உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 5 – சுதா ரவி

 உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 5 – சுதா ரவி
அத்தியாயம் – 5
அன்று ஞாயிறு விடுமறை தினமாதலால் காலை உணவை முடித்து  விட்டு குடும்பத்தினர் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, எப்பவும் போல் அதில் கலந்து கொள்ளாமல் தன் அறையில் இருந்த கதிர் நண்பனை பார்க்க கிளம்பினான்.
சந்தன நிற பேண்ட்டும் கரு நீல சட்டையும் அணிந்து ஒரு மாடல் போல் இறங்கி வந்த மகனை பெருமிதம் பொங்க பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரி. கதிரை பார்த்ததுமே சற்று முகத்தை சுளித்த தாண்டவம் “சின்னையா  எங்கே கிளம்பிட்டீங்க?” என்று நக்கலுடன் கேட்டார்..
அவரின் முகத்தை நிமிர்ந்து பார்க்க சங்கடப்பட்டுக் கொண்டே “விஸ்வாவை பார்க்க போறேன் பா” என்றான்.
“அவன் சென்னையில வேலைக்கு போயிட்டானே.கல்யாணம் கூட ஆகிடுச்சு இல்ல. ஊர்ல உள்ள புள்ளை எல்லாம் உருப்பட்டு போச்சு. நீ எப்போ தான் உருப்பட போறியோ?”என்றார்.
“ம்ம்ம்…லீவ் போட்டுட்டு வந்து இருக்கான் பா”
அவனை தன் அருகே அமர சொல்லிவிட்டு “இங்கே பாரு கதிர் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே சுத்திட்டு இருப்பே?கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க முயற்சி பண்ணு.அப்புறம் சாயங்காலம் உனக்கு பொண்ணு பார்க்க போறோம்.என் பிரெண்ட் மயில்வாகனம் பொண்ணு தான்.போட்டோ கொடுத்தாளா அம்மா பார்த்தியா?” என்று கேட்டார் தாண்டவம்.
பெண் பார்க்க போக வேண்டும் சொன்னதில் சற்று அதிர்ந்து தன் அம்மாவை பார்த்துவிட்டு “ம்ம்…பார்த்தேன் பா. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே பா” என்றான் மெல்லிய குரலில்.
அவனது பதிலில் எரிச்சலடைந்த தாண்டவம் “இப்போவே உனக்கு ஒருத்தனும் பொண்ணு கொடுக்க மாட்டேங்குறான். உன் அண்ணனுங்களுக்கும் தான் கல்யாணம் பண்ணினேன் இந்த மாதிரி  கஷ்டபட்டதில்ல” என்றார்.
அவர் பேசியதை கேட்டு மருமகள்கள் இருவரும் தங்களுக்கு வந்த சிரிப்பை அடக்கி கொள்வதை பார்த்த ஈஸ்வரி கோவத்தை உள்ளடக்கிக் கொண்டு “சரி கதிர் நீ கிளம்பு , சீக்கிரம் வந்துடு. மகா,வணி நீங்க போய் மதியம் சமையலுக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்றார்.
அவர்கள்  கிளம்பியதும் “அதென்ன எப்ப பாரு அவனை இந்த மாதிரி பேசிட்டே இருக்கீங்க, சுற்றிலும் வீட்டு வேலை ஆளுங்க இருக்காங்க,வீட்டுக்கு வந்த மருமகளுங்க இருக்காங்க, எல்லோரையும் வச்சுகிட்டு நீங்களே இப்படி கன்னா பின்னான்னு பேசினா யார் மதிப்பாங்க சொல்லுங்க” என்றார் ஈஸ்வரி.
“அம்மா விடுங்க. அப்பா அவன் நல்லா வரணும்ன்னு தானே சொல்றாங்க.அதுக்கு போய் ஏன் மா இப்படி பேசுறீங்க” என்றான் கந்தவேல்.
“இங்கே பாரு கந்தா நீ பேசாதே.கூடப் பிறந்த தம்பின்னு நீங்க ரெண்டு பேரும் அவன் கிட்ட கொஞ்சம் கூடப் பாசமா நடந்துகிறது இல்ல.எப்ப பாரு அவனை கேலி பண்ண வேண்டியது” என்று வருத்தத்துடன் சொன்னார் ஈஸ்வரி.
அதுவரை அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குமாரவேல் எழுந்து சென்று அம்மாவின் அருகில் அமர்ந்து அவர் கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு “நாங்க கேலி பண்ணினாலும் எங்களுக்கும் அவன் மேல பாசம் இருக்குமா டென்ஷன் ஆகாதீங்க ப்ரீயா இருங்க. சாயந்திரம் பொண்ணு பார்க்க போகனுமில்ல””என்றான்.
கண்கள் கலங்க “சும்மா என்னை சமாதனப்படுத்த சொல்வீயே தவிர நீயும் சேர்ந்து தான் கேலி பேசுறே குமாரு.எனக்கு என் புள்ளைங்க எல்லாம் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்க கூடாது.எப்பவும் அதை மனசில வச்சிங்கப்பா” என்றார் ஈஸ்வரி.
மனைவியின் கோபம், அழுகை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த தாண்டவம் “வர வர நீ ரொம்ப உணர்ச்சிவசப்படுறே ஈஸ்வரி.புள்ளை சரியில்லேன்னா  எடுத்து சொல்றது பெத்தவங்க கடமை.அதை எடுத்து வச்சு பெரிய விஷயமா பேசிட்டு இருக்கே நீ” என்றார்.
