நீயெனதின்னுயிர் – 6 – ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 6 – ஷெண்பா
6
‘இந்த ஜோதியை எப்படிச் சமாளிப்பது?’ என்ற யோசனையுனே இருந்தவள், விக்ரமின் பேச்சைக் கவனிக்கவில்லை.
தனது கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிந்தனையில் இருப்பவளைப் பார்த்துவிட்டு, காரை ஓரமாக நிறுத்தினான். அவளைப் பெயர் சொல்லி அழைத்தும் கவனமில்லாமல் இருந்தவளை, “வைஷாலி!” என்றபடி அவளது கையைப் பற்றி, லேசாக உலுக்கினான்.
“ஹாங்!” என்றவள், கனவிலிருந்து விழித்தெழுபவளைப் போல, திடுக்கிட்டுத் திரும்பினாள்.
“என்ன ஆச்சு? ஏன் இப்படித் தன்னை மறந்து உட்கார்ந்திருக்க?”
“ஒண்ணுமில்லை சார்…” என்று சிரித்து மழுப்பினாள் அவள்.
“என்னிடம் சொல்லக் கூடாத அளவுக்கு பர்சனலான விஷயம் போல… ஓகே!” என்று சொல்லிவிட்டு, தோள்களைக் குலுக்கினான்.
அவனது பதில் அவளுக்குச் சங்கடத்தைக் கொடுக்க, “பர்சனல் தான். ஆனால், சொல்ல முடியாத அளவுக்கு இல்ல. இன்னைக்கு என் ஃப்ரெண்டுக்குப் பிறந்தநாள். வருஷாவருஷம், நான் அவங்க வீட்டில் இருப்பேன். அதான், நான் வரலைன்னதும், எனக்கு ஃபோன் செய்திருக்கா…” என்றாள்.
“அடடா! முன்னாலேயே சொல்லியிருந்தால், நாம, இன்னொரு நாளைக்கு வந்திருக்கலாமே…!” என்றான் வருத்தத்துடன்.
“நான் சொல்ல வந்தேன். நீங்க…” என்றவள், தடுமாற்றத்துடன் மேற்கொண்டு சொல்லாமல் நிறுத்தினாள்.
“ஆமாம், என்னவோ சொல்ல வந்தீங்க, நான்தான் பேசவேவிடலையே. ஓகே! இன்னைக்கு உங்களைத் தர்மசங்கடத்தில் மாட்டி விட்டது நான். சோ, நானே உங்களை அவங்க வீட்டில் கொண்டு போய் விட்டுடுறேன்.”
வைஷாலிக்கு கதிகலங்கியது. ‘இவன் அங்கே வந்து ஜோதியைப் பார்த்தால், அவ்வளவுதான்; எல்லாமே கெட்டுடும். இப்போதைக்கு இவனுக்கு எதுவும் தெரிய வேண்டாம். அதற்கான சந்தர்ப்பம் வரும் போது தெரிந்தால் போதும்!’ என்று நினைத்துக் கொண்டாள்.
பதட்டத்தை மறைத்துக் கொண்டு, “உங்களுக்கு எதுக்கு சார் வீண் சிரமம்? நீங்க என்னை சிட்டிக்குள்ள போனதும் இறக்கிவிட்டால் போதும், நான் அங்கிருந்து ஆட்டோ பிடிச்சிப் போயிடுவேன்” என்றவள், ‘கடவுளே! இவன் இதுக்கு சரின்னு சொல்லணுமே!’ என்ற வேண்டுதலுடன், அவனது பதிலுக்காக காத்திருந்தாள்.
யோசனையுடன் ஸ்டியரிங் வீலில் விரல்களால் தாளமிட்டவன், “ஓகே! நோ பிராப்ளம்!” என்றபடியே தோள்களைக் குலுக்கினான். அதன்பிறகு, அவனுடன் பேசிய எதுவும் முழுதாக மனத்தில் பதியா விட்டாலும், மேலோட்டமாக அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். அவள் சொன்ன இடத்தில் காரை நிறுத்தினான்.
பரபரப்புடன் இறங்கி, “தேங்க்யூ சார்!” என்ற வார்த்தையுடன் அவனிடமிருந்து விடைபெற்றவள், பின்னால் வந்த ஆட்டோவைக் கைக்காட்டி நிறுத்தி ஏறிக்கொண்டாள். அவளது செய்கை அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. புன்னகைத்தபடி சிறு தலையசைப்புடன், காரைக் கிளப்பினான்.
காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, வீட்டுச் சாவியை எடுக்க டாஷ் போர்டைத் திறந்தவனின் கைவிரல்களில் மெத்தென்ற ஸ்பரிசம்பட, என்னவென்று எடுத்துப் பார்த்தான். சிகப்பு நிறத்தில் வெல்வெட் ரோஜாக்களால் அலங்கரிப்பட்ட அழகான சுறுக்குப் பை. ‘வைஷாலிக் கென்று ஆசையாகக் கொடுத்தது, இங்கே எப்படி வந்தது?’ என்று யோசித்தவனுக்கு, நடந்தது சட்டென விளங்கியது.
‘அடடா! இறங்கும் போது எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னாளே.  அவசரத்தில் மறந்து விட்டாளோ! நானும் கவனிக்கவில்லையே… அவளுக்காக, தேடிப் பிடித்து வாங்கி வந்தேன். அவளுக்குப் ஃபோன் செய்து, அன்பளிப்பு பிடித்திருந்ததா?’ என்று கேட்க நினைத்த நினைப்பெல்லாம் வீணாகிவிட்டதே!’ – சலிப்பாக இருந்தது அவனுக்கு.
