பாலையில் உன் நினைவே நீர்(ஆடு ஜீவிதம்)/செ.புனிதஜோதி
பாலையில் உன் நினைவே நீர்(ஆடு ஜீவிதம்)
***********””””**********””****””கவிஞர் செ.புனிதஜோதி”அவர்களின் பார்வையில்/(ஆடு ஜீவிதம்)/
ஒரு சாண் வயிறு இல்லாட்டா
இந்த உலகத்தில் ஏது கலாட்டா?
என்ற பாடல் தான் நினைவுக்குள் வருகிறது .சற்று உற்று நோக்கினால் ஒரு சாண் வயிறு மட்டுமா என்ற கேள்வியும் உள்ளாடுகிறது.
உருவமற்ற மனதிற்குள் உள் அமர்ந்திருக்கும் ஆசை, வேட்கை
கடல் கடந்து, நாடு கடந்து ,வெம்மையிலும் பனியிலும்,கடுமையான உழைப்பிலும், தனிமையிலும் வெந்து போக வைத்து விடுகிறது.
சதைப்பிடித்த உயிர் இன்னும் இன்னும் என்னென்னப் பாடுகளைத் தாங்க வேண்டியது உள்ளதோ? இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கா வந்தோம் என்ற ஒரு ஞான மார்க்கத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறது.
ஒரு இறப்பு தான் சித்தார்த்தனை துறவி ஆக்கியது. ஆசைதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்ற உண்மையான நிலையைச் சொல்ல வைத்திருக்கிறது.
மனித அவலங்களைக் காணும் தோறும்.
புத்தரின் சிந்தனைகளைக் கொஞ்சம் கைப்பற்றியிருந்தால் நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் கூட எழுகிறது.
இன்று மட்டுமா இந்த அவலம் ?சங்க காலத்தில் இருந்து மனித உயிர்கள் அன்பில் பீடிக்கப்பட்டப் பொழுதிலிருந்து உணவிற்காக ஒரு இருப்பிடம் விட்டு இன்னொரு இருப்பிடம் சென்று தேடும் நிலைக்கு எப்பொழுது மனிதன் தள்ளப்பட்டானோ அன்றிலிருந்தே தொடங்கியது இந்த யுத்தம்.
சங்க காலத்தில் பல பாடல்கள் அகநானூறு பட்டினப்பாலை ,கலித்தொகை,நற்றிணை பல்வேறு பாடல்களில் பிரிதலும் பிரிதல் நிமித்தமாய் வாழ்தல் எவ்வளவு துயரம் மிகுந்தவை என்று பல பாடல்கள் உள்ளன. அதுவும் குறிப்பாக பாலை நிலத்தில் எவ்வாறாக துன்பப்படுவார்கள் என்பதை படித்துள்ளோம்.
ஊர் பாழ்த்தன்ன ஓமையம் பெருங்காடு இன்னா என்றார் ஆயின்
என்று
உயிரை எடுக்கக்கூடிய பல விஷ ஜந்துக்கள்,செந்நாய்கள்,பாம்புகள் , தட்பவெட்ப நிலைகள் மனிதனைப் பாதிக்கக்கூடிய பல்வேறு சூழ்நிலையைக் கொண்டது தான் பாலை நிலம் என்று நம்மில் சிலர் அறிந்ததோடு சரி.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த நஜீப் முகம்மது. வெளிநாடு சென்று வேலைப் பார்த்தால், தனது குடும்பத்தின் கஷ்டங்கள் தீரும் என நம்பி சௌதி அரேபியாவிற்கு செல்லும் இவருக்கு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலை வழங்கப்படுகிறது.
உணவு, நீர், ஓய்வு இல்லாமல் பல்வேறு கொடுமைகளுக்கு இடையே பாலைவனத்தில் துன்புறும் இவர் எவ்வாறு தப்பித்து தாயகம் திரும்பினார் என்பதே ‘ஆடு ஜீவிதம்’ நாவலின் கதை.
எழுத்தாளர் பென்னி டேனியலின் ஆடு ஜீவிதம் கதை
ஒரு சினிமாவின் வழியாக பார்த்து,உள்ளம் கசிய வைத்திருக்கிறார் இயக்குநர் பிளெஸ்ஸி.
பிரித்விராஜ் மிகச் சிறப்பாக நேர்த்தியாக நடித்துள்ளார்.
