ்வானந்த் கிர்கிரேவுக்கு வழங்கப்பட்டது. “அந்தாதுன்’ திரைப்படத்துக்கு சிறந்த ஹிந்தி படத்துக்கான விருது வழங்கப்பட்டது. விருதை அந்த படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் பெற்றுக் கொண்டார்.
சிறந்த திரைக்கதை வசன கர்த்தாவுக்கான விருது ஸ்ரீராம் ராகவன், அரிஜித் விஸ்வாஸ், பூஜா லதா சுர்தி, ஹேமந்த ராவ் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை “பத்மாவத்’ திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி பெற்றுக் கொண்டார்.
சிறந்த நடுவருக்கான விருது ஹெல்லாரோ படத்தின் நடிகர்களில் ஒருவரான நீலம் பஞ்சாலுக்கு வழங்கப்பட்டது.
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த படத்துக்கான நர்கிஸ் தத் விருது “ஒந்தல்ல இரடல்ல’ என்ற கன்னடப்படத்துக்கு வழங்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் சிறந்த படத்துக்கான விருது பிரியங்கா சோப்ரா தயாரித்த “பாணி’ திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.
சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது பி.வி.ரோஹித் (“ஒந்தல்ல இரடல்ல’), சமீப் சிங் ரனாத் (“ஹர்ஜீதா’), அர்ஷத் ரிஷி (“ஹமீத்’), ஸ்ரீநிவாஸ் பொகாலே (‘நால்’) ஆகிய நான்கு பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
வெங்கய்ய நாயுடு பெருமிதம்: தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, வழக்கம்போல் அல்லாமல் இந்த முறை நல்ல கதையம்சம் கொண்ட, மதிநுட்பத்துடன் எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என்றும் இது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார்.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களுக்கே உரிய கற்பனையுடன், நடைமுறை பாரம்பரியத்தை மீறாமலும் பிரச்னைகளுக்கு நவீன முறையில் தீர்வு சொல்லும் வகையிலும் திரைப்படங்களை எடுப்பது நல்ல விஷயமாகும். பெண் சிசுக்கொலை, ஆள்கடத்தல் போன்ற கதையம்சம் இல்லாத படங்களும் சிறந்த வகையில் எடுக்கப்படுகின்றன என்று பாராட்டினார்.
மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசுகையில், “இந்தியா போன்ற நாடுகளில் ஒரு விஷயத்தை மக்களிடம் எளிமையாகவும், புரியம்படியும் எடுத்துச் செல்வது திரைப்படங்கள்தான். நான் பிற நாடுகளுக்குச் செல்லும் போதும் திரைப்படங்கள் மக்கள் பிரசார சக்தியாக உருவெடுத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். நமது கலையும், கலாசாரமும்தான் அதிக சக்தி வாய்ந்தது.
அதை திரைப்படங்கள் மூலம் நாம் உலகுக்கு எடுத்துச் செல்லமுடியும்’ என்றார்.
அமிதாப் பச்சனுக்கு 29-இல் பால்கே விருது: ஹிந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு “தாதாசாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. உடல்நலக் குறைவு காரணமாக விருது பெற அவர் வரவில்லை. டிசம்பர் 29-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் திரைப்பட விருது பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அமிதாப் பச்சனுக்கு பால்கே விருதை வழங்கி கௌரவிப்பார்.
சமூக அவலங்களை சித்தரிக்கும் ’பாரம்’ படத்துக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி: இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி
சமூக அவலங்களை சித்தரிக்கும் “பாரம்’ தமிழ் திரைப்படத்துக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி என்று அப்படத்தின் இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி தினமணியிடம் தெரிவித்தார்.
66-ஆவது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த தமிழ் படத்துக்கான விருதை பாரம் திரைப்படம் பெற்றது. தமிழில் விருது பெற்ற ஒரேயொரு திரைப்படம் இதுவாகும்.
இது தொடர்பாக இப்படத்தின் இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி கூறியதாவது: தமிழ்நாட்டின் சில இடங்களில் நீண்ட நாள்களாக நோய்வாய்ப்பட்டு இருக்கும் முதியவர்களை கருணைக் கொலை செய்யும் பழக்கம் உள்ளது. இதை “தலைக்கூத்தல்’ என்பார்கள். இந்த ‘தலைக்கூத்தலை’ மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்தேன். தேசிய விருதால் மிகப் பெரிய கௌரவம் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை, தமிழ் இயக்குநர் வெற்றிமாறன் மிகவிரைவில் வெளியிடவுள்ளார் என்றார் அவர்.
தமிழ் படங்கள் தேசிய விருது பெறுவது குறைந்துள்ளது கவலையளிப்பதாகவும், தேசிய விருதுகளை இலக்கு வைத்து தமிழ் திரையுலகம் இயங்க வேண்டும் என்றும் பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் அன்புமணி, அறிவுமணி இருவரும் தெரிவித்துள்ளனர்.
சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதை கே.ஜி.எஃப். படத்துக்காக அன்புமணி, அறிவுமணி (அன்பறிவ்) ஆகியோர் பெற்றனர். இவர்கள், ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரட்டையர்களாவர்.
“ஜிடி நாயுடு த எடிசன் ஆஃப் இந்தியா’ என்ற ஆவணப்படத்துக்கு, சிறந்த அறிவியல் தொழில்நுட்ப ஆவணப்படத்துக்கான விருது கிடைத்துள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கை குறித்த இந்த ஆவணப்படத்தை, ரஞ்சித்குமார் என்ற தமிழர் இயக்கியிருந்தார். மத்திய அரசின் மும்பை திரைப்படப்பிரிவில் பணிபுரியும் அவர் தமிழ்நாட்டின் திருக்கோயிலூரைச் சேர்ந்தவர்.
சிறந்த சூழலியல் படத்துக்கான விருதை சுப்பையா நல்லமுத்து பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “மச்சிலி என்ற புலியை அதன் 12 வயதில் இருந்து 17 வயது வரை சுமார் 6 ஆண்டுகள் பின்தொடர்ந்து இந்தப் படத்தை எடுத்தேன். இந்தப் புலியின் மரபணுக்கள் மூலம் இந்தியாவில் 50 புலிக்குட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படியான சூழலியல் படங்களால் சூழல் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படும் என்றார் அவர்.