எம்.ஜி.ஆரின் குரல்
எம்ஜிஆர் – உரிமைக்குரல்!
M.G.R. படங்களின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன், படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகையர் யார் என்பதை தேர்வு செய்யும் பொறுப்பை பெரும்பாலும் அவரிடமே தயாரிப்பாளர்கள் விட்டுவிடுவது வழக்கம். எம்.ஜி.ஆர். குறிப்பிடும் நடிகர்கள் பட்டியலில் முக்கியமாக இடம் பெறுபவர் பண்பட்ட நடிகரான வி.எஸ்.ராகவன்.
எம்.ஜி.ஆரின் 100-வது படமான ‘ஒளி விளக்கு’ படத்தில்தான் முதன்முத லில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வி.எஸ்.ராகவனுக்குக் கிடைத் தது. அதன்பிறகு, ‘எங்கள் தங்கம்’, ‘சங்கே முழங்கு’, ‘உரிமைக்குரல்’ உட்பட எம்.ஜி.ஆர் நடித்த கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை பல படங்களில் அவரோடு வி.எஸ்.ராகவன் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள். காரணம், மற்ற படங்களில் கிடைப்பதை விட, அவர் நடிக்கும் படங்களில் கூடுத லான சம்பளம் கிடைக்கும். அதோடு, பேசியபடி சக கலைஞர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா என்பதை எம்.ஜி.ஆர். உறுதிப்படுத்திக் கொள் வார்.
‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் நடிக்க வி.எஸ்.ராகவனுக்கு குறிப்பிட்ட தொகை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு தயாரிப்பு தரப்பில் இருந்து வி.எஸ்.ராகவ னுக்கு கோரிக்கை விடப்பட்டது. அவருக்கோ தர்மசங்கடம். தனது நிலையை கவிஞர் வாலியிடம் கூறினார். உடனே, வாலி ஒரு யோசனை கூறினார்.
அந்த யோசனையை வி.எஸ்.ராகவன் செயல்படுத்தினார். வாலியின்
யோசனைப்படி தயாரிப்பு தரப்பிடம் வி.எஸ்.ராகவன் ஏவிய அஸ்திரம் இதுதான். ‘‘என் சம்பளம் எம்.ஜி.ஆரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் முடிவு செய்த தொகையைவிட குறைவாக நான் வாங்கிக் கொண்டால் அவர் வருத்தப்படுவார். அவருக்கு நான் என்ன பதில் சொல்வது?’’ என்றார். மறுபேச்சு இல்லாமல் ஏற்கெனவே பேசிய சம்பளமே அவருக்கு கிடைத்தது.
வி.எஸ்.ராகவனின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். தாயாரை கவனித்துக் கொள்வதற்காக மருத்துவமனையில் வி.எஸ்.ராகவன் இருந்தபோதுதான் இயல், இசை, நாடக மன்றத்துக்கு கவுரவச் செயலாளராக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார்.
அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஒருநாள் திடீரென வி.எஸ்.ராகவன் வீட்டுக்கு வந்து அவரிடம் ஒரு பெரும் தொகையை கொடுத்து, ‘‘உங்கள் தாயாரின் மருத்துவ செலவுக்காக எம்.ஜி.ஆர். கொடுக்கச் சொன்னார்’’ என்றார். அதை ஏற்க மறுத்த வி.எஸ்.ராகவன், ‘‘இந்தப் பணத்துக்கு இப்போது அவசியம் இல்லை. என்னோட
நன்றியைத் தெரிவித்து பணத்தை திருப்பி அவர்கிட்ட கொடுத்துடுங்க’’ என்றார்.
‘நாம் கொடுக்கும் பணத்தை
மறுக்கிறாரே? நம்மை வி.எஸ்.ராகவன் நெருக்கமாக நினைக்கவில்லையோ? ’ என்று எம்.ஜி.ஆருக்கு அவர் மீது வருத்தம். அரசின் இயல், இசை, நாடக
மன்றத்தின் செயலாளர் என்ற முறையில் முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது வி.எஸ்.ராகவன் தனது நிலையை விளக்கினார்.
