இன்று மாலை வெளியாகிறது  2024 மக்களவைத் தேர்தலுக்கான  இறுதி வேட்பாளர் பட்டியல்..!

 இன்று மாலை வெளியாகிறது  2024 மக்களவைத் தேர்தலுக்கான  இறுதி வேட்பாளர் பட்டியல்..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இறுதி  பட்டியல் இன்று வெளியாகிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம், புதுச்சேரி இடம்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கடந்த 20-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 27-ம் தேதியுடன் முடிந்தது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிஇடைத்தேர்தலுக்கு 18 வேட்பாளர்கள் 22 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி காலை 11 மணி முதல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. வடசென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட சில தொகுதிகளில் சிறு சிறு பிரச்சினைகள் எழுந்தன. இறுதியாக, அனைத்து மக்களவை தொகுதிகள், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்கள் அனைவரது வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.ஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகள

இறுதி நிலவரப்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

புதுச்சேரியில் 34 வேட்பாளர்கள் 45 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் பாஜக நமச்சிவாயம், காங்கிரஸ் வைத்திலிங்கம், அதிமுக தமிழ்வேந்தன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 27 வேட்பாளர்கள் சமர்ப்பித்த 36 மனுக்கள் ஏற்கப்பட்டன.

நேற்று (மார்ச் 29) புனித வெள்ளி, பொது விடுமுறை என்பதால் மனுக்கள் வாபஸ் தொடர்பான பணிகள் நடைபெறவில்லை. தேர்தல் ஆணைய அறிவிக்கையின்படி, வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

அத்துடன், சின்னம் ஒதுக்கப்படாத அரசியல் கட்சிகளான விசிக, மதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்படும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...