தமிழ்நாட்டில் 58000 வீடுகளை கட்ட போகும் ஆப்பிள் நிறுவனம்..!
பெங்களூரு: ஆப்பிள் நிறுவனம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 150,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆப்பிளின் நிறுவனம் இப்போது தனது தொழிற்சாலை ஊழியர்களுக்கு வீட்டு வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு ஆப்பிள் அவாஸ் திட்டம் எனப் பெயர் சூட்டப்பட்டு டிரெண்டாகியுள்ளது. அதாவது தங்கள் ஊழியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் வீடு கட்டி தர உள்ளது.
சீனா மற்றும் வியட்நாமில் உள்ள இண்டஸ்ட்ரியல் ஹவுஸ்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆப்பிள் அவாஸ் யோஜனா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் பார்ட்னர் நிறுவனங்களான ஃபாக்ஸ்கான், டாடா மற்றும் சால்காம்ப் நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்கள் தங்குவதற்கான ஹவுசிங் காம்பிளெக்ஸ் கட்டித் தருவது பற்றி யோசித்து வருகின்றன.
இந்த திட்டம் இந்தியாவில் தனியார் துறையின் மிகப்பெரிய முன்முயற்சியாகும். இந்தியாவில் இது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பார்ட்னெர்ஷிப் மூலம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 78,000 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது, இதில் தமிழகத்தில் மட்டும் 58,000 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதன்படி தமிழகத்தில் கட்டப்பட போகும் வீடுகளின் எண்ணிக்கை இத்திட்டத்தில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ளது.
டாடா குழுமம் மற்றும் SPR இந்தியா, ஸ்டேட் இண்டஸ்ட்ரீஸ் கார்பொரேஷன் ஆப் தமிழ்நாடு (SIPCOT) ஆகியவற்றால் இந்த குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆப்பிள் அவாஸ் யோஜனா திட்ட நிதியில் 10-15% மத்திய அரசிடமிருந்து வரும், மீதமுள்ளவை மாநில அரசுகள் மற்றும் தொழில் முனைவோர்களால் வழங்கப்படும்.
இந்த திட்டத்தினை மார்ச் 31 ஆம் தேதி, 2025 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பெற்று தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவான வீட்டுத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள் தொழிலாளர்களின் செயல்திறனை மேம்படுத்துவதும் பாதுகாப்பை வழங்குவதும் ஆகும், குறிப்பாக 19-24 வயதுடைய புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.