சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்!/எஸ்.ராஜகுமாரன்

 சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்!/எஸ்.ராஜகுமாரன்

சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்! பகுதி (1)

– எஸ்.ராஜகுமாரன்

சிவாஜி – எம்ஜிஆர் என்ற இரு பெரும் ஆளுமைகளின் நினைவுகள் எப்போது வந்தாலும், எனக்கு நினைவு வருவது என் பால்ய கால காரைக்காலின் ரெக்ஸ் தியேட்டர்தான். அப்போது அதற்குப் பெயர் ‘ரெக்ஸு கொட்டா!’ நாடகக் கொட்டகையின் ‘கொட்டகை’ என்ற சொல் திரையரங்குகளின் வருகைக்குப் பின், மக்களின் வாய்மொழியில் இயல்பாக திரிந்து ‘கொட்டா’ என ஒட்டிக் கொண்டது. காரைக்காலில் இருந்த மற்ற இரண்டு தியேட்டர்கள் டைமண்ட், சாந்தி.

சிவாஜி எனக்கு அறிமுகமானது சாந்தி திரையரங்கில். அம்மாவுடன் முதன் முதலில் பார்த்த’ பாபு’ திரைப்படத்தில். எம்.ஜி.ஆரை முதன் முதலில் சந்தித்தது ரெக்ஸ் தியேட்டரில் வெளியாகி இருந்த ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில். ஆட்டம் போடவைக்கும் எம்ஜிஆரை விட அழவைக்கும் சிவாஜி ஏனோ எனக்கு பிடித்து போனார். நான் சிவாஜி ரசிகன் ஆனேன். எங்கள் நண்பர்கள் குழுவில் இருந்த, இன்னொரு தீவிர சிவாஜி ரசிகராக விளங்கியவர் அண்ணன் ஞானசேகரன். அவருடன் காரைக்கால் ரெக்ஸ் திரையரங்கில் மறுவெளியீடு ஆன பல சிவாஜி திரைப்படங்களை உணர்ச்சி ததும்ப பார்த்து ரசித்திருக்கிறேன்.

சிவாஜியின் படம் பார்த்துவிட்டு வந்து எங்கள் வீட்டு நிலைக் கண்ணாடியின் முன் நின்று அவரைப்போலவே நடித்து பார்ப்பேன். “நல்லாதான் இருக்கு! பல்லுதான் கொஞ்சம் ரிப்பேர் பண்ணனும்!” என்று அக்கா என்னை கிண்டல் செய்யும். சிறுவயதில் எனக்கு பற்கள் கொஞ்சம் வெளியே தெரியும்.

அன்றைய பதின்வயது என்பது நம் சமூக அமைப்பில் குழந்தைப்பருவம் போன்றதுதான். ஆண் பிள்ளை கூட தனியாக வெளியில் செல்வது அவ்வளவு சுலபமல்ல. சினிமா பார்ப்பதற்கு வீட்டில் பல கட்டுப்பாடுகள் உண்டு. ஊரில் ஆண்டுதோறும் சித்திரை வைகாசி மாதங்களில் மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடக்கும். பத்து நாள் திருவிழாவில் இரவு தோறும் கோயிலில் கலை நிகழ்ச்சிகள் களைகட்டும். இரவு சாப்பாடு முடிந்து, அங்கு போவதாக போக்கு காட்டிவிட்டு நாங்கள் இரண்டாம் ஆட்டம் சினிமா பார்க்கச் செல்வோம். பதின் பருவத்து திருட்டு சந்தோஷங்களில் முக்கியமானது திருவிழா இரவுகளின் ‘செகேண்ட் ஷோ சினிமா!’ படம் விட்டு வீடு திரும்பி, கோயிலில் கலை

நிகழ்ச்சிகள் கண்டு களித்த நல்ல பிள்ளைகள் மாதிரி, திருட்டு சினிமா பார்த்த சுவடின்றி திண்ணையில் படுத்துறங்கிய பால்யத்தின் சினிமா அனுபவங்கள் சுவாரஸ்யமானவை…

காரைக்காலில் இருந்த மூன்று திரையரங்குகளில் ரெக்ஸ் தியேட்டர் மிகவும் பழமையானது. அதனால் அந்த திரையரங்கில் பழைய எம்ஜிஆர் – சிவாஜி படங்கள் மட்டுமே தொடர்ச்சியாக திரையிடப்படும். அப்படி வந்த பல சிவாஜி திரைப்படங்களை அண்ணன் ஞானசேகரனும் நானும் சேர்ந்து பார்த்து, ரசித்து ரசித்துப் போற்றிப் புகழ்ந்திருக்கிறோம் நடிகர் திலகம் சிவாஜியை!