100கிலோ உடல் எடை உள்ள ஒருவன் 40கிலோ எடையாக மாறிய விதத்தை உடல் எடையைக் கூட்டி,குறைத்து உழைத்த விதம் பாராட்டுக்குரியது.
எலும்பும் தோலுமாய் சூரியன் சுட்டெரிக்கும் நிர்வாணத்தை தன் ஒளிப்பதிவால் ஆடை சூட்டி மகுடம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.(பெயர் தெரியவில்லை மன்னிக்கவும்)இதில் வேலை பார்த்த லைட்பாய் முதல் அனைவருக்கும் வாழ்த்துகள்.
குச்சிக்கால், அகோரத் தலைமுடி,அழுக்கேறிய,உடல்,உடை,நீண்ட,
நெடிய நகம்,கூந்தல்,தாடி என முழுதும் அந்தக் கதாபாத்திரமாய் மாறியுள்ளார், நடிகர் பிரித்விராஜ்
மணலில் நடக்க முடியாமல் கெந்திக் கெந்தி நடந்து செல்வதும்,
மொழி புரியாமல் போராடும் காட்சியும்,மணல் காற்றிற்கும்,கடும் குளிர்,கடும் வெம்மைக்கும் ஆட்பட்டு அவஸ்தைகளைக் கையாள முடியாமல் தவிக்கும் உணர்வின் வெளியையும்,
,அடி வாங்கி உடல் முழுவதும் காயங்களும்,மன ரணத்தையும் சுமந்து உடல்,மனம்,
முகபாவத்தோடு திறம்பட தன் பணியை நடிப்பை செய்திருக்கும் பிரித்விற்கு மிகப்பெரிய வாழ்த்துகள்.
தன்னோடு வந்த பையனை மீண்டும் சந்திக்கும் வேளையில் விடியல் வந்ததாய் உணரும் தருணம்,அதே நேரத்தில் சில மணிநேரமே வந்திருந்தாலும் ,அந்த பையனின் நடிப்பும் மிக அற்புதமாக இருந்தது.நடித்தார்கள் என்று சொல்லக்கூடாது வாழ்ந்திருக்கிறார்கள் என்றே குறிப்பிடவேண்டும்.
வெளிநாடு செல்பவர்கள் எல்லாம் நன்றாக வாழ்கிறார்கள் என்ற ஒரு பொய்யான ஒரு எண்ணம் நமக்குள் இருக்கிறது. அதற்கு காரணம் அவர்கள் போட்டு வரக்கூடிய சில சட்டைகளும் அவர் செலவழிக்கக் கூடிய சில பணத்தையும் வைத்து அவர்கள் மிகவும் உல்லாசமாக வாழ்கிறார்கள் என்று நமக்கு நாமே ஒரு கற்பனையை செய்து கொண்டு நாமும் அவர்கள் வழிகளில் பின் தொடர்கின்றோம். ஆனால் அவர்கள்
மிக மிக துன்பப்படுகிறார்கள் என்பதை இந்தக் கதை மிகத் தெளிவாகக்காட்டுகிறது.
அங்கிருந்து வருபவர்கள் அங்கே நிகழக்கூடிய உண்மையைச் சொன்னால் பலருக்கும் ஒரு உதவியாக இருக்கும் என்பதைப் போலத்தான் இந்த கதையானது எனக்குள் தோன்றுகிறது .மிகச் சிறந்த ஒளிப்பதிவு ,ஏர் ஆர் ரகுமானின் இசை.பிரித்வினுடைய மிக நேர்த்தியான நடிப்பு வலு சேர்த்துள்ளது.
மனிதநேயமற்று காணப்படக்கூடிய மனிதர்கள்,சக மனிதர்களின் இல்லாமையைப் பயன்படுத்தி பிணைக் கைதியாக்கி அவர்கள் கொழுத்து வாழ்கிறார்கள் என்பதையும்,
அதே சமயத்தில் மனிதநேயமிக்க மனிதர்களும் அங்கே உள்ளார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளது .
தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தின் வாயிலாக நாம் உணர முடிகிறது, ஒரு பாலையில் வாழக்கூடியவன் தன் குடும்பத்தின் நினைவை ஒரு நீராக அருந்தி வாழ்கிறான். என்பதை அவர்கள் கொடுத்து அனுப்பிய ஊறுகாயின் வழியாகக் காட்டியிருப்பது அல்டிமேட்.
