திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியாகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 27ம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் 28ம் தேதி பரிசீலனை செய்யப்படும்.
வேட்புமனுவை திரும்ப பெற 30ம் தேதி கடைசி நாள். திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு என்பது மிகவும் சுமுகமாக நடந்தது. கூட்டணி கட்சிகளுக்கு தமிழகத்தில் 18 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை எந்த தொகுதிகள் என்பது தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. அதாவது வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, பெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி), கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, தென்காசி (தனி) ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. கடந்த முறை திமுக போட்டியிட்ட திருநெல்வேலி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக புதிதாக கோவை, தேனி, ஆரணி, ஈரோடு ெதாகுதியில் திமுக போட்டியிடுகிறது. மேலும் கடந்த முறை திமுக கூட்டணியில் பெரம்பலூரில் ஐஜேகே கட்சி போட்டியிட்டது. இந்த முறை இந்த தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. இந்த 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிடுகிறார்.
கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகமானோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. கோவை, தேனி, ஆரணி, ஈரோடு ஆகிய 4 தொகுதிகளில் புதிய வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர். தேர்தல் அறிக்கை: அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக சொத்து பாதுகாப்பு குழுச் செயலாளர்-அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர்-அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுக வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகிய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவினர் பிப்ரவரி 5ம் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்தனர். இதில் எழுத்துப்பூர்வமாக மனுக்கள் வாங்கியதுடன் தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் பெறப்பட்டிருந்தது. அதில் தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள், 2,500க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகள் பெறப்பட்டிருந்தது. அண்ணா அறிவாலயத்திற்கு 600க்கும் மேற்பட்ட கடிதங்களும் பரிந்துரையாக வந்திருந்தது. 40 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்து வந்துள்ளனர்.
தொடர்ந்து அந்த குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் பிரச்னை என்.எல்.சி. விரிவாக்கம், வங்கி கடன்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற உள்ளன. பெண்கள் நலன் சார்ந்து பல்வேறு விஷயங்களும் இதில் இடம்பெறுகிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இந்த முறை கதாநாயகியாக கூட இருக்கலாம் என்று கனிமொழி
ஏற்கனவே கூறி இருந்தார். அதன்படி தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்களை இடம்பெற செய்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நகல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அதில் அவர் சில திருத்தங்களை செய்ததுடன் புதிய அம்சங்கள் சிலவற்றையும் இடம்பெற செய்யுமாறு வலியுறுத்தினார். அதன்படி திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையும் தயாராக உள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கும், வேட்பாளர் பட்டியலை 10 மணிக்கும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட உள்ளார். அதில் தமிழகம் முழுவதிற்கும் பொதுவான ஒரு தேர்தல் அறிக்கையும், மேலும் ஒவ்வொரு தொகுதி சார்ந்து ஒரு தேர்தல் அறிக்கை என்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.
* விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் பிரச்னை, என்.எல்.சி. விரிவாக்கம், வங்கி கடன்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற உள்ளன.
* பெண்கள் நலன் சார்ந்து பல்வேறு விஷயங்களும் இதில் இடம்பெறுகிறது. தமிழகம் முழுவதிற்கும் பொதுவான ஒரு தேர்தல் அறிக்கையும், ஒவ்வொரு தொகுதி சார்ந்து ஒரு தேர்தல் அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.
* தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கும், வேட்பாளர் பட்டியலை 10 மணிக்கும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட உள்ளார்.