இயக்குநராக வேண்டும் என்ற இலட்சியத்துடன் சென்னைக்கு வந்து உதவி இயக்குநராக முயற்சி செய்த காலங்களில் நினைக்கவே இல்லை உதவி இயக்குநராக முதன் முதலில் நான் ‘கிளாப்’ அடிக்கப் போவது நடிகர் திலகம் சிவாஜிக்கு என்று!

அன்று புகழ்பெற்ற கதை வசனகர்த்தாவாக விளங்கிய ஆரூர்தாஸ் அவர்கள் என் தந்தையார் கவிஞர் வயலூர் சண்முகம் அவர்களின் நண்பர். எம்.ஜி.ஆர் – சிவாஜி என்ற இரு பெரும் நாயக நடிகர்களின் திரைப்படங்களுக்கு ஒரே நேரத்தில் வசனம் எழுதிய பெருமைக்குரியவர். 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களுக்கு வசனம் எழுதி இந்திய அளவில் சாதனை படைத்த தமிழ்த் திரை எழுத்தாளர். நான் சென்னை வந்து சினிமாவில் உதவி இயக்குநராக முயற்சி செய்தபோது சந்தித்த அப்பாவின் நண்பர்களில் முக்கியமானவர்கள், அவரும் தயாரிப்பாளர் இராம அரங்கண்ணலும் ‘உவமை கவிஞர்’ சுரதாவும். அன்று சந்திக்க முயன்று முடியாமல் போன அப்பாவின் இன்னொரு கலைத்துறை நண்பர், அன்றைய முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள். (சில ஆண்டுகளுக்கு முன், அவரின் கதை வசனத்தில் நான் திரைக்கதை எழுதி ‘கலைஞரின் கதை நேரம்’ என்ற பெயரில் கலைஞர் டிவிக்காக ஒரு தொடர் இயக்கினேன்! )

ஆரூர்தாஸ் அவர்களை நான் சந்தித்தபோது தமிழ்சினிமாவில் பிஸியான மொழிமாற்று திரைப்படங்களின் வசனகர்த்தாவாக அவர் பணிபுரிந்து கொண்டிருந்தார். அன்று உதவி இயக்குநர், வசன உதவியாளர் ஆகிய பணிகளில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதி அழகான குண்டு கையெழுத்து. அது என்னிடம் இருந்தது. “உன் கையெழுத்து நல்லாருக்கு. உன் தந்தையார் சண்முகம் என்னுடைய மரியாதைக்குரிய நண்பர்!

உங்கள் வீட்டில் தங்கி நான் உன் அம்மா கையால் சுவையான உணவு சாப்பிட்டு இருக்கிறேன்! அந்த நன்றி கடனுக்காக உன்னை என் உதவியாளராக சேர்த்துக் கொள்கிறேன்!” என்று கூறி என்னை, தன்னிடம் வசன உதவியாளனாக சேர்த்துக்கொண்டார்.

என்னுடைய திரைக்கனவு அவர் வழியாக, வசன உதவியாளன் பணியாக தொடங்கிற்று. 150-க்கும் மேற்பட்ட தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப் படங்களின் தமிழ் வடிவங்களில் தொடர்ச்சியாகப் பணிபுரிந்தேன்.{ அப்போதுதான் நடிகர் நாசர், நடிகர் எம். எஸ். பாஸ்கர் போன்றவர்கள் எனக்கு நண்பர்கள் ஆனார்கள்.} அவர் கையெழுத்தில் எழுதும் அசல் பிரதியை 1 ப்ளஸ் 3 என்ற கணக்கில் என் கையெழுத்தில் நகல் பிரதிகளாக எழுத வேண்டும். என் கையெழுத்துப் பிரதி ஒன்று, கார்பன் நகல்கள் மூன்று. இப்படி ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறேன்! அந்தப் பணி வாயிலாக திரைப்படத்தின் மிக முக்கியமான பகுதியான ‘உரையாடல் கலை’யை அதன் உச்சரிப்பு நுட்பங்களை கற்றுத் தேர்ந்தேன்.

