சவப்பெட்டிக்குள் வைத்து மதுபானங்கள் கடத்தல்:
சவப்பெட்டிக்குள் வைத்து மதுபானங்கள் கடத்தல்: மோப்பம் பிடித்த போலீஸ்
பாட்னா: பிகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதற்கு பல்வேறு வழிமுறைகளை கடத்தல்காரர்கள் பின்பற்றி வருகிறார்கள்.
மதுபானக் கடத்தலுக்காக எண்ணெய் டேங்கர்கள், பால் கண்டெய்னர்கள், பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட சேம்பர்கள் மட்டுமல்ல, ஆம்புலன்ஸைக் கூட பயன்படுத்தி விட்டார்கள். அனைத்தையும் காவல்துறை கண்டுபிடித்துக் கொண்டே போனதால், அடுத்த திட்டம் சவப்பெட்டி.
லாரிகளில் காலி சவப்பெட்டிகளை எடுத்துச் செல்வதாகக் கூறி, அதற்குள் மதுபானங்களைக் கடத்தி வந்தது ஒரு கும்பல்.
பஞ்சாப் பதிவெண்ணுடன் வந்த ஒரு லாரியை செக் போஸ்டில் மடக்கிய காவல்துறையினர், அதில் இருந்தது வெறும் சவப்பெட்டிகள் என்று நினைத்திருந்தால் காரியம் நடந்திருக்காது.
மேலும் படிக்க.. சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
லாரி ஓட்டுரிடம் காவல்துறையினர் பேச்சுகொடுத்த போது அவரே ஒரு க்ளு கொடுத்தார். அது அவரது பேச்சில் இடம்பெற தேவையில்லாத ஒன்று.
என்னவென்றால், தான் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இருந்து வருவதாகவும், இன்னும் சில தகவல்களையும் சொன்ன ஓட்டுநர், அது காலிப்பெட்டிதான், அதற்குள் ஒன்றும் இல்லை என்றும் சொன்னார்.
அது ஒன்று போதுமே, சவப்பெட்டிகளை இறக்கிய காவல்துறை, அதனைத் திறந்துபார்த்த போது, அதில் மதுபானப் பாட்டில்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ரூ.20 லட்சம் மதிப்புள்ள 4,337 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள் அந்த 6 சவப்பெட்டிக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இவை சாப்ரா மற்றும் பாட்னா பகுதிகளில் மதுபானப் பிரியர்களுக்காக கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரிய வந்தது. லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மதுபானங்களைக் கடத்திச் செல்ல கடத்தல்காரர்களும் பல்வேறு வகையான முறைகளைக் கையாண்டு வருகிறார்கள். ஆனால் அவற்றை காவல்துறையினர் கண்டுபிடித்து விடுகின்றனர்.
பிகாரில் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு சட்டத்தை மீறியதாக 1.67 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 52 லட்சம் லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தர்பூசணி போன்ற மிகப்பெரிய காய்கறிகளிலும், சைக்கிள் டியூப்களிலும் கூட மதுபானங்களைக் கடத்திச் சென்றுள்ளனர். அவ்வளவு ஏன், பள்ளி மாணவர்களின் பள்ளிப் பையில் கூட மதுபானப் பாட்டில்களை மறைத்து வைத்து கடத்தியுள்ள சம்பவங்களும் நடைபெற்றிருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.