நீயெனதின்னுயிர் – 5 – ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 5 – ஷெண்பா

5

சனிக்கிழமை கல்லூரியின் விடுமுறை தினமாதலால், வைஷாலி ஹாஸ்டலின் மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். அப்போது, வைப்ரேஷன் மோடிலிருந்த அவளது செல்போன் சப்தமெழுப்ப திரும்பிப் பார்த்தாள். விக்ரமின் மொபைல் நம்பர் தெரியவும்… அதை எடுத்து, “ஹலோ சார்!” என்றாள்.

“ஹாய் வைஷாலி! எப்படியிருக்க? ஸ்டடீஸெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு?”

“நல்லாயிருக்கேன் சார். ஃபைனல் எக்ஸாம்ஸ் வருதில்லையா? அதான், முழுமூச்சாய் படிப்பில் இறங்கியாச்சு. சண்டே மட்டும், அரை நாள் அரட்டைக்குன்னு ஒதுக்கிட்டேன்” என்றவள், சிரிக்க ஆரம்பித்தாள்.

”வெல்! அப்போ, நாளைக்கு அந்த அரை நாளை எனக்காக ஒதுக்கிடுங்க.” 

“இல்ல சார், நாளைக்கு…” என்று பேசும்போதே இடைபுகுந்தான் விக்ரம்.

“நோ நோ! வேற பேச்சுக்கே இடமில்லை. நாளைக்கு மதியம் ஒருமணிக்கு, நாம ரெண்டு பேரும் சேர்ந்து லஞ்ச் சாப்பிடுறோம். சரியா பன்னிரெண்டரை மணிக்கு, நான் வந்து பிக்-அப் பண்ணிக்கிறேன்” என்றான்.

“இல்லை சார் வேணாம். நீங்க இடத்தைச் சொல்லுங்க; நானே வந்திடுவேன்” – இயல்பாகப் பேசினாலும், மனத்திற்குள் ‘எதற்காக இந்த அழைப்பு’ என்று குழம்பினாள்.

“ஆர் யூ ஷ்யூர்?”

“ம், ஷ்யூர்” என்றாள்.

“ஓகே!” என்றவன், ரிசார்ட் ஒன்றின் பெயரைச் சொல்லிவிட்டு, மீண்டும் அவள் வருவதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே போனை அணைத்தான்.

அதன்பின்பு, படிக்கலாம் என்று புத்தகத்தைத் திறந்தவளால் படிக்கவே முடியவில்லை. 

ரிசார்ட்டின் முன்பாக நின்றிருந்த விக்ரமின் காரைக் கண்டதும், ஆட்டோவை நிறுத்தி இறங்கினாள் வைஷாலி. 

“ஹாய்!” என்றபடியே புன்னகையுடன் காரிலிருந்து இறங்கிய விக்ரம், ஜீன்ஸ், டீ-ஷர்ட்டில் படி ஸ்மார்ட்டாக இருந்தான். 

 “ஹலோ சார்! வந்து ரொம்ப நேரமாச்சா?” என்றாள்.

“ரெண்டு பேருமே, சொன்ன நேரத்துக்கு வந்திருக் கோம். போகலாமா?” என்று ரிசார்ட்டின் பக்கமாகக் கைக் காட்டினான்.

இருவரும் உள்ளே சென்று அமர்ந்ததும், மெனு கார்டைப் பார்த்து மளமளவென அவனே ஆர்டர் செய்தான். அவன் சொன்ன உணவு வகைகளைப் பார்த்து வைஷாலி மலைத்துப் போனாள்.

“சார்! நாம ரெண்டு பேர் மட்டும் சாப்பிட, இத்தனை ஐட்டமா!”

“இது என்னோட ட்ரீட். சோ, நீங்க சாப்பிட மட்டும் தான் வாயைத் திறக்கணும்.” 

“ஓகே!” என்றாள் புருவம் உயர்த்தி.

“இன்னைக்கு, எதுக்கு உங்களை கூப்பிட்டிருக்கேன்னு ஒரு சின்னக் குழப்பம் இருக்குமே?”

‘சின்னதா… பெரிய குழப்பமே இருக்கு’ என்று மனத்தில் நினைத்துக் கொண்டதை வெளியில் சொல்லாமல், “காரணமில்லாமல் நீங்க  கூப்பிட மாட்டீங்கன்னு தெரியும் சார்” என மழுப்பினாள்.

“அவ்வளவு நம்பிக்கையா என் மேல?” என்று வியப்பது போல, புருவம் உயர்த்தினான்.

