ஜெ. ஜெயலலிதா / நினைவஞ்சலிக் குறிப்புகள்

 ஜெ. ஜெயலலிதா / நினைவஞ்சலிக் குறிப்புகள்

ஜெ. ஜெயலலிதா ஆகிய அவரின் நினைவஞ்சலிக் குறிப்புகள்!😢

ஜெயலலிதாவின் ஆரம்ப கால வாழ்க்கை நெருக்கடிமிக்கதாகவும், முன் கூட்டியே கணிக்க இயலாததாகவுமே இருந்து வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி,மலையாளம் மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் அறிந்திருந்த அவர் கூடவே ஒரு சிறந்த நடன மங்கையாகவும், பேரார்வமிக்க வாசிப்பாளராகவும் இருந்து வந்தார். தனது லட்சியம் எதுவாக இருப்பினும், ஒரு நடிகையின் மகளாக பல திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த இவர் திரைப்படத்துறையில் தனது தடத்தை பதிக்க துவங்கினார்.

முன்னதாக பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் உயர் நிலைப் பள்ளியில் கல்வி பயில துவங்கிய அவர், பின்னர் சென்னையில் பிரபலமான சர்ச் பார்க்கில் உள்ள திரு இருதய மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கியதுடன், அதில் உயர் தரத்தையும் அடைந்தார். அக்காலத்தில் ஜெயலலிதாவின் வீட்டில் மிகப்பெரிய நூலகம் ஒன்று இருந்ததாகவும், அங்கிருந்து அவரது நண்பர்கள் புத்தகங்கள் கடன் வாங்கி படித்ததாகவும் ஒரு தகவலுண்டு. பள்ளிப்படிப்பில் ஜெயலலிதா சிறந்து விளங்கியதால், தொடர்ந்து படிக்க அவருக்கு அரசின் கல்வி உதவித்தொகை கிடைத்தது. 10 ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்ற அவர், தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

அவரது வீட்டில் அவருக்கென ஒரு அறை இருந்தது. அந்த அறையில் இருந்த அலமாரியில் பலவகைப்பட்ட புத்தகங்கள் நிறைந்திருந்தன. அந்த பகுதியில் இந்தி தெரிந்தவர் அவர் ஒருவர் மட்டும் தான். எனவே அவர் சக மாணவிகளை சினிமாவிற்கு அழைத்துச் சென்று அதில் வரும் உரையாடல்களை மொழிபெயர்த்து கூறுவார். ஜெயலலிதாவிற்கு படம் வரைதலில் மிகுந்த ஆர்வம் இருந்தது. தான் வரைந்த படங்களை ஓய்வு நேரங்களில் தனது வகுப்பு தோழிகளிடம் காட்டி மகிழ்வார்.

ஸ்ரீமதி என்ற கேர்ள், ஜெயலலிதாவுக்கு 5 ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே நண்பர்கள். ஸ்ரீமதியின் தந்தை ‘ஸ்டில்ஸ்’ சாரி என அழைக்கப்பட்ட ஒரு திரைப்பட புகைப்பட கலைஞராக இருந்தார். அவர் ராதா சில்க் எம்போரியத்திற்காக ஒரு மாதிரி புகைப்படம் ஒன்றை ஜெயலலிதாவை வைத்து எடுத்தார். இந்த நிகழ்வு தான், அவர் விளம்பரம் மற்றும் சினிமாத்துறைகளில் நுழைவதற்கு காரணமாக அமைந்தது. அந்த மாதிரி படத்தையே ஜெயலலிதா, அவருடன் இணைந்து நடித்தவரும், அரசியல் தலைவருமாக விளங்கிய எம்.ஜி ராமச்சந்திரன் உள்ளிட்ட நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் கொடுத்தார்.

ஒரு இளம் மாணவியாக ஜெயலலிதாவின் கனவானது திரைத்துறையை நோக்கிய திசையில் செல்ல விருப்பம் இல்லாமல் இருந்தது. அவர் 10 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, அவர் தொடர்ந்து படித்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு முயல வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்ததாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர். அதன் பின்னர் அவரது அம்மாவின் வற்புறுத்தலை தொடர்ந்து சினிமாவில் நடிக்கவே, தனது சிவில் சர்வீஸ் கனவை கைவிட்டார்.

ஜெயலலிதா திரைத்துறையில் நுழைந்த போது, அவரது கல்வித் தகுதியை அறிந்த அவருக்கு நெருக்கமான பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சட்டம் படிக்க ஜெயலலிதா இணைந்தார். ஆனால் அவரது அம்மா சந்தியா, குடும்ப பொருளாதார நிலையின் நெருக்கடி காரணமாக படிப்பை நிறுத்தி, திரைத்துறையிலேயே தொடர்ந்திருக்குமாறு வலியுறுத்தினார்.