தொடர்ந்து, ஆரூர்தாஸ் அவர்களின் அன்பான பரிந்துரையுடன் இயக்குநர் ஏ.சி. திருலோக்சந்தர் அவர்களிடம் உதவி இயக்குநராக இணைந்தேன். சிவாஜியை கதாநாயகனாக நடிக்க வைத்து அதிக படங்களை இயக்கியவர் ஏ.சி. திருலோகசந்தர். அவற்றில் பெரும்பான்மை படங்களின் வசனகர்த்தா ஆரூர்தாஸ்! சுமார் 30 படங்கள். அவற்றில் முக்கால்வாசி படங்கள் பெரிய வெற்றிப் படங்கள்!

அந்த நேரத்தில் ஏ.சி. திருலோக்சந்தர் புதிதாக இரண்டு படங்களில் இயக்குநராக ஒப்பந்தமாகியிருந்தார். அந்த இரண்டு படங்களின் கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இரண்டு படங்களின் வசனகர்த்தா ஆரூர்தாஸ். அதில் ‘குடும்பம் ஒரு கோயில்’ என்ற படத்தை நடிகர் பாலாஜியின் ‘சுஜாதா சினி ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்தது. மற்றொரு படமான ‘அன்புள்ள அப்பா’வின் தயாரிப்பு நிறுவனம் ஏவி.எம். அன்றைய தமிழ் சினிமாவின் மிகப் புகழ்பெற்ற இரண்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் அவை.

குடும்பம் ஒரு கோயில் திரைப்படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடித்தவர்கள் லட்சுமி, மேஜர் சுந்தரராஜன், வி. கே. ராமசாமி, மனோரமா, ஜனகராஜ், ராஜசுலோச்சனா, முரளி, ரஞ்சனி. அன்புள்ள அப்பா திரைப்படத்தில் சிவாஜியுடன் நடித்தவர்கள் நதியா, ரகுமான்,சங்கீதா, ஒய். ஜி. மகேந்திரன், ஜெய்கணேஷ் போன்றவர்கள். இரண்டு படங்களின் ஒளிப்பதிவாளர் விஸ்வநாத் ராய். குடும்பம் ஒரு கோவில் படத்துக்கு இசை எம்.ரங்காராவ். அன்புள்ள அப்பா படத்துக்கு இசை சங்கர் கணேஷ்.

இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் தொடர்ச்சியாக 70 நாட்கள் நடந்தன. அவைதான் சிவாஜியை வைத்து ஏ.சி.ட்டி. இயக்கிய கடைசி இரண்டு படங்கள். அவையே உதவி இயக்குநராக நான் பணி புரிந்த முதல் இரண்டு படங்கள்! 1986 – ஆம் ஆண்டில் படப்பிடிப்பும் பின் தயாரிப்புப் பணிகளும் நிறைவு பெற்று 1987 – ஆம் ஆண்டில் இரண்டு திரைப்படங்களும் வெளியாகின… [ இரு படங்களுக்கும் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு எப்படி என்பதுதான் கட்டுரையின் கிளைமாக்ஸ்! ]

(தொடரும்)

நேசமிகு ராஜகுமாரன்

uma kanthan

2 Comments

  • “குடும்பம் ஒரு கோவில்”
    மிகவும் இளைத்து,களைத்த எங்கள் சிவாஜி… திரைக்கதையும் அவ்வாறே…பிச்சை எடுக்க வைத்த காட்சியில்…நிறைய ரசிகர்கள் வெளிநடப்பு.

  • “அன்புள்ள அப்பா”
    இதற்கு முன்பு நிறைய பார்த்து பார்த்து பழகிய ரசித்த சிவாஜியின் சோக சுகானுபவங்களை இந்த படத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு சலிப்பைத் தந்த பாசிட்டிவில்லா, திரைக்கதையில்,பாடலை மட்டும் ரசித்து மற்றையவைகளில், பாடாய் படுத்தப்பட்டதில், படத்தின் வெற்றி வாய்ப்பு மிஸ்ஸிங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...