18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்;எம்பிக்கள் பதவியேற்பு..!
18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில் பிரதமர் மோடியைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டார்.
18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது. 240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. எனினும், தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது.
பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9-ம் தேதி பதவியேற்றார். மாநிலங்களவையின் 264வது அமர்வு ஜூன் 27ம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவிருக்கிறது. ஜூன் 27-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார். இந்தச் சூழலில், 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
முன்னதாக இடைக்கால சபாநாயகராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் “பார்த்ருஹரி மஹ்தாப்” பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மக்களவை கூட்டத் தொடர் தொடங்கியதும், அவை விதிகளின்படி முதலில் பிரதமர் மோடி பதவியேற்றுக்கொண்டார்.
இந்தச் சூழலில் எதிர்கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை உறுப்பினர்கள் ஒன்றன் பின் ஒருவராக பதவியேற்று வருகின்றனர். அந்த வகையில் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் எம்.பிக்களாக பதவியேற்றனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்கள் இன்றும், நாளையும் பதவியேற்கின்றனர்.