“நீங்க என்னைக் கிண்டல் செய்றீங்க. உங்க மேல நம்பிக்கை இருப்பதால் தான், நீங்க சொன்ன இடத்துக்கு மறுக்காமல் வந்திருக்கேன் சார்” என்றாள்.

“சமாதானம் சமாதானம்! கோச்சிக்காதீங்க மேடம்…” என்றவன், அவளிடம் மேலும் வம்பு பேசினான்.

சிறிது நேரம், ஆர்டர் கொடுத்த உணவு வகைகளும் வந்து சேர்ந்தன. பரிமாற வந்த வெயிட்டரை அனுப்பிவிட்டு, விக்ரமே அவளுக்குப் பரிமாறினான்.

“ஹய்யோ சார்! ப்ளீஸ்… நானே…” – என்று தடுத்தாள் வைஷாலி.

“நீங்க… என்னோட ஸ்பெஷல் கெஸ்ட். அதோடு எனது மரியாதைக்குரிய ஜெனரல் செக்ரட்டரிக்கு, நான் கொடுக்கும் ஒரு சின்னக் கௌரவம்” என்றான்.

அதுவரை உள்ளுக்குள் தயக்கத்துடன் இருந்த வைஷாலி, வியப்பின் உச்சிக்கே சென்றாள். 

“சார்! அது என்னுடைய கடமை. என்னை நம்பி ஜி.எஸ். ஆக்கின எங்க ஸ்டூடண்ட்ஸ்காக, நான் செய்யவேண்டிய நியாயமான வேலை. அதுக்குப் போய், இவ்வளவு பெரிய அங்கீகாரமா? நிச்சயமா எதிர்பார்க்கலை சார்!” என்றாள், நெகிழ்ச்சியுடன்.

“அன்னைக்கு நீங்க ஆஃபீஸுக்கு வந்த போதே இதைச் செய்திருக்கணும். ஆனால், அது பத்தோடு பதினொன்னா தான் இருந்திருக்கும். வைஷாலிக்கு, ஸ்பெஷலாகச் செய்யணும்னு நினைச்சேன். அதனால் தான், விஷயத்தைச் சொல்லாமல், சர்ப்ரைஸா கூப்பிட்டேன்” என்றான் புன்னகையுடன்.

“தேங்க்யூ சார்!” என்றாள்.

சிரித்தவன், “சாப்பிடுங்க…” என்றான். 

இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு இருவரும் எழ, “வைஷாலி! இஃப் யூ டோண்ட் மைண்ட்… நீங்க… ஹாஸ்டலுக்கு ஈவ்னிங் போனால் போதுமில்ல? பின்னால இருக்கிற தோட்டம், ரொம்ப அழகா இருக்கும். அங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாமா?” என்று கேட்டான் விக்ரம்.

அப்போதிருந்த மனநிலையில் வைஷாலிக்கும் மறுக்கத் தோன்றவில்லை. “நோ பிராப்ளம் சார்” என்றபடி தோளைக் குலுக்கினாள்.

இருவரும் ரிசார்ட்டின் பின்புறமிருந்த தோட்டத்திற்குச் சென்றனர். ஆங்காங்கே ஒருவர் மட்டுமே அமரக் கூடிய வகையில் மார்பிள் கல்லாலான சாய்வு இருக்கைகள் இரண்டிரண்டாக இருந்தது. ஒவ்வொரு இருக்கைகளுக்கும் இடையில், நீளமான டேபிள் போன்ற ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது.

அந்த விசாலமான தோட்டத்திற்குள், வெயில் படாத அளவிற்கு மரங்கள் உயர்ந்து, அடர்ந்து வளர்ந்திருந்தன. சற்றுத் தொலைவில், குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சீசா, சறுக்கு மரம் என அனைத்தும் அமைக்கப்பட்டிருந்தது. கண்களைச் சுழற்றி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவளை, விக்ரமின் கண்கள் ஆர்வத்துடன் வருடியது.

“வைஷாலி!” என மென்மையாக அழைத்தான்.

“சார்!” என்றபடி அவனைப் பார்த்தாள்.

“திஸ் இஸ் ஃபார் யூ!” -உள்ளங்கை அளவேயிருந்த கிஃப்ட் பார்சலை இருவருக்கும் நடுவிலிருந்த மேடை மீது வைத்து, அவள் புறமாக நகர்த்தினான்.

“என்ன சார்… இதெல்லாம்?” -திணறினாள்.

“என்னோட ஞாபகமா…” என்று அவன் சொன்னதும் அவளது விழிகள் உயர்ந்து, முகத்தில் நிலைத்தது. சிரிப்புடன் தன்னையே பார்த்தவனிடமிருந்து, தவிப்புடன் பார்வையை விலக்கினாள்.

