ஆக்ரா பெயரை மாற்ற ஆதித்யநாத் அரசு முனைவது ஏன்?
ஆக்ரா பெயரை மாற்ற ஆதித்யநாத் அரசு முனைவது ஏன்?
மெஹ்ர் கில், கட்டுரையாளர்
உத்தரபிரதேச அரசு ஆக்ராவின் பெயரை அக்ரவன் என்று மாற்ற திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையிடம் பண்டைய காலங்களில் இந்த நகரம் வேறு எந்த பெயரிலாவது அறியப்பட்டதா என்பதை ஆராயுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் அரவிந்த் தீட்சித், “நானும் உள்ளூர் ஆராய்ச்சி அறிஞர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் அடங்கிய ஒரு குழுவினர் ஆக்ராவுக்கு எப்போதாவது ஒரு பண்டைய பெயர் இருந்ததா என்று அறிய ஆவணக் காப்பகத்தை ஆராய்ந்து வரலாற்றுப் பதிவுகளை ஆவணப்படுத்துவோம்” என்று பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
யோகி ஆதித்யநாத் அரசு அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்றும், முகல்சரய் சந்திப்பு ரயில் நிலையத்தின் பெயரை பண்டிட் தீன் தயால் உபாத்யாய சந்திப்பு என்றும், பைசாபாத் மாவட்டத்தை அயோத்தி என்றும் மாற்றியது.
இந்த பெயர் மாற்றம் எப்போது தொடங்கியது?
ஆக்ராவுக்கு மறுபெயரிடக் கோரி சில உள்ளூர் மக்கள் உத்தரப் பிரதேச அரசாங்கத்தின் முத்திரை மற்றும் பதிவு இணையதளத்தில் ஒரு அஞ்சல் எழுதிய பின்னர் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்த கோரிக்கை ஆக்ரா நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு அது பல்கலைக்கழகத்தை அணுகியது.
உத்தரப் பிரதேசத்தில் பலமுறை பாஜக எம்.எல்.ஏ வாக இருந்த ஜெகன் பிரசாத் கார்க் இந்த ஆண்டு காலமானார். அவர் முன்பு ஆக்ராவுக்கு ‘அக்ரவன்’ என்று பெயர் மாற்றுமாறு கோரி ஆதித்யநாத் அரசுக்கு முன்பு கடிதம் எழுதினார்.
ஆக்ராவும் அக்ரவானும்
பொது ஆண்டு 2ஆம் நூற்றாண்டில் எகிப்தின் ரோமானிய மாகாணத்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா நகரில் வாழ்ந்த கிரேக்க வானியலாளர், கணிதவியலாளர், புவியியலாளர் கிளாடியஸ் தாலமி தான் ஆக்ரா நகரத்தைப் பற்றிக் குறிப்பிடும் முதல் வரலாற்றாளர் என்று நம்பப்படுகிறது.
“இதில் டெல்லி, மதுரா, ஆக்ரா மற்றும் பிற இடங்களை கடந்து கங்கையில் இணையும் யமுனா நதியை காண்பது எளிது. அதில் அலகாபாத்தில் மிகப்பெரிய செல்வந்தர்கள் உள்ளனர்” என்று தாலமி எழுதிய ஜியோகிராஃபியா (புவியியல்) படைப்பை 1885 ஆம் ஆண்டு ஜே.டபிள்யூ மெக்ரிண்டிலின் மொழிபெயர்ப்பில் பண்டைய இந்தியா தாலமியால் விவரிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டில் ஜெபா சித்திகி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைக்கு, முகலயார்களின் கீழ் ஆக்ரா நகரம் 1526 – 1707 வரை என்ற தலைப்பில் ஒரு ஆய்வை சமர்ப்பித்தார். அந்த ஆய்வு, ஆக்ராவைப் பற்றி முந்தைய குறிப்பு மகாபாரதத்தில் காணப்படுகிறது. அங்கே அது ‘அக்ரவன’ என்று குறிப்பிடப்படுகிறது. மகாபாரதத்திற்கு முந்தைய ஆதாரங்களில், நகரம் ஆரிய கிரஹம் அல்லது ஆரியர்களின் வீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று இந்த ஆய்வறிக்கை வாதிடுகிறது.
சில வரலாற்றாசிரியர்கள், ஆக்ரா என்ற பெயர் ‘அகர்’ என்ற இந்தி வார்த்தையிலிருந்து வந்தது என்றும் அதற்கு பொருள் ‘உப்பளம்’ என்று சித்திகி கூறினார். இந்த நகரம் பிரிஜ்பூமியின் ஒரு பகுதி என்றும் இந்த நிலம் கிருஷ்ணரின் பிறப்பு மற்றும் புகழ்பெற்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என்று சித்திகி எழுதினார்.
ஆக்ராவுக்கு இந்து மன்னர் ஆக்ரேமேஷ் அல்லது ஆக்ரேமேஷ்வரின் பெயரிடப்பட்டது என்று தாலமி நினைத்திருக்கலாம் ஆய்வறிக்கை வாதிட்டது. ஆக்ரா கிருஷ்ணரின் தாத்தா மகாராஜா அக்ரசேனர் அல்லது உக்ரசேனர் என்பவரால் நிறுவப்பட்டது என்று ஒரு மாற்று பார்வை உள்ளது.
உத்தரப்பிரதேச அரசின் இணையதளம் ஒன்று, “ஆக்ரா மகாபாரத காலத்திலிருந்து வரும் ஒரு பண்டைய நகரம் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனாலும்கூட, டெல்லி சுல்தானாக இருந்த முஸ்லிம் ஆட்சியாளரான சுல்தான் சிக்கந்தர் லோடி 1504 ஆம் ஆண்டில் ஆக்ராவை நிறுவினார்” என்று கூறுகிறது.
மேலும், இந்த இணையதளம், இந்நகரத்தின் ‘பொற்காலம்’ முகலாயர்களுடன் தொடங்கியது என்று கூறுகிறது. அப்போது அக்பராபாத் என்று அழைக்கப்பட்டது. இந்த நகரம் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டெல்லி சுலிதானியத்தின் தலைநகராக செயல்பட்டது.
முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்த நகரம் மராட்டியர்களின் செல்வாக்கின் கீழ் வந்தது. அதற்குப் பிறகு, அவர்கள் ஆக்ரா என்று அழைக்கத் தொடங்கினர் என்று அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த இணையதளம், ஆக்ரா பொது ஆண்டுக்கு முன் 1000-இல் சமணத்தின் சௌரிப்பூருடனும் இந்து மதத்தின் ரனுக்தாவுடனும் வரலாற்றுத் தொடர்பு கொண்டிருந்தது” என்று குறிப்பிடுகிறது.