ம. சிங்காரவேலர் என அறியப்படும் மலையபுரம் சிங்காரவேலு (பெப்ரவரி 181860 –பெப்ரவரி 111946) ஒரு தமிழ்நாட்டுபொதுவுடமைக் கொள்கையாளர், தொழிற்சங்கவியர், மற்றும் இந்திய விடுதலைப் போராளி ஆவார். பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக “சிந்தனைச் சிற்பி”[2] எனப் போற்றப்படுகிறார்.

பிறப்பும் தொடக்க வாழ்க்கையும்[தொகு]

சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் உள்ள அயோத்திகுப்பத்தில் பிறந்தார்.[3] இவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் பரதவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞர் ஆனார்.ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் இவருக்குப் புலமை இருந்தது.வெலிங்டன் சீமாட்டிக் கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது . அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார் . வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் வறியவர்கள் பற்றியே இவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது என்பது பலருக்கும் தெரியாது.இவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை இவரது கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார்

1918 ஆம் ஆண்டில் அவரது நெருங்கிய தோழரும், தமிழறிஞருமான திரு.வி.கலியாணசுந்தரனார் சென்னை பின்னி, கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளருக்காகச் சென்னை தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார். இவரது நெருங்கிய நண்பர், சிங்கார வேலரும் அந்த சங்கக் கூட்டங்களுக்கு வந்து தனக்கு உதவி செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதையேற்று சிங்கார வேலர் அந்தச் சங்கத்தின் செயல்பாடுகளில் முனைவான ஆர்வம் காட்டலானார்.அச்சமயத்தில் இந்த இரண்டு ஆலை(மில்)களிலும் சுமார் 14 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தொழிலாளிகளின் ஊர்வலங்களிலும் அவர் பங்கெடுத்தார். 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதியன்று ஆங்கிலேய காவல்துறை பின்னி ஆலைத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இரண்டு தொழிலாளிகளைக் கொன்றது. அவர்களின் அடக்க நிகழ்ச்சியின் போது அவர்கள் உடல்களைத் தூக்கிச் சென்றவர்களில் சிங்காரவேலரும் ஒருவராவார். அதன் பின் 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியன்று காவல்துறையினர் நடத்திய மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட ஏழு பின்னி ஆலைத் தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற கொண்ட சிங்கார வேலர் அதைக் குறித்து ஒரு உருக்கமான கட்டுரை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார்.

1922 இல் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ. டாங்கேயுடன் தொடர்பு ஏற்பட்டது. 1922 இல் எம். என். ராய் வெளிப்படுத்திய திட்டத்தால் கவரப்பட்டு, அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். 1923 இல் அவர் மே தினம் கொண்டாட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான், எல்.கே.பி.எச்.) என்கிற கட்சியைப் புரட்சிகரத் திட்டத்துடன் தொடங்கினார். ‘லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், ‘தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார். மார்ச் 1924 இல் கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் சிங்காரவேலர் குற்றம்சாட்டப்பட்டார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது

1931 ஆம் ஆண்டு பெரியார் ஓராண்டு உலகப் பயணம் மேற்கொண்ட பொழுது, தான் வரும்வரை தனது குடியரசு இதழுக்குச் சிங்காரவேலர் கட்டுரைகள் எழுதி வழிகாட்ட வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதையேற்று சிங்காரவேலர்

  • கடவுளும் பிரபஞ்சமும்
  • கடவுள் என்ற பதமும், அதன் பயனும்
  • மனிதனும் பிரபஞ்சமும்
  • பிரபஞ்சப் பிரச்சனைகள்
  • மெய்ஞான முறையில் மூட நம்பிக்கைகள்
  • மூட நம்பிக்கைகளின் கொடுமை
  • பகுத்தறிவு என்றால் என்ன?

போன்ற கட்டுரைகளை எழுதி உதவினார்.

  • இந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்)
  • உருசியாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.
  • தொழிலாளர் நலனுக்காக மே 1, 1923 இல் உழப்பாளர் உழவர் கட்சியைத் தொடங்கினார்.
  • 1925 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.
  • இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார்.
  • தமிழ் மொழிக்காகப் பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார்.
  • பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
  • பெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கம் 1930 களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது.

சிங்காரவேலர் 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் இரவுலத் சட்டத்தினை எதிர்த்தார். மேலும் 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து காந்தி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திற்கு அனைத்து வழக்குரைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதன் காரணமாக இவர் தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தும் “இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்!” என்று கூறியும் ஆங்கில அரசுக்குத் தனது எதிர்ப்பையும் காந்திக்குத் தனது ஆதரவையும் காட்டினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்சு இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர் சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். இப்போராட்டம் ஆங்கிலேய அரசையே உலுக்கியது என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார். 1927 இல் பெங்கால்-நாக்பூர் தொடர்வண்டி வேலைநிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஆகஸ்ட் 1927 இல் சாக்கோவுக்கும் வான்செட்டிக்கும் தீர்ப்பாகிய மரண தண்டனையை எதிர்த்துக் கூட்டங்களும் நடத்தினார்.1928 இல் வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னிந்தியத் தொடர்வண்டி வேலைநிறுத்தத்தை நடத்திய தலைவர்கள்மீது தொடரப்பட்ட சதி வழக்கில், அவருக்குப் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 1931ஆகஸ்ட் 1930 இல் விடுதலை செய்யப்பட்டார்.

1946ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் காலமானார். தான் மரண மடைவதற்கு முன்பு தன் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு சேர்த்து வைத்திருந்த 10 ஆயிரம் அரிய புத்தகங்கள் கொண்ட நூலகத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர் அன்பளிப்பாகக் கொடுத்தார்.

இவரைப் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் பாடல் எழுதி உள்ளார்.


சிங்காரவேலனைப்போல் எங்கேனும் கண்டதுண்டோ?”

பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்

பொய்புரட் டறியாமை பொசிந்ததும் அவனால்

சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்

தமிழர்க்குப் புத்தெண்மை புகுந்ததும் அவனால்

மூலதனத்தின் பொருள் புரிந்ததும் அவனால்

புதுவுலகக்கனா முளைத்ததும் அவனால்

கோலப் பொதுவுடைமை கிளைத்ததும் அவனால்

கூடின அறிவியல், அரசியல் அவனால்!

தோழமை உணர்வு தோன்றிய தவனால்

தூய தன்மானம் தொடர்ந்ததும் அவனால்

ஏழ்மைஇலாக் கொள்கை எழுந்ததும் அவனால்

எல்லோர்க்கும் எல்லாம் என்றுணர்ந்ததும் அவனால்!

போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி

பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!”

இவர் பிறந்து 150 வருடங்கள் நிறைவுறுவதை நினைவுகூரும் விதமாக தமிழக அரசு சிங்கார வேலர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடியது. அதன்படி 2011பெப்ரவரி 18 அன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் சிங்காரவேலர் பிறந்த நாள் விழா கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது

thanks:https://ta.wikipedia.org/wiki/

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...