கலைவாணர் எனும் மா கலைஞன் – 4 – சோழ. நாகராஜன்

 கலைவாணர் எனும் மா கலைஞன் – 4 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன்

4) இன்று நாஞ்சில்நாட்டின் பெருமை நாளை தமிழகத்தின் பெருமை…
‘கோவலன்’. டிகேஎஸ். குழுவினர் 1925 மார்ச் 31 அன்று அரங்கேற்றிய முதல் நாடகம்தான் அது. கலைவாணர் ஏற்ற முதல் வேடம் பாண்டியன் நெடுஞ்செழியன். பிறகு சாவித்திரி நாடகத்தில் துயுமத்சேனன் பாத்திரம். மனோஹராவில் பௌத்தாயணன் வேடம். அப்புறம் அரங்கேறிய அபிமன்யூ சுந்தரி நாடகத்தில் கிருஷ்ணனுக்கு தொந்திச் செட்டி வேடம். இப்படி தானொரு தவிர்க்க இயலாத கலைஞராக வளர்ந்துவந்தார் கிருஷ்ணன். தொடர்ந்து அவருக்கு வயதான கதாபாத்திரமாகவே கிடைத்துவந்தது. ஆனால், யதார்த்தத்தில் அவர் அப்படியா?
மாதத்தில் பத்து நாட்கள் நாடகம் நடக்கும். மற்ற நாட்களில் விளையாட்டும் கும்மாளமுமாகவே பொழுதுகள் கழியும். சடுகுடு எனும் கபடி, நொண்டி விளையாட்டு இப்படிப் பலவும் அங்கே பயிலப்படும். நாடகத்தில்தான் முதியவர் வேடங்களாக கிருஷ்ணனுக்குத் தரப்படுகிறதே தவிர உண்மையில் எந்த விளையாட்டானாலும் அவர் இருக்கும் குழுவே வெற்றிவாகை சூடும் நிலை. அதற்கெல்லாம் கிருஷ்ணனின் சுறுசுறுப்பான ஈடுபாடே காரணமாகியிருந்தது. அதனால், நாடக வாத்தியார் டி.கே. சண்முகம் எப்போதும் கிருஷ்ணனின் அணியிலேயே சேர்ந்துகொள்வார். ஆனாலும், அவர் இரண்டு அணிகளையும் ஒன்றுபோலவே பார்ப்பார். எல்லொருடனும் அன்பொழுகப் பழகும் கிருஷ்ணனின் குணம் அவரை அவர்களின் தலைவர்போல ஆக்கியது. நாடகக் குழுவினர் எல்லாருடைய நல்லது – கெட்டதுகளில் வாஞ்சையோடு ஈடுபடுவார் அவர். அதனால், எல்லொரும் அவரைத் தங்கள் சொந்தச் சகோதரரைப்போலவே கருதிவந்தார்கள்.
சகோதரர்களின் நாடகக் குழுவான மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபா திருவனந்தபுரத்தில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தது. நாடக ரசிகர்கள் குவிந்த வண்ணமிருந்தார்கள். மொத்தம் ஆறு நாடகங்களை நடத்திய அந்தக் குழு தனது முகாமை அங்கிருந்து நாகர்கோவிலுக்கு மாற்றியது. அங்கும் நாகர்கோவிலை அடுத்த கலைவாணரின் சொந்த ஊரான ஒழுகினசேரியிலிருந்த சரஸ்வதி ஹாலில் நாடகங்கள் தொடங்கின.
அது கலைவாணரின் சொந்த ஊராகையினால், அங்கேயிருந்த அவரது நண்பர்கள் அவரைப் பாராட்டவேண்டும் என்று எண்ணினார்கள். அவர்களது விருப்பத்தின்படி ஒரு விழாவுக்கு ஏற்பாடு நடந்தது. அன்றைய நாடகத்தைப் பார்க்க வந்திருந்த முக்கியப் பிரமுகர்களில் கோட்டாறு பெரும்புலவர் சதாவதானி செய்குதம்பிப் பாவலரும் ஒருவர்.