அன்பின் கிளையின் மீது ஏறிக்
கொள்ளக்கூடியவன் மனிதன். அந்த அன்பின் கிளையால் தான் அவன் இன்னும் இன்னும் இந்த ஜீவிதத்தை வாழ்ந்து கொண்டே இருக்கின்றான். எவ்வளவு பெரிய துயரத்தையும் கடந்து, கடந்து செல்லக்கூடிய ஆற்றலை தந்து விடுகிறது இந்தப் பொல்லாத அன்பு .
அன்பு தான் அந்த ஆட்டின் மீதும் ஒட்டகத்தின் மீதும் அவனுக்கு ஒரு தனி ஈர்ப்பு ஏற்படுத்துகிறது.
விடைபெறும் வேளையில் தழுவிக்கொள்ளவும்,
தீனி வைக்கவும்,முத்தமிடவும் அன்பை பரிமாறிவிட்டு வரும் காட்சி மிக அருமை.
உணவு எவ்வளவு முக்கியம் என்பதை அது இல்லாமல் போனபோதுதான் அது புரிந்து கொள்ள முடிகிறது .இங்கே ஒரு சப்பாத்தியை அதுவும் ஒரே நேரத்திற்கு மட்டுமே தரக்கூடிய கனமான சுட்ட சப்பாத்தியை அதுவும் சிறிதளவு தண்ணீரில் தொட்டு உண்ணும் காட்சி கலங்கடிக்கிறது.
உடல் உபாதைக்கு கூட அங்கே தண்ணீர் கிடையாது மண்ணால் தான் எல்லாமே நிகழ்த்தக்கூடிய நிலையாக இருக்கிறது
தப்பித்து வெளியேறும் காட்சியில்,உடன் வரும் பையன் மயங்கும் தருவாயில் தன்
வியர்வையை விரலில் தடவி உறிஞ்ச விடுவது,
கண்ணீரை வரவழைத்து விடுகிறது. அந்த நடிகரின் மிகச்சிறந்த நடிப்பால்.
கானல் நீரை கண்டு ஓடுவதும், உணவில்லாமல் மண்ணையே தின்று பித்து நிலை பிடித்து ஒருவன் இறந்து போவதும் ,இருக்கும் ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வெற்றுப் பாட்டிலில் ஊதி,ஊதி நீர் சேர்ப்பதுவும், கருணையால் நிரம்புகிறார் அந்த நடிகர்.அங்கே இறந்தவர்கள் தான் கழுகிற்கு உணவாக உண்ணப்படுவதைக் காட்டிய விதம் ,வார்த்தையற்று துக்கத்தில் வீழ்கிறது சொற்கள்.
அங்கே மண்தான் மருந்து.
திக்கற்றத் திசைவெளியெங்கும்
மணல் பரப்பு .சாலையை எப்பொழுது காண்போம் என்ற பரிதவிப்பில் அவன் நடந்து, நடந்து தவித்து வந்த நிலையை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டிய விதம் அருமை.
அவ்வாறாகத் தப்பித்து வெளியேறி ஒருவரின் உதவியால் பிரித்வ் செம்மையாக மாறிய பின் தன் நாட்டிற்கு திரும்ப போக போலீஸிடம் சரணடைந்து விடுகிறான். அங்கே இவ்வாறாக வந்தவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள்.தங்களிடம் தப்பித்த நபர்களைப் பிடித்துச் செல்வதற்காக மீண்டும் வந்து அடையாளம் கண்டு பலரையும் அடித்து அழைத்து செல்கிறார்கள் . அந்த நேரத்தில் பிரித்வி அச்சப்படும் காட்சி,பரிதவிக்கும் விதம் சொல்லவே முடியாதது சீட்டின் நுனியில் அமர வைத்துவிடுகிறது.
இன்னும் என்மனம் பாலையைக் கடக்க முடியாமல் அந்தப் படத்தின் நினைவை ஏந்திக் கண்ணீர் துளிகளோடு நிற்கிறது .
கவிஞர் செ.புனிதஜோதி
1 Comment
தேர்ந்த விமர்சனம் நன்றி சகோதரி புனித ஜோதி