உனை நீங்கியே உயிர் கரைகிறேனே அத்தியாயம் – 4 – சுதா ரவி

 உனை நீங்கியே உயிர் கரைகிறேனே அத்தியாயம் – 4 – சுதா ரவி
அத்தியாயம் – 4
விடிந்தும் விடியாத வேளையில் பறந்து செல்லும் பறவைகளின் ஒலியும், மெல்லிய இசையாக ஓடிக் கொண்டிருக்கும் நீரின் ஓசையும் படுத்திருந்த உத்ராவை நித்திரையில் இருந்து எழுப்பியது. படுத்திருந்த இடத்தில் இருந்து மெல்ல எழுந்து நிற்க முயன்றாள்.  கட்டி இருந்த சேலை நழுவ அதை சரி செய்ய முடியாமல் கையில் இருந்த சங்கிலி தடுக்க……..மனமோ தன் நிலையை எண்ணி ஆத்திரம் கொண்டது. இயலாமையில் அழுகை ஒரு பக்கம்,ஆத்திரம் ஒரு பக்கம் தாக்க அப்படியே மடிந்து உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.
ஒன்றா ,ரெண்டா நான்கு வருடங்கள் வெளிச்சத்தை கூட காண இயலாமல் அவன் குடுக்கும் உடையை உடுத்தி அவன் கொடுக்கும் சாப்பாட்டை உண்டு ஒரு கூண்டு கிளி போல வாழ்ந்துக் கொண்டிருக்கும் தன் வாழ்க்கையை நினைத்துக் கதறினாள். இங்கு சேலையை தவிர அவன் உடுத்த  வேறு எந்த உடையையும் அனுமதிப்பதில்லை.  ஆரம்ப நாட்களில் அதற்காகப் போராடி அவன் எதற்கும் அசையாமல் போக மனம் நொந்து போனாள்.
இன்னும் எதற்கு இந்த வாழ்க்கை வாழவேண்டும் ? தன் உயிரை மாய்த்துக் கொள்ள கூட முடியாமல் செய்து விட்டானே என்று எண்ணி அவன் மேல் ஆங்காரம் வந்தது. ஊர் உலகத்தைப் பொறுத்தவரை தான் இறந்து போய் விட்டதாக அறிவித்தும் விட்டான். இனி தான் எந்த வழியிலாவது தப்பி போனாலும் தன்னை ஏற்பார்களா? எல்லா வழியையும் அடைத்து விட்டு தன் இச்சைக்கு என்னை பலியாக சொல்கிறானே.எது நடந்தாலும் சரி எத்தனை வருடங்கள் போனாலும் ஒரு போதும் அவனின் ஆசைக்கு நான் இணங்கப்  போவதில்லை. அப்படி அவன் என்னை நெருங்கும் பட்சத்தில் ஒன்று அவனை அழிப்பேன்  இல்லையேல் என்னை அழித்துக் கொள்வேன் என்று எண்ணிக் கொண்டாள்.
“என்னை  அவனிடம் இருந்து விடுவித்துக் கொள்ளவாவது உடலில் தெம்பு வேண்டும் அதற்காக தானே அவன் கொடுக்கும் உணவையும் உடையையும் உபயோகித்துக் கொள்கிறேன். அந்த உடையை உடுத்தும் போதே கம்பளி பூச்சியாக என் மேல் ஊறுகிறதே இன்னும் எத்தனை நாளைக்கு என்னை இந்த கொடுமையை அனுபவிக்க செய்ய போகிறாய் ஈஸ்வரா?” என்று பலவாறு நினைத்து ஒன்றுக்கும் வழியில்லை என்று தெரிந்து , மீண்டும் எழுந்து வெளியில் காவல் இருக்கும் பெண்ணை அழைத்தாள்.
அவள் வந்ததும் அவளின் உதவியுடன் காலை கடன்களை முடித்து குளித்து உடை மாற்றி வந்து அமர்ந்தாள். தன் நிலைமையை நினைத்து மேலும் பச்சாதாபம் வந்தது. தான் உடைமாற்றும் அறையில் தன் தங்கையை கூட அனுமதிக்காதவள், இன்று யாரோ ஒருவளின் உதவியுடன் தன் அன்றாட கடமைகளை கூட செய்ய வேண்டி இருக்கிறதே என்று நினைத்து கண்கள் தன்னை அறியாமல் கலங்கியது.