‘‘உங்களுக்குத் தெரியாதது இல்லை. என் தாயாரின் மருத்துவ செலவுக்கு நான் கேட்காமலேயே பெரிய தொகையை கொடுத்து
அனுப்பினீர்கள். என் தாயாருக்கு உடல்நிலை சரியாகிவிட்டது. வீட்டுக்கு வந்துவிட்டார். இனி மருத்துவ செலவு கிடையாது.
அப்படியிருக்கும்போது, தாயாரின் மருத்துவ செலவுக்காக என்று நீங்கள் அனுப்பிய பணத்தை நான் ஏற்றுக் கொள்வது சரியாக இருக்காது என்பதால்தான் திருப்பி அனுப்பினேன்’’ என்று வி.எஸ். ராகவன் கூறினார்.
அவரது விளக்கத்தை
பொறுமையாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., அவரை மனதார பாராட்டினார். உணர்ச்சிவசப்பட்ட ராகவன், ‘‘எனக்கு ஏதாவது கஷ்டம் என்றால் உங்களிடம்தான் வருவேன். வேறு யாரிடம் போவேன்?’’ என்றதும் எம்.ஜி.ஆர் அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டார்.
ஆரம்ப காலத்தில் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் உரமாகக் கொண்டே வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சக நடிகர்கள் யாரையும் மற்றவர்கள் கிண்டல் செய்வதோ, குறை கூறுவதோ பிடிக்காது. புதிய
நடிகர் களை உற்சாகப்படுத்தி வாழ்த்துவார். வி.எஸ்.ராகவனும் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்ட ஒரு படப்பிடிப்பு.
காட்சிப்படி மாடிப்படிகளில் இருந்து எம்.ஜி.ஆர். இறங்கி வரவேண்டும். அப்போது, வாசலில் வரும் தபால்காரர் ‘சார் போஸ்ட்’ என்று கூறி எம்.ஜி.ஆரிடம் தபாலைத் தர வேண்டும். தபால்காரர் வேடத்தில் நடித்தவர் புதுமுக நடிகர். ‘சார் போஸ்ட்’ என்ற இரண்டே வார்த்தைகள்தான் அவருக்கு வசனம். என்றாலும் பதற்றத்தில் இருந்தார். ‘‘தம்பி, எம்.ஜி.ஆருடன் நடிக்கிறே. ஜாக்கிரதை’’ என்று இயக்குநர் ப.நீலகண்டன் வேறு எச்சரித்ததில் அவரது பதற்றம் அதிகரித்தது.
படப்பிடிப்பு தொடங்கியது.
திட்டமிட்டபடி, எம்.ஜி.ஆர். புயலாக மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்தார். பதற்றத்தில் இருந்த தபால்காரராக நடித்த புதுமுக நடிகர், எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘‘சார் போஸ்ட்’’ என்று சொல்வதற்கு பதிலாக, ‘‘சார் பேஸ்ட்’’ என்று சொல்லிவிட்டார். செட்டில் சிரிப்பலை எழுந்தது. அதை அடக்கியபடி ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல். ‘‘நிறுத்துங்க. ஒரு நடிகர் தப்பு பண்ணிட்டா இப்படித்தான் சிரிக்கிறதா? நாம எல்லாம் தப்பே பண்ணலையா? யாரையும் கிண்டல் பண்ணாதீங்க’’ என்று வெடித்தார். செட்டில் மயான அமைதி!
பின்னர், அந்த புதுமுக நடிகரை தனியே அழைத்துச் சென்ற எம்.ஜி.ஆர்., அவரது தோளில் கைபோட்டபடி, ‘‘கவலைப்படாதீங்க. சரியா நடிங்க. உங்களால் முடியும்’’ என்று உற்சாகப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கத்தில் அந்த நடிகர் சரியாக நடித்தார். ஷாட் ஓ.கே. ஆனது. உணர்ச்சிவசப்பட்டு காலில் விழுந்த நடிகரைத் தூக்கி வாழ்த்திய எம்.ஜி.ஆரின் பண்பைப் பார்த்து வி.எஸ். ராகவன் சிலிர்த்துப் போனார்.
எம்.ஜி.ஆரின் குரல் எப்போதுமே
சமுதாயத்தில் ஏளனத்துக்கு உள்ளாகி கடை நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகத்தான் ஒலிக்கும். அது உரிமைக்குரல்!
நன்றி: இந்து தமிழ் திசை
By ஸ்ரீதர் சுவாமிநாதன்