ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி, இந்திய சினிமாவில் இவரைத் தவிர்த்துவிட்டு நகர்ந்து செல்ல முடியாதபடிக்கு தன் இருப்பை பதிவு செய்துவிட்டுப் போன நடிகை. இன்று அவரது நினைவு நாள்.
இது அதற்கான சிறப்பு தொகுப்புதான். ஆனால், வெறும் சம்பிரதாயத்துக்காக அல்லாமல், நிஜமாகவே நாம் மிஸ் செய்யும் அந்த அழகு மயிலைப் பற்றிய இனிய நினைவூட்டல் மட்டுமே.
2018 இல் அந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம்… உடனே அந்தக் கடைசி 15 நிமிடங்களில் பாத்ரூமில் நடந்தது என்ன?- என்பதைத் தமது நேயர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தப் போவதாக அறிவிச்சுது ஏ.பி.பி (ABP)அப்படீங்கற செய்தித் தொலைக்காட்சி. இதன் போட்டியாளரான ஆஜ்தக் தொலைக்காட்சிக்கு இப்போது வேறு வழியில்லை. தனது செய்தி அறிவிப்பாளரை நேரடியாக டாய்லெட் ஒன்றுக்குள் நிறுத்தி வைத்து அங்கிருந்தே நேரலை செய்யத் துவங்கியது.இவர்களுக்கு எல்லாம் போட்டியாக இருந்த அர்னாப் கோஸ்வாமி நடிகையின் மரணத்திற்கும் அவளது கணவருக்கும் என்ன தொடர்பு என்பதை அலசி ஆராயத் துவங்கி விட்டார். கல்லூரி பேராசிரியரைப் போல் ஒரு வெள்ளைப் பலகையில் ஒவ்வொரு காரணங்களாக எழுதி, அதை கலர் கலரான மார்க்கர்களால் வட்டமிட்டு…. சரி, ஏன் நீட்டி முழக்க வேண்டும், ஸ்ரீதேவியின் மரணத்துக்கும் காங்கிரசு தலைவர் சஷிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருப்பதாக தனது கச்சேரியை அர்னாப் கோஸ்வாமி நிறைவு செய்தார்
பொலிட்டிசியன் சுப்ரமணியம் சாமி கூட ஸ்ரீதேவியின் மரணத்தை கொலை என்பதோடு அது தாவுத் இப்ராஹிமின் கைவரிசை என்று அடித்து விட்டார்.
மேலும் டிக் மார்க் வாங்கி பொய்யை மட்டும் பரப்பி வரும் டுபார்க்கூர்கள் பலர் “டயட்டின் விளைவாய் மாரடைப்பு” “முகச் சீரமைப்பு சிகிச்சையால் மாரடைப்பு” போன்ற மொக்கைகளுக்கு ஆங்கில மருத்துவ விஞ்ஞானத்திடம் பதில் தேடிக் கொண்டிருந்தது. ஆங்கில மற்றும் இந்தி செய்தித் தொலைக்காட்சிகளுக்கு ஸ்ரீதேவி விசயத்தில் கடும் போட்டியாக உருவெடுத்துள்ளது நம்முடைய அக்கட தேசம்லு. தெலுங்குச் சேனலான டி.வி9 மசாலா தெலுங்கு உலகிற்கே உரிய கற்பனை வளத்தோடு ஒரு குளியல் தொட்டியில் தண்ணீர் இருப்பது போலவும் அதில் மேற்படி நடிகையின் படம் மிதப்பது போலவும் பக்கத்திலேயே நடிகையின் கணவர் நின்று எட்டிப் பார்ப்பது போலவும் பின்னணியை வடிவமைத்துக் கொண்டது.
இன்னொரு தெலுங்குச் சேனல் தனது புலனாய்வுச் செய்தியாளரை ஒரு குளியலறைக்குள் அனுப்பி குளியல் தொட்டிக்குள் எந்தெந்த வகைகளில் எல்லாம் மூழ்கிச் சாக முடியும் என்பதை செயல் விளக்கமாக செய்து காட்டிக் கொண்டிருந்தது. உச்சகட்டமாக அவரே குளியல் தொட்டிக்குள் மல்லாக்கப் படுத்துக் கொண்டு (கையில் மைக்குடன்) கேமரா முன் பேசிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே பிரேதப் பரிசோதனை அறிக்கை என ஒரு நான்கு வரிகள் கொண்ட கடிதம் ஒன்று ஜனநாயகத்தின் நான்காம் தூண்களின் கைகளுக்குச் சிக்குகிறது. அந்த நான்கு வரிகளில் ஒரு வரியில் “இரத்தத்தில் சாராயத்தின் எச்சங்கள்” இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆஹா என்னவொரு அருமையான வாய்ப்பு. இப்போது நடிகை எந்த பிராண்டு சரக்கை எத்தனை ரவுண்டு அடித்தார் என்கிற திசையை நோக்கி விசாரணைகள் நகர்ந்தன.