காவல் இருந்த பெண்ணோ ஒரு ரோபோ போல உத்ரா உட்கார்ந்ததும் நேரே சென்று ஒரு தட்டில் அவளுக்கான உணவை போட்டு ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து வைத்து விட்டு சென்று விட்டாள். தட்டில் இருந்த உணவை பார்த்ததும்………..தன் வீட்டில் அம்மா அப்பா தங்கையுடன் எப்படி ஒன்றாக பேசி சிரித்து ஒவ்வொரு வேளையும் உணவை ரசித்து அம்மாவை வாழ்த்திக் கொண்டே சாப்பிடுவோம் ஆனால் இன்று? தலையை சுவற்றில் சாய்த்து அப்படியே பழைய நினைவுகளில் மூழ்கினாள்.
பௌர்ணமி இரவு அன்று உத்ராவின் வீட்டில் எப்பொழும் நிலாச்சோறு சாப்பிடுவது வழக்கம். விதவிதமான உணவு வகைகளை சமைத்து எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று அமர்ந்து சாப்பிடுவார்கள். மாடியில் பாய் விரித்து அந்த வெள்ளி நிலவின் அழகை ரசித்தபடி சுற்றிலும்உள்ள தென்னைமரங்கள் அசைந்து ஆட மெல்லியச் சாரலாய் வீசும் தென்றலை
அனுபவித்தபடி சாப்பிடும் போது அந்த நிமிடம்  மனம் அதுவரை கண்டிராத அமைதியை அடையும்.
அன்று வந்த அந்த பௌர்ணமி மறக்க முடியாத ஒன்று…முதன் முதலாக தன்னவனைப் பார்த்த நாள்….எப்பொழுதும் போல அன்று எல்லோரும் ஒன்றாக அமர்ந்து அன்றைய நிகழுவுகளை பேசி சிரித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் சமயம்….அப்பா மித்ராவை பாட சொல்ல….அவளோ உத்ரா ஆடினால் தான் பாடுவேன் என்று சொல்லவும் அதற்கு அம்மாவோ முறைக்க, பின் ஒரு வழியாக அம்மாவை ஒத்துக் கொள்ள வைத்து விட்டு பாட ஆரம்பித்தாள் மித்ரா.
அப்பாவின் விருப்பதிற்கேற்ப மித்ரா பாட உத்ராவும் மகிழ்ச்சியுடன் ஆடத் தொடங்கினாள்.
            மன்னவன் வந்தானடி தோழி மன்னவன் வந்தானடி தோழி
                மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே –
         அமர்ந்த மன்னவன் வந்தானடி
                 தோழி மன்னவன் வந்தானடி தோழி
அவள் பாடப் பாட தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தாள். ஆடும் போதே தன்னை யாரோ உற்று நோக்குவது போல் தோன்ற மெல்ல தன் பார்வையை சுழற்றினாள். பக்கத்து வீட்டு மாடியில் ஓர் உருவம் தெரிந்தைப் பார்த்து அதிர்ந்து சற்று தடுமாறி மீண்டும் தொடர்ந்தாள்.தான் அங்கு நின்றிருந்தவனைப் பார்க்கவில்லை என்றாலும் அவன் பார்வை அலைகள் அவளை வருடிச் சென்றதை உணர்ந்து கொண்டாள். கண்களோ அவனை பார்த்து விடும் ஆசையில் அலை பாய்ந்தது. பௌர்ணமி இரவில் நிலவின் ஒளியில் தெரிந்த அவன் முக வடிவை கண்டு மனம் தன் கட்டுபாட்டை இழக்கத் தொடங்கியது. அந்த பால் நிலவின் வெளிச்சத்தில் தெரிந்த அவன் உடலமைப்பு ஒரு போர் வீரனுக்குரிய தோற்றத்தை கொண்டிருந்தது. முகமோ வசீகரிக்கும் அழகுடன் உதட்டோரம் புன்சிரிப்புடன் காண்பவர்களை மயக்கும் வகையில் இருந்தது. ஆடிக் கொண்டே அவள் அவனை ஆராய்ந்து கொண்டிருக்க அவனோ  தன்னை மறந்து பிரம்மனின் அவையில் ஆடும் ரம்பையோ, ஊர்வசியோ மண்ணில் இறங்கி ஆடும் விந்தையை கண்டு களித்துக் கொண்டிருந்ததான்.
