ஆதார், வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு இந்தியக் குடியுரிமைக்கான சான்று இல்லை
ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகியவை இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் இல்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் அரசாங்க ஆவணம் என்று குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து 13 கேள்விகள் மற்றும் பதில்கள் அடங்கிய ஆவணம் வெளியிடப்பட்டது.
இதில் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகியவை அரசு ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் இந்த ஆவணம் குறித்தும் என்ஆர்சி-யின் படி இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்கள் எவை என்பது தொடர்பாக கேள்வி எழுந்தது.
இந்நிலையில், அவை அனைத்தும் இந்தியக் குடியுரிமைக்கான ஆவணமாக கருதப்படாது, இந்தியாவில் குடியிருப்பு அமைந்துள்ளதற்கான சான்றாக மட்டுமே பார்க்கப்படும். மேலும் என்ஆர்சி குறித்து தற்போதைக்கு எந்தவொரு முடிவுக்கும் வரவேண்டிய அவசியமில்லை என அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குடியுரிமைச் சான்று தொடர்பாக ஏற்பட்டுள்ள சந்தேகத்தை தெளிவுபடுத்தும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகம், சுட்டுரையில் விளக்கமளித்துள்ளது. அதில்,
இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்கள் பட்டியலில் தனிநபருடைய இருப்பிடச் சான்று குறிப்பிடப்பட்டுள்ள பொதுவான அனைத்து ஆவணங்களும் இடம்பெறும். இதில், எந்தவொரு குடிமகனையும் துன்புறுத்தவோ அல்லது தேவையற்ற முறையில் சிரமப்படுத்துவதோ அரசின் நோக்கம் இல்லை. கல்வியறிவற்ற குடிமக்களிடம் எந்த ஆவணங்களும் இல்லாவிட்டாலும் உள்ளூர் சான்றுகளையும், தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சாட்சியங்களையும் சமர்ப்பித்தால் போதுமானது என்றிருந்தது.