பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்..! 

 பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்..! 

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக சித்ரா பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் தங்கக் குதிரையில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

மதுரை சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோயில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கடந்த 8-ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது. மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 19-ம் தேதி பட்டாபிஷேகமும், 20-ம் தேதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும் (ஏப். 21), நேற்று (ஏப். 22) காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன.

சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் (ஏப். 21) மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி நேற்று (ஏப். 22) காலை 6 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தடைந்தார். அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது.

பக்தர்கள் தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். நேற்று (ஏப். 22) இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலுக்கு வந்தடைந்தார். நள்ளிரவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

பின்னர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி இருந்தார்.

இதனைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அந்த காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர். வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினர். பக்தர்கள் விடிய, விடிய தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...