ஆங்கில மற்றும் இந்திச் சேனல்களின் ஆபாசங்கள் இவ்வாறிருக்க, தமிழ் ஊடகங்களும் ஓரிரு நாட்களுக்கு ஸ்ரீதேவியின் பழைய திரைப்படக் காட்சிகளை ஒளிபரப்புவதிலும், சினிமா பிரபலங்களின் பேட்டிகளை வாங்கிப் போடுவதிலுமே முனைப்பாக செயல்பட்டன.
இப்படியாக ஒரு நடிகையின் மரணத்தை வைத்து நார்த், ஈஸ்ட், வெஸ்ட்,சவுத் வியாபரிகளின் கதகளி இன்றைக்கும் மாறவில்லை என்பது தனி சோகம்
இப்படி ஒட்டு மொத்த இந்திய ஊடகங்களை அல்லோகலப்படுத்திய மயிலும் குறித்த ஸ்பெஷல் ரிப்போர்ட் இதோ
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவரை மிகப் பரிட்சயமான முகமாக மாற்றியது பாரதிராஜா இயக்கிய `16 வயதினிலே’ படத்தின் மயிலு கதாபாத்திரம். அதில் அவருக்கு என வெளிக்கொண்டுவர முடிந்த நடிப்பு அவரை பலருக்கும் கொண்டுபோய் சேர்த்தது.`16 வயதினிலே’ ஸ்ரீதேவிக்கு இன்னொரு விதமாகக் கூட அறிமுகத்தை ஏற்படுத்துக் கொடுத்திருக்கிறது. இவரால் கண்டிப்பாக வெவ்வேறு கதாபாத்திரங்களை எடுத்து சிறப்பாக கையாளமுடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தது என்று சொல்லலாம். காரணம் டாக்ஸி டிரைவர், வணக்கத்துக்குரிய காதலியே, மனிதரில் இத்தனை நிறங்கள், பைலட் ப்ரேம்நாத் என சில படங்களுக்குப் பிறகு மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில் `சிகப்பு ரோஜாக்கள்’ நடிக்கிறார்.
வழக்கமாக டூயட், ரொமான்ஸ் பண்ணும் நடிகைகளால் அந்த பாத்திரத்தில் நடித்துவிட முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், ஸ்ரீதேவி – பாட்டுக்கு, காதலுக்கு என மட்டும் ஒதுங்கிக் கொள்ளும் நடிகை இல்லை. அதனாலேயே சிகப்பு ரோஜாக்களின் மிரட்டலை அவரால் புரிந்து கொண்டு நடிக்க முடிந்தது.
அதே நேரம் கமர்ஷியல் ஹீரோயின்கள் செய்ததையும் புறக்கணித்துவிட்டுப் பயணிக்கவில்லை அவர். ப்ரியா, தர்மயுத்தம், தாயில்லாமல் நானில்லை, குரு என ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டுதான் இருந்தார். அதே வேளையில் தன்னை கவனித்து ரசிக்கச் செய்யும் வேடங்களிலும் பிரகாசமாய் நடித்துக் கொடுத்தார். உதாரணமாக ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்களைச் சொல்லலாம். எந்த ஹீரோக்களுடன் கமர்ஷியலான நடித்தாரோ, அதே ஹீரோக்களுடன் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் படங்களிலும் நடித்த பேலன்ஸ், ஸ்ரீதேவிக்கான தனி இடம் உருவாக முக்கியமான காரணம்.
நடிப்பில் என்ன இல்லை. முன்பு சொன்னது போல ஜானியும், வறுமையின் நிறம் சிவப்பையும் எடுத்துக் கொள்ளலாம். எத்தனை நுட்பமான உணர்வுகளை எல்லாம் காட்டிவிட்டார் என்கிற ஆச்சர்யம் ஏற்படும். ஜானியில், ஸ்ரீதேவி ரஜினியிடம் காதலை சொல்லும் காட்சி பற்றிச் சிலிர்க்காதவர் யாரும் இருப்பார்களா?
வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் அந்த விருந்து காட்சியில் ஸ்ரீதேவியின் அத்தனை அழகான நடிப்பை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியுமா?
ரஜினியுடன் நடித்த `நான் அடிமை இல்லை’ படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து விலகி முழுக்க இந்தி சினிமாவில் மிகப்பெரிய காலத்தை தன்னுடைய நடிப்பால் கட்டிப் போட்டார். 2008க்குப் பிறகு இந்தியிலும் சின்ன இடைவெளி விட்டவர், கம்பேக் கொடுத்தது இங்க்லிஷ் விங்லிஷ் படத்துக்காக. கண்டிப்பாக அது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய கம்பேக். குறிப்பாக அப்படி ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது.
அவர் மறைவுக்குப் பிறகும் நல்ல சினிமாவைக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் `நேர்கொண்ட பார்வை’யாக பிரதிபலித்துக் கொண்டிருப்பது, சினிமாவின் பால் அவர் கொண்டிருந்த காதலைத் தவிர வேறென்ன? கலை இருக்கும் வரைக்கும் அழியாத நபர்கள் பட்டியலில் ஸ்ரீதேவியின் பெயர் எப்போதோ எழுதப்பட்டுவிட்ட ஒன்று
From The Desk of கட்டிங் கண்ணையா!