“அப்படி இல்லைங்க என்ன தான் நான் அவன் கிட்ட பாசமா நடந்துகிட்டாலும், ஒரு தகப்பனா நீங்க அவனை வழி நடத்தனும். ஆனா, நீங்க அவனுக்கு ஆதரவா இருக்காம அவனை காயப்படுத்திக்கிட்டு இருக்கீங்க.அவன் முன்னே மாதிரி இல்லைங்க இப்போ. பத்து வயசு வரைக்கும் தான் என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு இருந்தான். இப்போ அவனுக்குள்ளேயே வச்சுக்க ஆரம்பிச்சிட்டான். இதெல்லாம் நல்லதுக்கில்லை”என்றார் ஈஸ்வரி.
ஈஸ்வரியின் பேச்சில் கடுப்பான தாண்டவம் “எனக்கு புள்ளைங்களை வளர்க்க தெரியும் ஈஸ்வரி. நான் வளர்த்த பசங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கானுங்க. சும்மா தேவையில்லாததை போட்டு மனசை உழப்பிக்காம இரு”என்று சொல்லி அங்கிருந்து எழுந்து சென்றார்.
காரை விஸ்வாவின் வீட்டின் முன்னே நிறுத்தி விட்டு வீட்டிற்குள் நுழையும் முன் பக்கத்து வீட்டை ஒரு முறை ரசனையுடன் பார்த்து விட்டு உள்ளே நுழைந்தான்.
அவன் வருவதை பார்த்து அறைக்குளிருந்த விஸ்வா ஓடி வந்து அணைத்துக் கொண்டான் “மச்சான் எப்படி டா இருக்கே? பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? என்னால தான் வர முடியல நீயாவது வந்து பார்த்திட்டு போய் இருக்கலாமில்ல”.
அவன் அன்பில் உருகி நின்றவன் “நல்லா இருக்கேன் மச்சான்.நான் எங்கே வந்து உன்னை பார்க்கிறது.நீ தான் சம்சாரி ஆகிட்டியே.தங்கச்சி நல்லா இருக்கா ?”
அதற்குள் அங்கு வந்த விஸ்வாவின் அம்மா கதிரை விசாரிக்க அவரிடம் ரெண்டு வார்த்தை பேசிவிட்டு.அவர் தந்த காப்பியை குடித்து விட்டு இருவரும் மாடிக்குச் சென்றனர்.
அங்கு சென்றதும் அவன் கண்கள் தன்னை அறியாமலே பக்கத்து வீட்டை நோட்டமிட்டது. அவனது ஒவ்வொரு அணுவும் அந்த வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் ரசித்தது. கதிரின் பார்வை சென்ற இடங்களை கண்ட விஸ்வா மெல்ல அவன் அருகில் வந்து “என்ன மச்சி நாலு வருஷம் ஆச்சு இன்னுமாடா மறக்கல”.
கண்களை அங்கிருந்து அகற்றாமலேயே “நாலு வருஷம் இல்ல…எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவளையும் அவள் நினைவுகளையும் என் கிட்டே இருந்து பிரிக்க முடியாதுடா”என்றான் கதிர்.
அவன் தோள்களை அழுத்தி பிடித்து திருப்பிய விஸ்வா “மறக்கணும் டா.உனக்கு இன்னும் வாழ வேண்டிய வாழ்க்கை நிறைய இருக்கு போனவளை நினைத்து உன் வாழ்க்கையை இழந்திடாதே”என்றான் விஸ்வா.
அவன் கண்களை ஆழ்ந்து நோக்கிய கதிர் “மத்தவங்க இந்த வார்த்தையை என் கிட்ட சொல்லலாம் ஆனா நீ சொல்லலாமா விஸ்வா?  உனக்கு தெரியும் நான் அவள் மேல எந்த அளவுக்கு உயிராய் இருந்தேன்னு. அவ இந்த உலகத்தை விட்டு போயிருந்தாலும் அவ என்னோடவே என் கூடவே எப்பொழுதும் வாழ்ந்துகிட்டு தான் இருக்கா”என்றான்.
அவனின் வலி புரிந்தாலும் சாத்தியமில்லாத ஒன்றுக்காக நண்பன் தன் வாழ்க்கையை அழித்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் “போன தடவை வந்தப்பவே அம்மா ரொம்ப கவலைப்பட்டாங்க மச்சி.நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றேன்னு சொல்லி. எத்தனை நாளைக்கு தான் செத்து போனவளையே நினைச்சுக்கிட்டு உன் வாழ்க்கையை அழிச்சுக்க போற.பேசாம அம்மா சொல்ற பெண்ணை கல்யாணம் பண்ணிக்கடா”என்றான் விஸ்வா.
அவன்  சொன்ன எதையுமே காதில் வாங்காமல் கண்கள் கனவில் மிதக்க “இங்கே தாண்டா அவளை பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில்  பார்த்தேன்.வானத்திலிருந்த ஒரு தேவதை இறங்கி வந்து ஆடுகின்ற  மாதிரி ஆடினாள்.அவளின் கண்கள் ரெண்டும் துள்ளி விளையாடும் மீன் போன்றும், பிறை நெற்றியும், வில் போன்ற புருவமும் கொடி இடையும் என்னை பைத்தியக்காரனாய் அவள் பின்னேயே சுத்த வைத்ததை மறந்திட்டியா?”

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...