பாடலின் முடிவில் அருமை என்று கை அசைத்து உத்ராவிடம் தெரிவிக்க….ஆடிக் கொண்டிருந்தவள் சட்டென்று கீழே அமர்ந்து விட்டாள். நெஞ்சமோ படபடவென்று அடித்துக் கொள்ள, மனமோ சந்தித்த கண்களின் வீரியத்தில்  தன்னையே மறந்து  இருந்தாள்.
“ரொம்ப அழகா ரெண்டு பேரும் பாடவும் ஆடவும் செஞ்சீங்கடா”என்றார் மணி.
“ஆமாம் அம்மு, மித்து ரொம்ப நல்லா இருந்துது…சரி-சரி அம்மு நீ தட்டை எடுத்து வை, மித்து நீ தண்ணியை எடுத்து டம்ப்ளரில் ஊற்றி வை…நேரமாச்சு சாப்பிட்டிட்டு கீழே போவோம்”.
விதவிதமான கலவை சாதமும், உருளைகிழங்கை நல்ல பொன் நிறத்தில் வறுத்தெடுத்து , கூடவே கொஞ்சம் தயிர் பச்சடியும் இன்னும் இரு காய்களும் செய்திருந்தார் ராஜி. அவை அனைத்துமே உத்ராவிற்கு மிகவும் பிடித்தவை. ஆனால் அவர்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு பேசியபடி உணவருந்திக் கொண்டிருக்க அவள் மனமோ அவனை சுற்றியே வந்தது. அவன் போய் இருப்பானா இல்லை நின்று கொண்டிருப்பானா என்று கேள்வி எழுந்தது. கையில் இருந்த உணவை உண்ணாமல் ஒரு வித தவிப்புடனே அமர்ந்திருந்தாள். அதை பார்த்த ராஜி “அம்மு என்ன பண்ணிட்டு இருக்கே…சாப்பிடலையா?” என்றார்.
அவரின் குரலில் திடுக்கிட்டு “ம்ம்ம்..சாப்பிடுறேன் மா” என்றாள்.
 பின்னர் உணவருந்தி  முடித்து விட்டு கீழே வந்து தங்கள் அறையில் தஞ்சம் புகுந்த பின்னரும் அந்த கண்கள் அவளை சுற்றி வருவதாகவே தோன்றியது. எப்பொழுதும் போல் மித்ரா தன் படுக்கையில் படுத்தவுடன் உறங்கி விட , உத்ராவுக்கு உறக்கம் வர மறுத்தது. மெல்ல மித்ராவின் கையை சுரண்ட அவளோ உறக்கத்தினூடே “இன்னைக்கு தான் ஆடிட்டியே அப்புறம் ஏன் தூங்காம என்னை தொல்லை பண்ணுற அக்கா”.
மீண்டும் அவள் கைகளை சுரண்டி “மித்து இன்னைக்கு ஆடும் போது பக்கத்து வீட்டு மாடியில ஒரு ஆளு நின்னு பார்த்துகிட்டு இருந்தான்”.
அதுவரை உறக்கத்தில் இருந்தவள் அவசரமாக போர்வையை முகத்தில் இருந்து விலக்கி “ஒரு வேலை உன் கனவுல வரும் ராஜாவோ, எப்பவும் கனவுல வந்து ஆடுவாளே இன்னைக்கு ஆட மாட்டான்னு நினைச்சு வந்து இருப்பான்”என்று சொல்லி மீண்டும் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.
தான் எவ்வளவு பயந்து போய் இருக்கிறோம் இவள் என்ன தூங்குகிறாளே என்று அவளை பிடித்து வேகமாக உலுக்கி “அவன் நான் ஆடினதுக்கு நல்லா இருக்குன்னு கையை காண்பிச்சான் மித்து”.
“ஷ்…என்னக்கா இது எவனாவது திருட வந்திருப்பான்..அவன் ஆளுக்கு சைகை காண்பிச்சு இருப்பான்”.