இந்த துறையில் தயக்கமிருந்த போதும் கூட, ஜெயலலிதா இந்த துறையில் இயற்கையிலேயே திறமைமிக்கவராக இருந்தார் என்றே கூற வேண்டும். தனது முதல் பரத நாட்டியக் கல்வியை பெறும் போது அவருக்கு வெறும் 3 வயது தான் ஆகியிருந்தது. அந்த காலத்தில் சிறந்த நடனக் கலைஞரும், நடன இயக்குனருமாக இருந்த கே.ஜெ.சரசத்தின் பயிற்சியின் கீழ், ஜெயலலிதா ஒரு சிறந்த கலைஞராக வேகமாக வளர்ந்தார். தொடர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் அவரது நடன அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிவாஜி கணேசன் உட்பட எண்ணற்ற திரையுலகினர் கலந்து கொண்டனர். அப்போது, சிவாஜி கணேசன் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவிடம் அவரது மகள் புகழ்பெற்ற நடிகையாக எதிர்காலத்தில் வரக்கூடும் என கணித்துக் கூறினார்.

ஜெயலலிதா ஒரு நல்ல எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரியாது. ‘எண்ணங்கள் சில’ எனும் தொடரை ‘துக்ளக்’கில் எழுதியிருக்கிறார். ‘தாய்’ வார இதழில் ‘எனக்குப் பிடித்த ஊர்’, ‘எனக்குப் பிடித்த வாத்தியார்’, ‘எனக்குப் பிடித்த ஓவியர்’, ‘எனக்குப் பிடித்த எழுத்தாளர்’, ‘எனக்குப் பிடித்த நாவல்’, ‘எனக்குப் பிடித்த தத்துவஞானிகள்’ என 45 கட்டுரைகளை ஜெயலலிதா எழுதியிருக்கிறார். அவை ‘மனதைத் தொட்ட மலர்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. மேற்படி நூலில் தனக்குப் பிடித்த ஓவியராக லியனார்டோ டாவின்சியை குறிப்பிட்டிருக்கிறார். தனக்குப் பிடித்த நாவலாக சார்லஸ் டிக்கன்ஸின் ‘டேவிட் காப்பர்பீல்ட்’டை குறிப்பிட்டிருப்பார். பதினாறு பக்கங்களில் நாவலை சுருக்கமாகக் குறிப்பிட்டு விமர்சித்திருப்பார்.

1968இல் பொம்மை இதழுக்காக எம்.ஜி.ஆரிடம் நேர்காணல் எடுத்திருக்கிறார். 63 கேள்விகளை அவரே தேர்ந்தெடுத்து நேர்காணல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதிய பல கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழில் நான்கு முழு நீள நாவல்களும், பல சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

‘துக்ளக்’கில் வட இந்தியாவில் காவல்துறையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருத்தி பற்றிய விரிவான செய்திக் கட்டுரையன்றை தொடராக ஆரம்பத்தில் பெயர் குறிப்பிடாமல் எழுதியிருக்கிறார்.

கல்கியில் தொடராக வெளியான ‘உறவின் கைதிகள்’ நாவல், ஒரு நடிகனுக்கும் கல்லூரி மாணவிக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்டது. கர்ப்பத்தில் கைகோக்கும் காதல் ஜோடிக்கு இறுதியில் தாங்கள், தந்தை-மகள் உறவு எனத் தெரியவருவதாக, அப்போதே துணிச்சல் திருப்பங்களுடன் நாவலைப் படைத்தார். பெண்களை துச்சமென மதிக்கும் நடிகன், கல்லூரி மாணவி ஒருத்தியிடம் காதலில் விழுகிறான். அவளும் அவனைக் காதலிக்கிறாள். கர்ப்பமாகிறாள். பிறகுதான் இருவரும் தந்தை-மகள் என்பது தெரியவர அதிர்ச்சியூட்டும் கிளைமாக்ஸ்! அப்பா-மகள் உறவை கேள்விக்குள்ளாக்குகிற கதையை எழுத முனையவே நிறைய தைரியம் வேண்டும். முதல் அத்தியாயத்தில் நடிகனின் அறிமுகக் காட்சியில் தொடங்கி, இறுதி அத்தியாயத்தில் அவனுடைய மரணம் வரை ஒரே மூச்சில் படித்துவிட முடியும். அவ்வளவு வேகமான எழுத்து நடை.

நடித்துக்கொண்டு இருந்தபோது நிறைய எழுதியிருக்கிறார். இந்த தொடர்கதை புத்தகமாக வரவில்லை. அப்படி வந்தால் அவரது எழுத்துத் திறமையை அது பறைசாற்றும்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...