“என்ன வைஷாலி? திடீர்னு, முகமெல்லாம் ஒரு மாதிரி ஆகிடுச்சி…?” -அக்கறையுடன் கேட்டான்.

“ஒண்ணுமில்லை சார். நேரமாகுது… கிளம்பலாமா?” என்றாள் தயங்கியபடி.

“இப்போதானே, ஈவ்னிங் போலாம்னு சொன்னீங்க!” 

“இல்ல… வந்து…” என்றவள், என்று தடுமாறினாள்.

அதேநேரம், “ஹாய் விக்ரம்ம்ம்!” என்ற உற்சாகக் கூக்குரலொன்று அவர்களுக்குப் பின்னாலிருந்து வர, திரும்பியவன், “ஹாய் சீமா!” என்று பதிலுக்கு அதே உற்சாகத்துடன் குரல் கொடுத்தான்.

“என்ன திடீர்னு சாரோட காத்து இந்தப் பக்கமா அடிக்குது? சம்திங் ஸ்பெஷல்?” என்று கேட்டபடியே திரும்பியவள், அப்போது தான் வைஷாலியை நன்றாகப் பார்த்தாள். 

குறுகுறுவென தன்னைப் பார்த்த சீமாவை, மலங்க மலங்க விழித்தபடி பார்த்தாள் வைஷாலி.

“வெரிவெரி ஸ்பெஷல் தான் போலயிருக்கே!” என்றவள், அவனுக்கு மட்டுமே தெரியும்படி கண்களைச் சிமிட்டினாள்.

“ஹேய்! உன்னோட கற்பனைக் குதிரையை, அப்படி எங்கேயாவது ஓரமாகக் கட்டி வை!” என்றவன், “மீட் மிஸ்.வைஷாலி! என்னோட ஃப்ரெண்ட்” என்றவன், “வைஷாலி! இவள் சீமா, என் அத்தைப் பொண்ணு!” என்றான்.

“ஹாய் வைஷாலி! பரவாயில்லை, நீங்க ரொம்பத் தைரியசாலிதான். இல்லைனா, இந்தப் ஃப்ராடு பையனை நம்பி, இத்தனைத் தூரம் வந்திருப்பீங்களா?” என்றாள் குறும்புடன்.

என்ன சொல்வதென்று தெரியாமல், இருவரையும் பார்த்தாள் வைஷாலி. அதற்குமேல், சீமா – விக்ரமிடம் இழைந்துகொண்டும், ஒருவர் மட்டுமே அமரக்கூடிய அந்த இருக்கையில் நெருக்கியடித்து அமர்ந்திருந்தது, அவளுக்குச் சங்கடமாக இருந்தது.

“அவள் விளையாடுறா; நீங்க தப்பா எடுத்துக்காதீங்க வைஷாலி” என்றவன்,

“அம்மா தாயே! நீ கிளம்பு; நாங்களும் கிளம்பணும்” என்று சீமாவிடம் சொல்லிக் கொண்டே எழுந்தான்.

“அதெப்படி…? நீ சொன்னதும், உன்னை விட்டுடுவேனா? வைஷாலிகிட்டச் சொல்ல வேண்டியது நிறை…ய இருக்கு” என்றவள், “இவன் காலேஜ் படிக்கும் போது என்னவெல்லாம் செய்தான்னு தெரியுமா வைஷாலி?” என்று ஆரம்பித்தாள்.

உடனே அவளது வாயைப் பொத்தி, தரதரவென வேறு பக்கமாக இழுத்துச் சென்றான். “உனக்குப் புண்ணியமா போகட்டும்; கொஞ்சம் வாயை அடக்கு. நீ ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்ல, ஷாலு பயப்படப் போறா!” என்றவனுமே, சற்றுப் படபடப்பாக இருந்தான்.

சீமா அவனையே இமைக்காமல் பார்த்தாள். “விக்ரம்! நீ வைஷாலியைக் காதலிக்கிறியா?” என்று மண்டையில் அடித்ததைப் போல, பட்டென்று கேட்டாள்.

அவளது கேள்வியை சற்றும் எதிர்பாராதவன், “என்ன?” என்று சட்டென முகம் சுளித்தான். “அவள், நம்ம காலேஜில் நடந்த சில விஷயங்களை என் பார்வைக்குக் கொண்டு வந்தா. அதுக்கு தேங்க் பண்ணத்தான் இங்கே கூட்டி வந்தேன். மத்தபடி, நீ நினைப்பது போல எதுவுமே இல்லை” என்றான் அழுத்தமாக.