நாகர்கோவிலை அடுத்த இளங்கடை எனும் கிராமத்தில் 1874 ல் பிறந்தவர் செய்குதம்பிப் பாவலர். இஸ்லாமியரான பாவலர் தமிழின் சங்க இலக்கியம் தொடங்கி, சைவ – வைணவ பக்தி இலக்கியங்கள் என தமிழின் அத்துணை இலக்கிய வகைமைகளையும் கற்றுத் தேர்ந்தவராவார். தமது 16 ஆம் வயதிலேயே நல்ல கவி புனையும் ஆற்றல் வரப்பெற்றவரான செய்குத்தம்பிப் பாவலர் படைத்தவை சம்சுத்தாசீல் கோவை, கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, திருநாகூர் திரிபந்தாதி போன்ற சமயம் சார்ந்த இலக்கியங்களாகும். அவர் தம் பகுதியில் இஸ்லாத்தையும் தமிழையும் ஒருசேர வளர்த்த பெருமகனாவார்.
அதுமட்டுமல்ல, திருவருட்பா எனும் வள்ளலாரின் பெருமை சொல்லும் நூலின் ஆறு திருமுறைகளையும் நன்கு பயின்றதுடன், கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வள்ளல் பெருமானின் அருட்பாவை ‘அது அருட்பா அல்ல, மருட்பா’ – என்று வழக்குத் தொடுக்கப்பட்டபோது இராமலிங்க வள்ளலாருக்கு ஆதரவாகத் திரண்ட சமய உணர்வுள்ள புலவர்களோடு இணைந்துகொண்டார் செய்குத்தம்பிப் பாவலர். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் தலைமையில் கிளம்பிய திருவருட்பா எதிர்ப்பு இயக்கத்தின்முன் ‘நாவலருக்கு மறுப்புத்தர இதோ பாவலர் நானிருக்கிறேன்’ – என்று கிளம்பியவர் செய்குத்தம்பிக் பாவலர்.
இத்தனை சிறப்புக்களும் ஒருங்கே பெற்றிருந்த பாவலரின் கரங்களால் தமது நண்பனான கிருஷ்ணனுக்கு ஒரு தங்கப் பதக்கத்தைப் பரிசளிக்க விரும்பியிருந்தார்கள் கிருஷ்ணனின் நண்பர்களான ஒழுகினசேரி இளைஞர்கள். அன்று நடந்தது கோவலன் நாடகம். பாண்டியன் நெடுஞ்செழியன் வேடத்தில் நடித்தார் கிருஷ்ணன். நண்பர்களின் வேண்டுகோளின்படி பாவலர் தம் கரங்களால் கிருஷ்ணனுக்குத் தங்கப் பதக்கத்தை அளித்தார். அப்போது அவர் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்:
“நம்முடைய நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த இந்த இளம் கிருஷ்ணன் எதிர்காலத்தில் மிகப் பெரும் மேதையாக வரப்போகிறான். இன்று இவனுடைய கலை ஈடுபாட்டால் நமது நாஞ்சில் நாடு பெருமைப் படுவதுபோல வருங்காலத்தில் தமிழ்நாடே இந்தக் கிருஷ்ணனின் புகழால் பெருமைகொள்ளப்போகிறது!”
இப்படிச் சொன்ன கோட்டாறுப் பெரும்புலவர் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலருக்குச் சோதிடம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு அறிந்து எவரும் கூறும் சோதிடத்தில் உண்மையும்  இருக்க வாய்ப்பில்லை. ஆனால், பாவலர் தம் நுண்ணிய தொலைநோக்கு உள்ளுணர்வால் இவ்வாறு கூறியது பின்னாளில் மெய்யானதென்னவோ உண்மை. அந்த உண்மையின் கதைதான் எத்தனை எத்தனை இடர்களையும் துயர்களையு ம் தளராத பெருமுயற்சிகளையும் கொண்டது.
அவற்றையெல்லாம் அறிந்துகொள்ளத்தானே இந்த நம் கலைப் பயணம்?
( கலைப் பயணம் தொடரும்)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...