எனக்கு நீ வேண்டாம் !!!! அவன் தான் வேண்டும்!!!!

 எனக்கு நீ வேண்டாம் !!!! அவன் தான் வேண்டும்!!!!
எனக்கு நீ வேண்டாம் !!!!
அவன் தான் வேண்டும்!!!!

என் எல்லாமே நீ என்று ஆன பிறகு-
 என் எல்லாவற்றிற்கும் உன்னைத்தானே தேடமுடியும்-
  உனக்கான என் நியாயத் தேடல்கள்  கூட தொல்லைகளாகத்  தெரியும் போது-
   நமக்குள் தொலைந்து போகும் நெருக்கம் புரியவில்லையா உனக்கு -!!!!

          தப்புதான் மனோ …..அலுவலகத்தில் இருக்கிற உனக்கு அடிக்கடி அலைபேசி அழைப்பு கொடுக்கிறதும்…. குறுஞ்செய்தி அனுப்புறதும்… நீ பதில் அனுப்புற வரைக்கும் அது இரண்டையும் மாறி மாறி செஞ்சு கிட்டே இருக்கதும் தப்பு தான்…. நீ இன்னிக்கு என்கிட்ட கோபப்பட்டதும் சரிதான்…. ஆனா நீ உன்னை மறந்துட்ட…. “எதுக்குடி நொய் நொய்யின்னு  அலைபேசியில கூப்பிட்டுக்கிட்டே இருப்ப நீ …….” கேட்டது சரிதான். ஆனா எத்தனை நாள் அப்படி கூப்பிட்டு இருக்கேன்னு யோசிச்சியா? எல்லா நாளும் இப்படித்தான் கூப்பிடுறேனா? அதைக்கூட விடு… இன்னிக்கு கூட நான் கூப்பிட்டது எனக்காகவா? இவ்வளவு கோபமா கத்தினியே.. நான் எதுக்கு கூப்பிட்டு இருப்பேன்? யோசிச்சியா? அது உனக்கு தெரியும்? ஆனாலும் அதை காட்டிடக்கூடாதே… உன்னோட மரியாதை என்ன ஆகிறது??
              காலையில எந்திரிக்கவே முடியாதபடி காய்ச்சல்… படுத்திருந்த… என்னன்னு கேட்டப்ப காய்ச்சல்…. தல பாரமா இருக்குன்னு சொன்ன. கசாயம் வச்சி தரேன்னு சொன்னேன். வேண்டாம்னு சொல்லிட்ட.. ஆவி பிடிச்சா நல்லதுன்னு சொன்னேன்… அதுவும் வேண்டாம்னுட்ட… சரி இன்னைக்கு விடுமுறை எடுத்துட்டு வீட்டிலே இருன்னு சொன்னேன். சம்பள காசோலை இன்னைக்கு தராங்க கண்டிப்பா போகணும்னு கிளம்பிட்ட… காசோலையை வாங்கிட்டு உடனே வந்துருவன்னு நினைச்சேன் .நீ வரல.. உடம்புக்கு முடியாம அலுவலகம் போன புருஷன் எப்படி இருக்காருன்னு தெரிஞ்சுக்க நினைக்கிறது அவ்வளவு பெரிய தப்பா?!? 

              சரி நான் தான் குறுஞ்செய்தி போட்டுக்கிட்டே இருந்தேனே  எப்படி இருக்குன்னு????      நீயும் பாத்தியே ஒரே ஒரு பதில் போட்டு இருந்தா எனக்கு மனசுக்கு ஒரு நிம்மதியா  இருந்து இருக்கும்ல ?? 

               அலுவலகத்தில உனக்கு பல வேலை இருக்கு …பல அழுத்தம் இருக்கு… நான் இல்லன்னு சொல்லல… என்னோட செய்திய வாசிச்ச  நீ’ பரவாயில்லை சாயங்காலம் வந்துடுவேன்னே’ ஒரு சின்ன பதில் போட கூடாதா??

            இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை பெரிய விஷயங்கள் நடக்கும் போது கூட உன்ன தொந்தரவு செஞ்சுருக்கேனா?? அத்தைக்கு நெஞ்சுவலி வந்தப்ப, பாப்பாவுக்கு பள்ளிக்கூடத்துல கீழே விழுந்து அடிபட்டப்ப, சின்னவன் மருத்துவமனையில் இருந்தப்ப, நம்ம வீட்டுல குக்கர் வெடிச்சு என்னோட கையில காயம்பட்டப்ப, இப்படி எப்பவாச்சும் ஒண்ண உடனே தொந்தரவு செஞ்சா?? நீ எப்பவும் போல அலுவலகம் போய் வந்த…..  நான் தனியா தான  சமாளிச்சேன்…. எங்கிட்ட இருந்த வீட்டு சாவி தொலைஞ்சப்ப கூட உன்னை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு நீ வர்ற வரைக்கும் வெளியே உட்காந்திருந்தேன்.

           எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நமக்கு கல்யாணம் ஆன இத்தனை வருஷத்துல நீ அலுவலகத்திற்கு வேலைக்கு போன பிறகு ஐந்து தடவை தான் அடிக்கடி அலைபேசியில் கூப்பிட்டு உன்ன தொந்தரவு பண்ணி இருக்கேன். நம்ம ஊர்ல விடாமல் மழை பெஞ்சு வெள்ளம் வர போகுதுன்னு அறிவிப்பு வந்தப்ப, உங்க அலுவலகம் இருக்கிற வீதியில தீவிபத்துன்னு செய்தியில பார்த்தப்ப, நீ வண்டியில அடிபட்டு மருத்துவ விடுப்பு எடுத்துக்கிட்டு அது முடிஞ்சு அலுவலகம் போன முதல் நாள், என்னோட தங்கச்சி மாமியார் செத்த அன்னைக்கு, அதுக்கு அப்புறம் இன்னைக்கு, இதுல ஒரு தடவை கூட நீ அன்பா அக்கறையா பொறுப்பாக பதில் சொன்ன ஞாபகம் கூட எனக்கு இல்லை இதை எல்லாம் நான் எப்படி புரிஞ்சிக்கிறது மனோ?!?!

               அலுவலக நேரம், அலுவலக நேரம்ன்னு  சொல்ற… அந்த அலுவலக நேரத்தில் ஸ்டேட்டஸ் பார்க்கிற…. முகநூலில் ஆக்டிவா இருக்கிற…. பதிவு போடுற… ஓய்வு நேரம் இருக்கப்போயித்தான அதெல்லாம் செய்யுற… அதை நான் தப்புன்னு சொல்லல…ஆனா  காலையில உங்க எல்லாரையும் அனுப்பி  வச்சுட்டு நீங்க திரும்பி வர்ற வரைக்கும் உங்களுக்காகத் தானே யோசிச்சு யோசிச்சு வேலை செஞ்சிட்டு இருக்கேன்…. எது எதுக்கோ செலவிடுற  அந்த ஓய்வு நேரத்தில ஒரே ஒரு தடவ அலைபேசியில கூப்பிட்டு என்னம்மா என்ன செய்யுற ? சாப்டியானு ஒரு வார்த்தை கேட்க கூடாதா? வெளியூர் போனா கூட  இப்படித்தான் இருக்க?மனோ.

            கல்யாண உறவு அவ்வளவு தானா? நான் உன்கிட்ட அதிகபட்சமா எதிர்பார்க்கிறது ஒரு அன்பான விசாரிப்பு தானே! அதுகூட இல்லாத தாம்பத்திய வாழ்க்கைக்கு என்ன பேரு தெரியுமா? முன்னாடி நம்ம வீட்ல ஒரே ஒரு தொலைபேசி இருந்துச்சு. ஆனா இப்போ மூணு திறன்பேசி இருக்கு. பேசத்தான் நேரம் இல்லாமல் போச்சு. கல்யாணமாகி கொஞ்ச வருஷம் ஆகிட்டா எதுவும் பேசக் கூடாதா? என்கிட்ட பேச, பகிர, உங்களுக்கு ஒண்ணுமே இல்லையா? இல்ல உங்கிட்ட  பேச ,பகிர  எனக்கு எதுவுமே இருக்காதா? இருக்கக் கூடாதா ?எனக்கு தெரியல மனோ?

              ரொம்ப தனிமையாய் இருக்கு. குழந்தைங்க வளர ஆரம்பிச்சிட்டாங்க… இப்ப தான் என்னோட தனிமையை நான் நல்லாவே உணர்ந்து பாக்கிறேன் …காலைல 5 மணியிலிருந்து ராத்திரி பத்து மணி வரைக்கும் வேலை இருக்கு …இல்லன்னு சொல்லல …ஆனா தனிமையும் இருக்கு… உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது….

               ஆனால் அவன் அப்படி இல்ல தெரியுமா? ஒரு  நேரமில்லை மூணு நேரமும் சாப்பிட்டியான்னு கேப்பான்…. வாய்ப்பு கிடைக்கிறப்பதான் பேசுவான்னு இல்ல. என்கிட்ட பேசறதுக்காகவே வாய்ப்ப  ஏற்படுத்திப்பான். எனக்கு பேச ஒன்னும் இல்லடான்னு சொன்ன பிறகும் கூட என்னையே மணிக்கணக்காக பேச வச்சிருக்கான் .அப்போ எல்லாம் மனசு இறகு மாதிரி எவ்வளவு லேசா இருக்கும் தெரியுமா? அந்த அன்பான பேச்சுக்காகவே அவனுக்காக என்ன வேணாலும் செய்யலாம்… எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ளாலாம்னு தோணும் . அந்த உணர்வு உங்கிட்ட எனக்கு வரல மனோ… அதனால தான் சொல்றேன்.

                               எனக்கு நீ வேண்டாம்!!! அவன் தான் வேண்டும்!!!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...