“நான் எல்லாத்தையும் கவனிச்சிட்டுத் தான் சொல்றேன் விக்ரம். சரி, இதுக்குப் பதில் சொல்லு. அந்த கிஃப்ட்கூட, நீ தேங்க் பண்ணக் கொடுத்தது தானா?” 

தோளைக் குலுக்கியவன், “ஆமாம்” என்றதும் விழுந்து விழுந்துச் சிரித்தாள். 

“எதுக்கு இப்படிச் சிரிக்கிற?” – எரிச்சலுடன் கேட்டான்.

“வேண்டாம் நான் எதுவும் சொல்லலை. நீயா புரிஞ்சிக்குற நேரம் வரும்; இப்போ கிளம்பு.  ‘உன்னோட’ வைஷாலி, தனியாக இருக்காங்க. நாம ஏதோ ரகசியம் பேசறோம்னு தப்பா நினைச்சிக்கப் போறாங்க” என்றாள்.

“அங்கேயும் வந்து, இப்படி உளறாதே!” என்றான் எரிச்சலுடன்.

கிளம்புகிறேன் என்றவர்களை, தன்னுடன் தேனீர் அருந்தி விட்டுத்தான் செல்ல வேண்டுமென்று வற்புறுத்தி அமர வைத்தாள். பெண்கள் இருவரும் பொதுவாகத் தங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, விக்ரம் சற்றுத் தள்ளிச் சென்று போனில் பேசிக் கொண்டிருந்தான்.

அந்த ரிசார்ட் சீமாவின் தந்தையுடையது என்றும், அவள் மாதம் ஒருமுறை அங்கே வருவது வாடிக்கை என்றும் சொன்னாள். அவள் இங்கே வரும் இரண்டு நாட்களும், விக்ரமின் ஃப்ளாட்டில்தான் தங்கிக்கொள்வாள் என்றும் சொன்னாள்.

அனைத்தையும் தலையாட்டிக் கொண்டே கேட்ட வைஷாலியிடம், அவளைப் பற்றியும் விசாரித்து அறிந்து கொண்டாள் சீமா. 

கிளம்பும் நேரத்தில் வைஷாலியின் கைகளைப் பற்றிய சீமா, “உங்களை சந்திச்சதுல ரொம்பச் சந்தோஷம். இது என்னோட கார்ட். நீங்க எப்போ ஃப்ரீயோ, அப்போ என்னோடு பேசுங்க. நான் உங்ககிட்ட நிறைய விஷயங்கள் பேச வேண்டி இருக்கு!” -குறுஞ்சிரிப்புடன் விக்ரமைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.

“அடங்கமாட்ட நீ? வீட்டுக்கு வருவ இல்லை… அப்ப இருக்கு உனக்கு!” என்றவன் வைஷாலியை அழைத்துக் கொண்டு கிளம்பினான். 

காரின் அருகில் செல்லும் போது, வைஷாலியின் மொபைல் ஒலிக்க எடுத்தவள், “சொல்லு ஜோ!” என்றாள் மெதுவாக.

“எங்கேடி இருக்க? உனக்காகத் எவ்வளவு நேரம் காத்துட்டு இருக்கறது? மூணு மணியிலிருந்து உனக்குப் ஃபோன் பண்றேன்; கால் ரீச் ஆகமாட்டேங்குது!” என்ற ஜோதியின் குரல் கோபத்துடன் ஒலித்தது.

“திடீர்னு வெளியே வரவேண்டியதா போச்சு ஜோ…!” என்றவளுக்கு வார்த்தைகள் தடுமாறியது.

“இங்கே வர்றதை விட, அப்படியென்னடி முக்கியமான விஷயம்?”

“அது… நான்… விக்ரம் சாரோடு லஞ்சுக்கு வெளியே வந்திருக்கேன்” என்று சொன்னதுதான் தாமதம், பட்டெனப் போனை வைத்தாள் ஜோதி.

வைஷாலிக்குத் தவிப்பாக இருந்தது. ஜோதியின் வீட்டிற்குப் ஃபோன் செய்தும், அவள் எடுக்கவேயில்லை. மீண்டும் முயற்சிக்க, ‘லைன் பிசி’ என்றே வரவும், ரிசீவரைத் தூக்கிக் கீழே வைத்து விட்டாள் என்று புரிந்தது.

“ஏதாவது பிராப்ளமா வைஷாலி?” – அவளது முகமாற்றத்தை கவனித்துவிட்டுக் கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்…” என்றாள் மழுப்பலாக.

ஒரு கணம் அவளது முகத்தைக் கூர்ந்து கவனித்தவன், “அப்போ, கிளம்பலாமா?” என்று கேட்க, “ம்!” என்றவள், மனத்தில் சஞ்சலத்துடனேயே காரில் ஏறினாள்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...