அவளின் பதிலில் கடுப்பாகி ஓங்கி அவள் முதுகில் ஒரு அடியை கொடுத்து “திருட வரவன் அடுத்த வீட்டு மாடியில ஆடுற பொண்ணை சைட் அடிச்சிட்டு இருப்பானா?ஆனா அவன் கண்ணு ஹப்பா”.
இனி, தூங்க விட மாட்டாள் என்ற எரிச்சலில் தன் முதுகில் விழுந்த அடியிலும் எழுந்து உட்கார்ந்து “இப்போ என்ன தான்கா உன் பிரச்சனை? சரி அவன் எப்படி இருந்தான்னு சொல்லு?என்ன கலர்? ஆள் அழகா இருந்தான்னா?”
அவளின் கேள்விக்கு உதட்டை மடித்து “நல்ல உயரமா இருந்தான்.அவன் கண்ணு  ரொம்ப தீர்க்கமா இருந்துது அப்படியே ஆளை விழுங்குற மாதிரி.அந்த முகம் ஏதோ ரொம்ப பழகிய முகம் மாதிரி இருந்துது மித்து. அவன் யாரா இருக்கும்?”
உத்ராவின் கன்னங்களை தன் கைகளில் தாங்கி “அக்கா உனக்கே இது நியாயமா சொல்லு….படிக்கிற புள்ளைய இப்படி தூங்க விடாம பண்றீயே”.
மித்ரா அப்படி கேட்டதும் அவளை படுக்க சொல்லிவிட்டு தானும் அவள் அருகில் படுத்தாலும், அவளின் எண்ணங்கள் அவனையே சுற்றிக் கொண்டிருந்தது “ஏன் மித்து அவன் யாரா இருக்கும்?”
உத்ராவின் புறம் திரும்பி படுத்து “ஆனாலும் நம்ம அப்பா ரொம்ப புத்திசாலிக்கா, மாப்பிளையை பார்க்காமலே அவரை வரவேற்க பாட சொன்னார் பாரு..மன்னவன் வந்தானடின்னு “.
அவளின் பதிலில் எரிச்சலடைந்து “ஏண்டி ஒரு திருடன் எனக்கு மாப்பிள்ளையா? உன்னை” என்று அவளை அடித்தாள். இவர்களின் பேச்சு குரல் காதில் விழுந்த ராஜியோ சத்தம் போட, இருவரும் போர்வைக்குள் நுழைந்து கொண்டு ரகசியமாக சிரித்துக் கொண்டனர்.
மித்ரா கிசுகிசுப்பான குரலில் “அக்கா பேசாம அவனோட டூயட் பாடிகிட்டே  தூங்கு” என்று விட்டு மெல்லிய குரலில் பாடவும் செய்தாள்.
அன்றைய நினைவுகளில் மூழ்கி இருந்தவளின் உதடுகளில் புன்னகை தானாக வந்து குடியேறிக் கொண்டவளின் கழுத்தருகே சூடான மூச்சுக் காற்று படவும், அதுவரை அழகிய நினைவுகளில்  இருந்தவள் மெல்ல கண் விழித்து பார்த்தாள். தன் முகத்தருகே தெரிந்த முகத்தை கண்டு விதிர் விதிர்த்து போய் உடல் நடுங்க நகர்ந்தாள்.
“ஈஸி பேபிமா ஈஸி.இங்கே என்னை தவிர யார் வர முடியும்” என்று சொல்லி அவள் கைகளை பிடித்து சங்கிலிபட்டு காயப்படிருந்த இடங்களில் மெல்ல மருந்தை தடவினான் ஆர்ஜே.
அவனை கண்ட அதிர்ச்சியும் அவன் தன் கையை பிடித்திருந்ததை விரும்பாமல் உருவிக் கொள்ள முயல, அவனோ இரும்பு பிடியாக பிடித்து மருந்திட்டுக் கொண்டிருந்தான்.
தன் காரியத்தில் கண்ணாக இருந்தவன் “ரொம்ப அழகா சிரிச்சே பேபிமா.எனக்கு அதை பார்த்து மனசு நிம்மதியா போச்சு.ஆமாம் அப்படி என்ன நினைச்சு சிரிச்சே?”
