வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை நடத்த அரசு திட்டம்..!
அரசுப் பள்ளியில் மேலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டது. வழக்கத்தைவிட ஒரு மாதத்துக்கு முன்பாகவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதனையடுத்து மார்ச் 31 ஆம் தேதி அன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 601 புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இருப்பினும் இந்த கல்வியாண்டில் 5.5 லட்சம் மாணவர்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி இயக்குநகரத்தின் தரவுகளை தற்போது பள்ளிக்கல்வித்துறை கையில் எடுத்துள்ளது.
அதில் அரசு பள்ளிகளில் சேராத 3 லட்சத்து 31 ஆயிரத்து 546 ஐந்து வயதை தாண்டிய குழந்தைகளின் வீட்டிற்கே சென்று அவர்களை அரசு பள்ளியில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் 2018 ஆம் ஆண்டு பிறந்த 5 வயது தாண்டிய குழந்தைகள் உள்ள வீட்டிற்கு சென்று அவர்களின் பள்ளி சேர்க்கை குறித்தான தரவுகளை சேகரிக்கவும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.