தமிழன்பன் ’ஈரோடு தமிழன்பன்’ ஆனது எப்போது
தமிழன்பன் ’ஈரோடு தமிழன்பன்’ ஆனது எப்போது?
இப்படிப் போட்டுக்கொள்வதாலேயே சென்னிமலைக்காரர்கள் என்மீது சினம் கொள்வதற்கான நிலையை ஏற்படுத்தி விட்டதாகத் தோன்றுகிறது…. கவியரங்குகளில் கலந்து கொள்ளும்போது கலைஞர் அவர்களுக்கு என்குரலிலும் தமிழிலும் விருப்பம் உண்டு. சேலத்தில் நான் பேசிக் கொண்டிருக்கையில் அந்த வழியாகப் பயணம் செய்தவர், நின்று கேட்டு விட்டுப் போனார். பிறகு என்னைப் பற்றிக் கேட்டறிந்தார். அவர் கவியரங்கத்தில் என்னை அறிமுகம் செய்யும்போது ’ஈரோடு தமிழன்பன்’ என்று அறிமுகம் செய்தார். அது அப்படியே என்னோடு சேர்ந்து விட்டது. ஈரோடு என் பேரோடு அப்படியே வேரோடு ஒட்டிக் கொண்டது.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனுபவம் எப்படி இருந்தது?
சென்னையில் தொலைக்காட்சி தொடங்கிய 75இலேயே நான் செய்தி வாசிப்பாளராகப் போனேன். நல்ல அனுபவம். தமிழை நன்றாகச் சொல்வதற்கான வாய்ப்பாக இருந்தது. எனக்கு என்ன வருத்தமென்றால் தமிழை தமிழ்நாட்டில் நன்றாகச் சொல்பவன் தமிழன்பன் என்று சொல்கிறபோது எனக்கு வருத்தம் ஏற்படும். தமிழில் சில நல்ல சொற்களை நான் கையாள்வதற்கு வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக் கொண்டேன். செய்திகள் முடிவடைந்தது என்பதை மாற்றி செய்திகள் நிறைவடைந்தன என்று சொன்னேன். முதலில் எதிர்ப்புகள் இருந்தன. பிறகு ஒப்புக் கொண்டார்கள். பின்னர் மற்றவர்களும் மாற்றிக் கொண்டார்கள். ஆனால் பார்ப்பவர்கள் எல்லாம் செய்தி வாசிப்பவர் கவிதை படிக்கிறார் என்று சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை செய்தி வாசிப்பவன் என்ற பிம்பம் கவிஞன் என்ற பிம்பத்தை நொறுக்கி விட்டபடியால் இலக்கிய உலகத்தில் முன்பே கிடைத்திருக்க வேண்டியதைக் கிடைக்காமல் செய்ததற்காக செய்தி வாசிப்பாளன் தமிழன்பன்மீது எனக்கு கோபம் உண்டு.
தமிழன்பன் பேட்டி இணையத்தில் இருந்து எடுத்தது