அவன் கேள்விக்குப் பதில் சொல்லப் பிடிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் பதில் சொல்லுவாள் என்று பார்த்திருந்தவன், அவளின் முகத்திருப்பலில் எரிச்சலடைந்து.முகம் இறுக,அவள் கன்னங்களை அழுத்திப்  பற்றி “இங்கே பாரு நான் கேள்வி கேட்டா பதில் சொல்லணும்.இப்படி முகத்தை திருப்பினே மொத்தமா தலையை அந்த பக்கம் திருப்பிடுவேன் ஜாக்கிரதை…ம்ம்ம்…சொல்லு”.
அவனது பிடியில் முகம் கன்றிச் சிவக்க, அவன் சொன்ன வார்த்தைகளில் உள்ளுக்குள் குளிரெடுக்க மெல்லிய குரலில் “அம்மா, அப்பா பத்தி நினைச்சிட்டு இருந்தேன்” என்றாள்.
குனிந்து மருந்து போட்டுக் கொண்டிருந்தவன் தலையை நிமிர்த்தி “அப்புறம் வேற யாரை பத்தி நினைச்சு சிரிச்சே”
கண்களில் மிரட்சியுடன் “மித்துவை நினைச்சேன்”
அதுவரை அமைதியாக தன் காரியத்தில் கண்ணாக இருந்தவன் மெல்ல நிமிர்ந்து பார்த்த போது அவன் கண்கள் அனலாக தகித்துக் கொண்டிருந்தது “அப்போ என்னை நினைக்கல நீ”.
தலையை இடம் வலமாக உருட்டி இல்லை என்றாள். அதை பார்த்தவுடன் “ஏண்டி ஏன் என்னை நினைக்கல.என்னை பார்த்தா பைத்தியமா தெரியுதா? நாலு வருஷமா உன்னை மட்டுமே நினைச்சிட்டு இருக்கேனே…ஆனா, நீ இல்லேன்னு தெரிஞ்ச பிறகு உன்னை மறந்திட்டு போனவங்களை பத்தி நினைச்சிட்டு இருக்கியே” என்று ஆக்ரோஷமாக கத்தினான்.
காலையில் இருந்து தன் மனதிற்குள் எழுந்த வேதனையின் அழுத்தம் காரணமாக வெடித்தாள் “எதுக்கு உன்னை நினைக்கணும்? நீ யார் எனக்கு? அவங்க எல்லாம் என் சொந்தங்கள்…உன்னை பிடிக்காத ஒருத்தி கொண்டு வந்து அடைச்சு வச்சிட்டு கஷ்டப்படுத்துறியே…நீ  மனுஷனா?”
அவளை பிடித்திருந்த கையை உதறி தள்ளிவிட்டு மனித நடமாட்டமற்ற அந்த வனாந்திரமே அதிர ஒரு சிரிப்பை உதிர்த்தான் “ஆமாம்டி நான் மனுஷனே இல்ல தான்.இந்த நாலு வருஷமா நீ என் கையில இருந்தாலும் உன்னோட மூச்சு காத்தை மட்டுமே தொட்டுகிட்டு இருக்கேனே.நான் மனுஷனே இல்ல தான்.நீ என் கண் முன்னால இருந்தாலே போதும்ன்னு உன்னை கஷ்டபடுத்தாம இருக்கேனே ,நான் மனுஷன் இல்ல தான்”.
அவன் பேச்சில் மனதிற்குள் பயந்தாலும் மனதின் நாலு வருட வேதனை அதை மீறி பேச செய்தது “நீ என்னை கஷ்டப்படுத்தாம தான் இங்கே வச்சு இருக்கியா? இதோ ஒரு இருட்டு அறைக்குள்ள மனுஷ நடமாட்டம் இல்லாத இடத்தில,அவ விருப்பம் இல்லாம ஒரு பொண்ணை கை கால் எல்லாம் சங்கிலி போட்டு கட்டி வச்சு இருக்கியே உனக்கும் மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்? நீ எத்தனை ஜென்மம் காத்திருந்தாலும் என் மனசு உனக்காக இறங்காது…அப்படி மீறி என்னை நெருங்கனும்ன்னு நினைச்சா என்னை நானே அழிச்சுக்குவேன்”.
