தொண்டை பிரச்சினை

தொண்டை பிரச்சினை:


      தொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்று தான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

      தொண்டையில் புண் இருக்கும் போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி விடும். ஆனால் யாரும் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. சுகாதார மற்ற தண்ணீரை குடிக்கும் போது வைரஸ் தொற்றும், சுகாதார மற்ற உணவுகளை உட்கொள்ளும் போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது.

            இதன் அடுத்த கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல், மூக்கு ஒழுகல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப் புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது. ஸ்டிரெப்போகாக்கஸ் கிருமி நோய் பரவலுக்கு காரணமாகிறது. தொற்று பரவும் போது டான்சிப்ஸ் வீங்கும், இதனால் எச்சில் விழுங்கும் போது வலி ஏற்படும்.

         தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். சளி, எச்சில் மற்றும் கைகள் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது. தொடக்கத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விடும் போது நோய் கடுமையாகி மூச்சுக் குழலில் தொற்று உண்டாகி வீக்கத்தால் காற்றுப் பாதை அடைபடலாம். இதனால் மூச்சு விடுவது மற்றும் விழுங்குவது இரண்டுமே சிரமமாகும்.

      கடும் தலைவலி மற்றும் அதிக காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தொண்டைப் புண்ணுக்கு மருந்துகள் தரப்பட்டால் அவற்றை முழுமையாக உட்கொள்ள வேண்டும். பாதியில் நிறுத்துவதால் சில பாக்டீரியாக்கள் தொண்டையிலேயே தங்கி விட வாய்ப்புள்ளது.

      இவற்றை கண்டு கொள்ளாமல் விடும் போது ருமாட்டிக் காய்ச்சல் மற்றும் ரத்தத்தில் தொற்று போன்ற சிக்கல்களை உண்டாக்கும். எனவே தொண்டை வலி ஏற்பட்டவுடன் காது மூக்கு தொண்டை நிபுணரை அணுகி ஆண்டிபயாடிக் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு முறை:

      தொண்டையில் நோய் தொற்று இருக்கும் பட்சத்தில் இதமான சூட்டில் சுத்தமான திரவ உணவுகள் (தண்ணீர், சூப்) எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் சளி மென்மையாகி எளிதில் வெளியேறும், கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும் இது தொண்டைக்கு இதமளிப்பதுடன் சளி வெளியேறவும் உதவும்.

     சப்பிச் சாப்பிடும் மாத்திரை மற்றும் இனிப்பில்லாத சூயிங்கம் ஆகியவற்றை சுவைப்பதால் அதிக உயிழ்நீர் சுரந்து தொண்டையை சுத்தம் செய்யும். இந்த மாதிரியாக நேரங்களில் பேச்சைக் குறைப்பதும் அவசியம். அசுத்தக் காற்றை சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும். புகை பிடித்தலை கண்டிப்பாக விட்டு விட வேண்டும். காய்ச்சல், ஜலதோஷம் இருக்கும் பட்சத்தில் அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது முக்கியம், கைகளால் முகத்தை துடைப்பதை தவிர்க்கலாம்.

      குழந்தைகளுக்கு ஒரு ஆண்டில் தொடர்ந்து மூன்று முறைக்கும் மேல் டான்சில் நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அதில் இருந்து கிருமிகள் இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. டான்சில் அறுவை சிகிச்சை செய்வதால் குரல் மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தியில் எந்த பாதிப்பும் இருக்காது. சுகாதாரமான உணவு, குளிர் பானம், தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் தொண்டை வலியில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!