காரைப் பூட்டிக்கொண்டு இறங்கியவன், ‘ஆஹா! இப்போ, இதைத் திரும்ப கொடுக்கும் சாக்கில் அவளை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு!’ என்று விரைந்தோடி வந்த எண்ணத்தில், அவனது உதடுகள் புன்னகையில் மலர்ந்தன.
“வாம்மா வைஷு! சௌக்கியமா?” என்று விசாரித்தார் ஜோதியின் தந்தை மணிகண்டன்.
“நல்லாயிருக்கேன் அங்கிள்” என்றவள், அவரது நலனை விசாரித்துவிட்டு, “ஜோதியைத் தேடிச் சென்றாள்.
மொட்டை மாடியில் உம்மென்ற முகத்துடன் அமர்ந்திருந்த ஜோதியைப் பார்த்தாள். மெல்ல அடிமேல் அடி வைத்து ஓசையெழுப்பாமல் சென்று, அவளது கண்களைப் பொத்தினாள்.
“உன்னைக் கண்டுபிடிக்கிறது பெரிய கஷ்டமாக்கும்? முதல்ல கையை எடுடி!” என்ற ஜோதி, வைஷாலியின் கைகளைத் தள்ளிவிட்டாள்.
“ஹலோ மேடம்! ரொம்பத் தான் பிகு பண்றீங்க!”
“பேசாதே நீ! கொன்னுடுவேன். இத்தனை வருஷத்தில், ஒரு நாளாவது நீ வராமல் இருந்திருக்கியா?” என்று கோபத்துடன் கேட்டாள்.
“அதான், இப்போ வந்துட்டேனே. இன்னும் என்னடி கோபம்?”
“ஆறரை மணிக்கு வந்திருக்க, ஏழு மணிக்கு, காலில் சுடுதண்ணியை கொட்டினது மாதிரி கிளம்பி ஓடப் போற… இதுக்கு, நீ வராமலேயே இருந்திருக்கலாம்!” என்றாள் கோபம் குறையாமலே.
“அதானே! வராமலேயே இருந்திருக்கலாமே… ஏன் வரணும்? சரி, உனக்கு நான் வந்தது பிடிக்கலை போல… நான் கிளம்பறேன்! ” – நகர முயன்றவளைப் பிடித்து இழுத்தாள் ஜோதி.
“வந்தவளை வான்னும் சொல்ல மாட்ட; கிளம்பினாலும் விடமாட்ட! என்னதான்டி உன் பிராப்ளம்? எனக்கும் ஆயிரத்தெட்டு வேலை இருக்குடியம்மா!” என்று சற்றே எரிச்சலுடன் சொன்னாள் வைஷாலி.
அவளைப் பிடித்திருந்த பிடியைத் தளர்த்திய ஜோதியின் கண்கள் கலங்கின. “தப்புதான் வைஷு. என்னோட சந்தோஷத்துக்காக, உன்னைப் பாடாய்ப்படுத்தறேன் இல்ல. அன்னைக்கு நான் மட்டும் ஒழுங்கா இருந்திருந்தால், இன்னைக்கு… இப்படியொரு நிலைமையோட இந்த வீட்டில் வந்து உட்கார்ந்திருப்பேனா?” என்று அழுதவள், மேடிட்டிருந்த தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டாள்.
“ஹேய்! ஜோதி! நான், அந்த அர்த்தத்தில் சொல்லலைடா. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?” என்றவள், அவளது முகவாயைப் பற்றிக் கண்களைத் துடைத்து விட்டாள்.
“நீ வேணா பாரு… இன்னும் மூணே மாசம்! இந்தப் பிரச்சனையெல்லாம் தீர்ந்துடும். சிங்கக்குட்டி மாதிரி உன்னோட பையன் வெளியே வந்ததும், இத்தனை நாள் என் அம்மாவைத் தவிக்க விட்டுட்டு எங்கேடா போனேன்னு, அவனோட அப்பாவை நாலு உதை உதைக்கப் போறான். நான் அதைப் பார்க்கத் தான் போறேன்!” என்று புன்னகைத்தவளை அணைத்துக் கொண்டாள் ஜோதி.
“சாரி வைஷு! எனக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்கறது நீ தான். என்னோட கோபத்தையும், ஆதங்கத்தையும் பகிர்ந்துக்க எனக்குன்னு இருப்பது நீ ஒருத்தி தான். அதான், நீ வரலைன்னதும் எனக்குக் கோபமா வந்தது.”
“தெரியும்டா. என் மேலேயும் தப்பிருக்கு; சரி, ஒண்ணு பண்ணலாம்… இதுக்கு காம்பன்சேட் பண்ண, அடுத்த வாரம் காலைல இங்கே வந்துட்டு, ஈவ்னிங் போறேன். ஓகேவா?” என்றதும், சந்தோஷமாகத் தலையசைத்தாள் ஜோதி.
“ஓகே! பிராப்ளம் சால்வ்ட். உன் கையால் செய்த கேசரியைச் சாப்பிடணும் போல இருக்கு. எனக்குனு எடுத்து வச்சிருக்கியா? இல்ல… கோபத்தில் என் பங்கையும் சேர்த்து, நீயே சாப்பிட்டுட்டியா?”
“அதெல்லாம் நிறையவே இருக்கு. நீ வா!” என்று தோழியை அழைத்துக்கொண்டு கீழே சென்றாள்.
‘ஜோதியின் சந்தோஷமான நாட்கள், மீண்டும் அவளது வாழ்வில் வரவேண்டும்’ என்று கடவுளை மனதார வேண்டிக்கொண்டாள் வைஷாலி. அவளது இத்தனைக் கவலைகளுக்கும் காரணமானவன், அவளைத் தேடி வரும் நாள் விரைவிலேயே வரும்’ என்று நம்பினாள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...