 அவள் தன்னை மறந்து அவனிடம் எதிர்த்து பேசினாலும் அவள் கண்களில் ஒரு மிரட்சியை காண முடிந்தது.அங்கிருந்த ஜன்னலின் மேல் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டவன் “இதை ஏன் மூடி வச்சு இருக்கேன் தெரியுமா? உன் மூச்சு காத்து  கூட என்னை விட்டு போக கூடாது என்று தான். நான் மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரியனும், உன் நினைவுகளில் நான் மட்டுமே தான் இருக்கணும். நீ என்னோட உத்ரா. உன்னை தொடாமலே உன்னை முழுசா உணர்ந்து இருக்கேண்டி”.
அவன் பேச்சில் ஏற்பட்ட அருவெறுப்பில் தன் கைகளை காதுகளில் வைத்து மூடிக் கொண்டு “தயவு செஞ்சு இப்படி பேசாதே.உன்னை கையெடுத்து கும்பிடுறேன் என்னை எங்க அப்பா அம்மா கிட்ட விட்டுடேன்” என்று  அழ ஆரம்பித்தாள்.
அவள் அழுததும் அவளின் முகத்தை பற்றியவன் அவளின் மருண்ட பார்வையில் அவன் நெஞ்சமே வலிக்க “அழாத பேபிமா.நீ அழுதா என்னால தாங்க முடியாது.நான் ரொம்ப நல்லவன் தாண்டி,வலிக்குதுடி தயவு செஞ்சு என்னை விட்டு போறேன்னு சொல்லாத”.
எப்படியாவது தன்னை அவனுக்கு புரிய வைத்து விடும் நோக்கில் கண்களில் கண்ணீருடன்.ஆரம்பித்தவள் “காதலை இப்படி கட்டாயப்படுத்தி வரவழைக்க முடியாது. ஒரு பொண்ணோட மனசு என்ன கீ கொடுத்த பொம்மையா? நீ உன்னை விரும்புன்னா விரும்புறதுக்கும்,வெறுக்கிறதுக்கும்.இப்படி கெஞ்சினா உன் மேல பரிதாபம் தான் வரும், கோவப்பட்டா வெறுப்பு வரும் ஆனா, காதல் தன்னால வரணும்..என்னை  எங்க அம்மா அப்பா கிட்ட விட்டுடு”என்று சொல்லி தன் மனதில் இருந்த ஆத்திரத்தை தன்னை சுற்றி இருந்த பொருட்களை எல்லாம் கீழே தள்ளி உடைத்து தன் இயலாமையை அவற்றின் மீது  காட்டிவிட்டு கீழே அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
அதுவரை அமைதியாக பேசிக் கொண்டிருந்தவன்.நான்கு வருடமாக அந்த சிறு பெண்ணின் வைராக்கியம் அவனை அசைத்து பார்க்க அதுவே அவனுக்கு மனதில் அக்னியாய் தகிக்க அவள் கைகளை இறுக பற்றி தூக்கி.கண்களில்  வெறியுடன் “நீ செத்தவுடனே உன் அம்மா , அப்பா செத்துட்டாங்களா, இல்ல உன் தங்கை தான் செத்துட்டாளா? வாழ்ந்து கிட்டு தானே இருக்காங்க.ஆனா, நான் செத்துடுவேன்டி. நீ என்னை விட்டு போன அடுத்த நொடி செத்துருவேண்டி.நான் சாகபோற நிலைமை வந்தா கூட உன்னையும் கொன்னு என்னோட கூட்டிட்டு போவேனே தவிர யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்” என்று சொல்லி அவளை கீழே உதறி தள்ளி விட்டு வெளியில் சென்று விட்டான்.
அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் நெஞ்சத்தை ஈட்டி கொண்டு  தாக்க,அவளிடம் இருந்து விசும்பல் ஒலி மட்டும் வந்து கொண்டிருந்தது.இனி, தனக்கு வாழ்க்கை என்று ஒன்றில்லை என்று முடிவுக்கு வந்து விட்டாள். “இனி, என்னவனின் முகத்தை கனவில் மட்டுமே காண முடியும். ‘என்னை உள்ளங்கையில் பொக்கிஷமாய் தாங்குவேன் என்று சொன்னாயே உன்னால் என் உயிர் காற்றை உணர முடியவில்லையா?’
(தாெடரும்)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...